PUBLISHED ON : டிச 04, 2022

தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்ல, தொழிலிலும் ஜெய்சங்கருக்கு திருப்புமுனை தந்த ஆண்டு, 1969. ஏ.சி.திருலோக்சந்தர் படம் அது. கதையில் சிவாஜிக்கு இணையாக வரும் நண்பன் கதாபாத்திரத்திற்கு, நடிப்பு ராட்சசனான சிவாஜிக்கு ஈடுகொடுக்கும் திறமை பெற்ற, பிரபலமான நடிகர் தேவைப்பட்டார்.
ஒருநாள், அதுகுறித்த பேச்சு, காலை துவங்கி பிற்பகல் வரை நீண்டது. இந்த யோசனையில், சிகரெட்களை ஊதி தள்ளினார், சிவாஜி. கடைசி சிகரெட்டை பற்ற வைத்த போது, சட்டென அவர் முகத்தில் மின்வெட்டு போன்ற பிரகாசம்.
'திரிலோக், நம்ம ஜெய்சங்கரை கேட்டுப் பாருங்களேன். சரியானவரா தெரியுது. நானும் அவர்கிட்ட பேசறேன்...' என, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தார், சிவாஜி.
நடிப்பின் பல்கலைக்கழகம் எனப்படும் சிவாஜியே தன்னைப் பரிந்துரைத்தது மகிழ்ச்சியளித்தது, ஜெய்சங்கருக்கு.
சிவாஜிக்கு நண்பனாக வரும், ராஜா என்ற அந்த கதாபாத்திரத்தில் நடிக்க, நல்ல வாய்ப்பு இருந்ததும், இரட்டிப்பு மகிழ்ச்சி. நிறைய படங்கள் ஒப்பந்தமாகி இருந்தாலும், சிவாஜி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார், ஜெய்சங்கர்.
சிவாஜி - ஜெய்சங்கர் கூட்டணி என்பதே, படத்திற்கு பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. படத்தின் கதையும், இருவரது நடிப்பும் அதை கச்சிதமாக பூர்த்தி செய்தது. 1969, புத்தாண்டு தினத்தில் வெளியான, அன்பளிப்பு படம், பெரும் வெற்றி பெற்றது.
சென்னையில், வெளியீட்டுக்கு முன்தினமே, ரசிகர்கள் திரண்டு, சமாளிக்க முடியாத நிலை உருவானதால், சில தியேட்டர்களில், ஒருநாள் முன்னதாகவே படம் திரையிடப்பட்டது.
அதாவது, அதிர்ஷ்டமும், திறமையும் இணைந்து, ஒரு மனிதனை உச்சிக்குக் கொண்டு செல்லும் காலகட்டம் அது, என்று சொல்லலாம். திரையுலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே பிரபல இயக்குனர்கள், பிரபல தயாரிப்பாளர்களின் படங்களில் இடம்பெற்றது, ஜெய்சங்கரின் அதிர்ஷ்டமே.
தங்கள் படங்களில் ஜெய்சங்கரை நடிக்க வைக்க, விரும்பி அழைத்தன, புகழ்பெற்ற நிறுவனங்கள். ஜெமினி கணேசன், சிவாஜி, எம்.ஜி.ஆர்., உள்ளிட்ட பிரபலங்களுடன் நடிக்கும் வாய்ப்பும் தேடி வந்தது.
மார்க்கெட், நடிப்புத் திறமை, இவற்றைத் தாண்டி தனிப்பட்ட குண நலன்களுக்காக, அவருடன் பணியாற்ற விரும்பினர், என்பதே உண்மை.
கடந்த, 1970ம் ஆண்டில் மட்டும், ஜெய் நடித்த பெண் தெய்வம், எதிர்காலம், காதல் ஜோதி, சி.ஐ.டி., சங்கர், வீட்டுக்கு வீடு, மாணவன், காலம் வெல்லும், கண்ணன் வருவான் மற்றும் நிலவே நீ சாட்சி ஆகிய படங்கள் வெளியாகின.
ஜெய்சங்கர் அறிமுகமான, ஆறு ஆண்டுகளில் நடித்து முடித்த படங்களின் எண்ணிக்கை 57.
இதில், வீட்டுக்கு வீடு, ஜெய்சங்கர் நடித்த முதல் நகைச்சுவை திரைப்படம். ஸ்ரீதர் யூனிட்டை சேர்ந்த பிரபல கதை வசனகர்த்தா, சித்ராலயா கோபு எழுதி, வெற்றிகரமாக நடைபெற்ற, 'திக்குத் தெரியாத வீட்டில்' என்ற நகைச்சுவை நாடகம் தான்,வீட்டுக்கு வீடு என்ற பெயரில் பின்னாளில் படமானது.
நாடகத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார், ஜெய்சங்கர். நாடகத்தின் வெற்றியால், சுந்தரம் பிள்ளை என்பவருக்கு படமாக்கும் யோசனை உதித்தது. நாடகத்தில் நடித்த ஜெய்சங்கரையே, படத்துக்கும் ஒப்பந்தம் செய்தனர்.
நாடகத்தின் சுவை கொஞ்சமும் குறையாமல் படத்தை இயக்கியிருந்தார், சி.வி.ராஜேந்திரன். படத்தின் நகைச்சுவை காட்சிகள் ரசிகர்களிடையே பெரிதும் ரசிக்கப்பட்டன. சின்ன பட்ஜெட் படமான, வீட்டுக்கு வீடு, சித்ரா திரையரங்கில், 12 வாரங்களை தாண்டி ஓடி, நல்ல வசூலை தந்தது. ஜேம்ஸ்பாண்ட் நடிகரால் சிரிக்க வைக்கவும் முடியும் என நிரூபித்தார், ஜெய்சங்கர்.
தேவர் பிலிம்ஸ் தயாரிப்பான, மாணவன் படமும், இதே ஆண்டில் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக, மதுரை சென்றிருந்தபோது, மேலுாரிலிருந்த ஒரு ரசிகரிடம், 'உங்கள் ஊர் பள்ளியில் இறுதி தேர்வு முடிந்ததா...' என்று கேட்டார், ஜெய்.
'இறுதியாண்டுத் தேர்வு நடந்து கொண்டிருக்கிறது. முதல் மூன்று இடங்கள் பெறும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, தாங்கள் ஏதேனும் பரிசு வழங்கினால் மகிழ்ச்சியாக இருக்கும்...' என்றார், ரசிகர்.
'இவ்வளவு தானே... உங்கள் ஊரில், எஸ்.எஸ்.எல்.சி.,யில் அதிக மார்க் வாங்கும் மாணவ - மாணவியர் மட்டுமின்றி, அதிக மாணவர்கள்வெற்றி பெறும் பள்ளிக்கூடத்துக்கும்நான் பரிசளிக்கிறேன்...' என்று வாக்களித்தார், ஜெய்.
இரண்டு மாதங்களுக்கு பின், தேர்வு முடிவுகள் வெளியாகின. தகவல் தெரிய வந்ததும், உடனடியாக சென்னையிலிருந்து, 'பார்சல்' மூலம் மாணவர்களுக்கும், பள்ளிக்கும் பரிசுகளை அனுப்பி வைத்தார், ஜெய்.
திரைப்படங்களில், சண்டை காட்சிகளில் அடிபடுவது சகஜம். இருப்பினும், சண்டைக் காட்சிகளில் மோசமாக விபத்துகளை சந்தித்து, உயிர் பிழைத்திருக்கிறார், ஜேம்ஸ்பாண்ட் நடிகரான ஜெய்.
அந்த வகையில், 1970ம் ஆண்டை, ஜெய்சங்கர் மறு பிறவி எடுத்ததாக சொல்லலாம். அவரது ஜேம்ஸ்பாண்ட் பட்டத்தை உறுதி செய்த படங்களில் ஒன்றான, காலம் வெல்லும் படத்திற்காக, தேக்கடி அருகே எடுக்கப்பட்ட சண்டைக் காட்சியில், மரணத்தின் எல்லை வரை சென்று, மீண்டிருக்கிறார், ஜெய்.
பாக்கு மர தோப்பில், அடுத்தடுத்த மரங்களில் ஏறி, தாவித் தாவி, எதிரிகளை துரத்திச் செல்லும், 'த்ரில்லிங்'கான காட்சி அது; 'ரிஸ்க்'கான காட்சியும் கூட. சிலிர்ப்பான அந்த காட்சியை கேமராமேன் கர்ணனின் கேமரா விழுங்கிக் கொண்டிருந்தது.
காட்சிப்படி, பாக்கு மரங்களை தாவிப் பிடித்தபடி வந்த, ஜெய்சங்கர், ஒரு மரத்தை எட்டிப் பிடித்த போது, உறுதியாக இல்லாததால் எதிர்பாராவிதமாக ஒடிந்து விழுந்தது. கர்ணன் உள்ளிட்ட படக்குழுவினர், அதிர்ச்சியடைந்தனர்.
விபரீதத்தை உணர்ந்த ஜெய், ஒரு நொடியும் தாமதிக்காமல், ஒரே தாவலில் அருகிலிருந்த மற்றொரு பாக்கு மரத்துக்கு தாவி, கெட்டியாக பற்றிக் கொண்டார். ஆனால், குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் அதை பிடித்திருக்க முடியாமல், கை நழுவி விழுந்தார்.
உயிருக்கு ஆபத்து இல்லை என்றாலும், கை, காலில் பலத்த காயங்கள். சமயோசிதமாக செயல்பட்ட ஜெய்சங்கரை பாராட்டியது, படக்குழு.
இதேபோல், இன்னொரு படப்பிடிப்பில் நடந்த, 'பகீர்' சம்பவம்...
- தொடரும்இனியன் கிருபாகரன்