
விழிப்புணர்வு சேவை!
குடும்ப நண்பர் ஒருவர், தீயணைப்பு துறையில் பணிபுரிந்து, சமீபத்தில் பணி ஓய்வு பெற்றார். அவரது பணிக் காலத்திலேயே அவ்வப்போது, பள்ளி, கல்லுாரிகளுக்கு சென்று, தீ விபத்துகள் ஏற்படும் முறைகள் மற்றும் தீ தடுப்பு வழிமுறைகள் குறித்து, தன் குழுவினரோடு விழிப்புணர்வு ஏற்படுத்துவது வழக்கம்.
பணி ஓய்வுக்குப் பிறகு, வீட்டில் முடங்காமல், பல்வேறு நிறுவனங்கள் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களை சந்தித்து, தீ விபத்து ஏற்படாமல் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தீ விபத்து ஏற்பட்டால் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்தும், செய்முறைகளோடு விளக்கம் தந்து வருகிறார்.
மேலும், தீயணைப்பு கருவிகள், அவை கிடைக்குமிடங்கள், அவற்றை பயன்படுத்தும் முறைகள் பற்றி விளக்கி, உதவி செய்து வருகிறார். ஆபத்து கால முதலுதவிகளை அனைவருக்கும் புரியும் வண்ணம், எளிமையாக கற்றுக்கொடுத்து வருகிறார்.
மாத ஊதியத்திற்காக மட்டுமே பணி என்றில்லாமல், பணி ஓய்வுக்கு பிறகும், மக்களுக்காக மனதார தொடரும் அவரது சேவை உணர்வை, அனைவருமே பாராட்டுகின்றனர். பணி ஓய்வுபெற்ற பிறகு, பல் துறையை சேர்ந்தவர்களும், அவரவர் துறை சார்ந்த வழிகாட்டல்களையும், உதவிகளையும் பொதுமக்களுக்கு தொடர்ந்து செய்யலாமே.
எஸ். அலமேலு, கள்ளக்குறிச்சி.
குப்பைகளை துாக்கி வீசாதீர்!
சமீபத்தில், விபத்தில் சிக்கி, ஐ.சி.யூ.,வில் இருந்த தோழியை பார்க்கச் சென்றேன். அவள், டூ வீலரை மெதுவாகவே ஓட்டுவாள். உறவினர்களிடம், விபத்து பற்றி கேட்டபோது, அவர்கள் கூறியது அதிர்ச்சியளித்தது.
டூ வீலரில் தோழி சென்று கொண்டிருந்த போது, எதிரே சென்ற பேருந்தில் பயணித்த யாரோ ஒருவர், பாப்கார்னை முழுமையாக சாப்பிடாமல், பாக்கெட்டோடு ஜன்னல் வழியே துாக்கி வீசியுள்ளார்.
அதில் இருந்த துகள்கள், இவள் கண்ணில் பட்டதால், தடுமாறி பேருந்து மீது மோதியுள்ளாள். விபத்தில் தலையில் அடிபட்டு, கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக கூறினர். பஸ் பயணத்தின் போது, தின்பண்டங்களை உண்ணுவது தவறல்ல. ஆனால், பேருந்து வெளியே பலர் சாலையில் வருகின்றனர் என்ற அக்கறையில்லாமல் வீசுவதால், இதுபோன்று பல விபத்துகள் ஏற்படுகின்றன. ஓடும் பேருந்தின் ஜன்னல் வழியே, குப்பைகளை வீசுவதை தவிர்த்திடுங்களேன்!
எ. ஜோதி, புதுக்கோட்டை.
ஆற்றுக் குளியலா... உஷார்!
நண்பர்கள் சிலருடன் அருவியோடு கூடிய ஆற்றுப்பகுதி ஒன்றுக்கு, சுற்றுலா சென்றார், உறவினர். முதலில் அருவியில் குளித்தவர்கள், அதன்பின், ஆற்றில் இறங்கி குளிக்கத் துவங்கினர். அப்போது, அங்கு வந்த உள்ளூர் பெரியவர் ஒருவர், 'இங்கே குளிக்காதீர்கள். உடனே இந்த இடத்தை விட்டு வெளியேறி விடுங்கள்...' என்று, எச்சரிக்கை செய்திருக்கிறார்.குழம்பிய உறவினரும், நண்பர்களும், அந்தப் பெரியவரிடம் அதற்கான காரணத்தை கேட்டனர். அந்த ஆற்றில் சிலர் மூழ்கி இறந்துள்ளனர். அவர்களின் உடல் கூட கிடைக்காமல் அல்லாடும் உறவினர்களிடம், சில ஆயிரங்கள் பணத்தை பெற்று, சில நபர்கள் ஆற்றில் நீந்தி, பாறை இடுக்குகளில் சிக்கியுள்ள உடலை, மீட்டுக் கொண்டு வந்து தந்துள்ளனர். இதை ஒரு தொழிலாகவே, அந்த நபர்கள் செய்து வந்துள்ளனர்.
தொடர்ந்து இவ்வாறு மரணங்கள் நிகழவே, சமூக ஆர்வலர்களின் புகாரின்படி, ரகசிய புலன் விசாரணையில் இறங்கினர், காவல்துறையினர். அப்போது தான் அந்த அதிர்ச்சியான உண்மை வெளிவந்தது. நன்கு மூச்சையடக்கி, நீருக்குள் ஒளிந்திருக்கும் நபர்கள், ஆற்றில் குளிக்கும் சுற்றுலா பயணியரின் காலைப் பிடித்து இழுத்து கொன்று, உடலை பாறை இடுக்குகளில் சொருகி வைத்து விடுவராம். பிறகு, பணம் பெற்று, அவர்களே தேடித் தருவது போல், எடுத்து கொடுத்து வந்துள்ளனர்.
அந்த கொலையாளிகள், இப்போது கம்பி எண்ணுகின்றனர். என்றாலும், அப்படியொரு அசம்பாவிதம் நடந்து விடாமலிருக்கவே எச்சரிக்கை செய்ததாக பெரியவர் கூற, பீதியோடு அனைவரும் வெளியேறியுள்ளனர். ஆற்றுக் குளியலுக்கு ஆசைப்படுவோர், இப்படி ஒரு ஆபத்து இருப்பதை உணர்ந்து, விழிப்புணர்வோடு இருங்கள்.
அ.ப. சங்கர், தலைக்குளம், கடலுார்.