PUBLISHED ON : ஜன 15, 2012

சில ஆண்டுகளுக்கு முன், கம்போடியாவில் உள்ள வனப் பகுதியில், மிருகங்களை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த பொறியில், ஒரு குட்டி யானை சிக்கிக் கொண்டது. படுகாயமடைந்த நிலையில் கிடந்த இந்த யானை, வனவிலங்கு ஆர்வலரான, நிக் மார்க்ஸ் என்பவரது கண்களில் பட்டதால், அதை, அவர், வனவிலங்கு சரணாலயத்துக்கு கொண்டு சென்றார். பொறியில் சிக்கியதில், யானையின் இடதுகால் பாதப் பகுதி, கடுமையாக சேதமடைந் திருந்தது. யானையால் நடக்க முடியவில்லை. சிகிச்சையின் போது, யானையின் இடது காலில், கடுமையாக சேதமடைந்திருந்த, ஏழு அங்குல பகுதி அகற்றப்பட்டது.
யானை படுத்த படுக்கையாகவே இருந்தது. இதையடுத்து, அதற்கு, செயற்கை கால் பொருத்தலாமா என, நிக் மார்க்ஸ் யோசித்தார். டாக்டர்களிடம் ஆலோசித்த போது, 'செயற்கை கால் பொருத்தலாம்; ஆனால், இது எந்த அளவுக்கு வெற்றிகரமாக இருக்கும் என்பதை உறுதியாக கூற முடியாது...' என்றனர். ஆனாலும், தைரியமாக களத்தில் இறங்கினார் மார்க்ஸ்.
கண்ணி வெடியில் சிக்கி, காலை பறிகொடுக்கும் ராணுவ வீரர்களுக்கு பொருத்தப்படுவது போன்ற, அதி நவீன செயற்கை கால் தயாரிக்கப்பட்டு, யானையின் துண்டிக்கப்பட்ட கால் பகுதியில் பொருத்தப்பட்டது; ஆனாலும், யானையை நடக்க வைக்க முடியவில்லை. தீவிர முயற்சிக்கு பின், யானை ஒத்துழைப்பு தரத் துவங்கியது. இப்போது, எழுந்து நின்று, சில அடி தூரம், தத்தி தத்தி நடக்கத் துவங்கியுள்ளது. மார்க்ஸ் இதுபற்றி கூறுகையில், 'செயற்கை காலை, தினமும் சுத்தம் செய்த பின்னரே, பொருத்த முடியும். மற்ற யானைகளைப் போல், நடக்க முடியாவிட்டாலும், விரைவில் ஓரளவாவது, நல்ல முறையில் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது...' என்றார்.
— ஜோல்னா பையன்.
