
பொதுவாக இரவில், அவரவர்களுக்கு வசதியாக இடது, வலது, நிமிர்ந்து அல்லது குப்புற படுத்த நிலையில் துாங்குவர். உங்கள் இதயம் உட்பட உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இயல்பான உறக்கம், இடது புறம் திரும்பி படுக்கும் போது ஏற்படுவதாக, மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த முறை துாக்கத்தின் காரணமாக ஏழு விதமான நன்மைகள் கிடைப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவை...
எளிதான இதய செயல்பாடுகள்
இதயம் மூலம் ரத்தத்தை, 'பம்ப்' செய்யும் பணிகள், இடது புறத்திலே நடைபெறுகிறது. நீங்கள் துாங்கும்போது கூட, இதயம் செயல்படுவதை எளிதாக்குவதுடன், சிரமமின்றி இயங்கவும் உதவுகிறது.
கர்ப்பிணி பெண்கள் துாங்கும் முறை
கர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகள், வலதுபுறம் திரும்பி துாங்க முயற்சி செய்தால், அதில் ஒன்றும் தவறில்லை. இருப்பினும், இடதுபுறம் துாங்கினால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.
அதுவும் கடைசி மூன்று மாதங்களுக்கு கிடைக்கும் நன்மைகள் ஏராளம். இந்த இடதுபுற துாக்கம், ரத்தத்தின் சுழற்சியை அதிகரிக்க உதவுகிறது. கல்லீரலை அதன் பல்வேறு செயல்பாடுகளை செய்ய அனுமதிப்பதன் மூலம், கர்ப்ப கால கூடுதல் எடையிலிருந்து காப்பாற்றுகிறது.
நிணநீர் மண்டல மேம்பாடு
உடலில் இடது பக்கம் அமைந்திருக்கும் நிணநீர் அமைப்பு, உடலிலிருந்து அசுத்தம் மற்றும் நச்சுக்களை நீக்குகிறது. இடது பக்க துாக்கம் நச்சுக்கழிவுகளை விரைவாக வெளியேற்றுவதுடன், உயிர் அணுக்களிலிருந்து வெளியேறும் புரதத்தை சேகரித்து, அவற்றை உரிய இடத்தில் சேர்க்க உதவுகிறது.
கல்லீரல் எளிதாக செயல்பட...
உடலில் உள்ள உணவு பொருட்கள் மற்றும் நச்சுக்கள் வெளியேற்றப்படும் போதோ அல்லது கல்லீரலில் சேகரிக்கப்படுவதற்கு முன், இந்த இரண்டு நிலைகளையும் சமநிலை படுத்த, இடது புற துாக்கம் உதவுகிறது.
மண்ணீரலின் செயல்பாடு
உடலில் இடதுபுறம் அமைந்துள்ள மண்ணீரல், நிணநீர் மண்டலத்தின் ஒரு பகுதி. இந்த வகை துாக்கம் மண்ணீரலுக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன், அசுத்தங்களை வடிகட்டவும் உதவி செய்கிறது.
நெஞ்செரிச்சல் ஏற்படுவதை தடுக்க...
இரைப்பை, உணவு குழாயில் ஜீரண சக்தி குறைபாடு மற்றும் அமிலம் சம்பந்தப்பட்ட பிரச்னை உள்ளவர்கள், இடதுபுறம் திரும்பி படுப்பதை வழக்கமாக்கி கொள்வது நல்லது. வயிற்றில் சேகரமாகும் பொருட்கள், மீண்டும் உணவு குழாயில் செல்வதை இப்படி படுப்பதால் தடுக்கப்படுகிறது.
சிறுகுடல் மற்றும் பெருங்குடல்
சிறுகுடல் மற்றும் பெருங்குடல் சந்திப்பில் அமைந்துள்ள வால்வு, கழிவு பொருட்களை சரியான முறையில் வெளியேற்றுவதுடன், கழிவுகள் சிறுகுடலிலிருந்து பெருங்குடலுக்கு மாற்ற இடதுபுற துாக்கம் வழி செய்கிறது.
மற்ற வகை துாக்கத்தை விட, இடதுபுறம் திரும்பி படுத்த துாக்கம் மிக சிறப்பானது என்கின்றனர், மருத்துவ வல்லுநர்கள். ஆகவே, இடது புறம் திரும்பி படுத்து துாங்கும் வழக்கத்தை தொடர்ந்து முயற்சிக்கலாம். முக்கியமாக, குறட்டையிலிருந்து விடுபடுவதுடன், ஆழ்ந்த நித்திரைக்கு உத்தரவாதம் அளிக்கிறது, இடதுபுற உறக்கம்.
முத்துவாப்பா