
அன்புள்ள சகோதரிக்கு —
நான், கணவர் மற்றும் மகன்கள் இருவர் உள்ள சிறிய குடும்பம். பெரியவன், பனியன் கம்பெனியில் டெய்லர்; சிறியவன், கோவில் சிலை, திருவாட்சி, நிலவு செட் செய்வது போன்ற வேலைகளை செய்து வருகிறான். கணவர், பாத்திர வேலை செய்து வருகிறார். கடன் வாங்கி, வீடு கட்டியிருக்கிறோம்.
இந்நிலையில், பெரியவனுக்கு, சென்ற ஆண்டு திருமணம் ஆயிற்று. எங்கள் ஜாதியில், பெண் வீட்டிலிருந்து, நகை, திருமண செலவு எதுவும் கேட்கும் பழக்கமில்லை. அவர்களின் பிரியப்படி என்ன செய்தாலும், மறுப்பு எதுவும் சொல்லாமல் ஏற்றுக் கொள்வர்.
அதேபோல், நாங்களும், நகை, கல்யாண செலவு பற்றி எதுவுமே பேசவில்லை. பெண் வீட்டாரே எங்களை அழைத்து, திருமணம் முடிந்து, ஆறு மாதத்திற்கு பிறகு, இரண்டு சவரன் நகை போடுவதாக கூறினர். அதற்கும் நாங்கள் எதுவும் கூறவில்லை.
ஒரு மாதத்தில், எங்கள் சக்திக்கு தகுந்தபடி, திருமணத்தை கோவிலில் வைத்து எந்த குறையுமின்றி நடத்தி விட்டோம். பெண் வீட்டாருக்கு எந்த செலவும் இல்லை. இந்நிலையில், மருமகள் இரண்டு மாதம், எந்த பிரச்னையும் இன்றி அமைதியாக இருந்தாள். பிறகு, அம்மா மற்றும் அக்கா வீட்டிற்கு திடீர் திடீரென்று சொல்லாமல் போய் விடுவாள். நாங்களும் எதுவும் சொல்வதில்லை.
ஒருநாள் அவர்களின் வீட்டிற்கு போனவள், ஒரு வாரமாகியும் வரவில்லை. போன் செய்தும் எடுத்து பேசவில்லை. மகன், நேரில் போய் அழைத்தபோது, 'நான் வரமாட்டேன். எனக்கு உன் கூட வாழப் பிடிக்கவில்லை...' என்று, தாலி சரடு, மிஞ்சி எல்லாவற்றையும் கழட்டி கொடுத்து விட்டாள்.
அந்த பெண்ணிற்கு நாங்கள் எந்த குறையும் வைக்கவில்லை; எங்கள் மகளாக தான் பார்த்துக் கொண்டோம். அவளே மனம் திருந்தி வருவாள் என, காத்திருந்தோம்.
திடீரென்று ஒருநாள், காவல் நிலையத்திலிருந்து அழைப்பு வந்தது. நான், கணவர், மகன் மூவரும் போனோம். அங்கு பெண்ணின் அக்கா கணவர், அம்மா, என் மருமகள் மூவரும், வரதட்சணை கொடுமை செய்வதாக, பொய் புகார் கொடுத்துள்ளனர்.
காவல் நிலையத்தில் எந்த உண்மையும் எடுபடவில்லை. இப்போது, விவாகரத்துக்கு நாங்கள் எழுதிக் கொடுத்து விட்டோம்.
'இரண்டு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும்...' என்று, மிரட்டி எழுதி வாங்கி விட்டனர். அந்த பெண்ணே பிடிக்கவில்லை என்று போய் விட்டு, பணம் கேட்டு மிரட்டுகின்றனர்.
ஏற்கனவே, வீட்டுக் கடன், கல்யாண கடன், சீட்டு, பண்ட் என்று கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறோம். இந்நிலையில், மேலும் கடன் வாங்கி அந்த பெண்ணுக்கு கொடுக்க வேண்டும். இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறோம்.
எந்த தப்பும் செய்யாததற்கு எங்களுக்கு இந்த தண்டனை. கடவுளிடம் சொல்வது மாதிரி, உங்களிடம் சொல்லி விட்டேன். இதற்கு என்ன வழி, தகுந்த ஆலோசனை கூறுங்கள்.
— இப்படிக்கு,
வெ.உமாதேவி
அன்பு சகோதரிக்கு —
பெண் வீட்டாரிடம் வரதட்சணை எதுவும் வாங்கவில்லை; திருமண செலவையும் நீங்களே செய்ததாக, கடிதத்தில் கூறியிருக்கிறாய். உண்மையை மறைத்து, நீ பொய் ஏதும் கூறவில்லையே... நீ சொல்வதை முழுக்க நம்பியே, கடிதத்திற்கான பதிலை எழுதுகிறேன்.
மருமகள் தாலியை கழற்றிக் கொடுக்க பல மறைமுக காரணங்கள் இருக்கக் கூடும்.
* மகனை விட மருமகள், அதிகம் படித்திருப்பாள். அதனால், இருவருக்கும் ஒத்து போகவில்லையோ என்னவோ?
* முறையற்ற தாம்பத்தியத்தை, மகன் முயற்சித்திருக்கலாம்
* தாம்பத்தியத்தில் முழு ஈடுபாடு காட்டாமல் இருந்திருப்பான், மகன்
* தினமும் மனைவியிடம் அவளது பிறந்தவீட்டை பற்றி தகாத வார்த்தைகள் பேசியிருக்கலாம்
* உன் இரண்டாவது மகன், அண்ணியிடம் பாலியல் குறும்பு செய்திருக்கலாம்
* புகுந்த வீட்டு உணவு, உடை, கலாசாரம் எதுவும், மருமகளுக்கு ஒவ்வாமல் இருக்கலாம்
* புகுந்த வீட்டு சிறுசிறு அதிருப்திகளை, தன் தாயிடமும், சகோதரியிடமும் மருமகள் கூற, அவர்கள் ஊதி பெரிதாக்குகின்றனரோ என்னவோ!
* சில பெண்களுக்கு, இல்லற வாழ்க்கை, அந்தமான் சிறை. அவர்கள் கட்டுபாடற்ற சுதந்திரமாய் இருக்க விரும்புவர். நாடோடி உள்ளம், கலகக்காரி வாழ்க்கை.
உங்களை காவல் நிலையத்துக்கு அழைத்த போது, உரிமையியல் வழக்கறிஞரை அழைத்து சென்றிருக்க வேண்டும். வரதட்சணை கொடுமைக்கான பிரிவு, 498ஏயில் கமிஷன் மற்றும் நீதிபதி மலிமாத் ஆலோசனைப்படி, பல மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
பொய் புகார் கூறினால், 15 ஆயிரம் ரூபாய் அபராதம். பொய் புகார் சொன்ன பெண்ணை விவாகரத்து செய்ய, கணவருக்கு முழு உரிமை. நீதிமன்றத்துக்கு வெளியே இருதரப்பும் சமாதானம் செய்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது.
நீங்கள் வரதட்சணை வாங்கியதற்கான மற்றும் வரதட்சணை கொடுமை செய்ததற்கான ஆதாரங்களை, காவல் நிலையத்தில் பெண் வீட்டார் சமர்ப்பித்தனரா?
உங்கள் வழக்கறிஞர் மூலம், புகாரை விசாரிக்கும் காவல் துறை அதிகாரியிடம் பேசி, பிரச்னையை குடும்பநல நீதிமன்றத்தில் தீர்த்துக் கொள்வதாக கூறி வந்திருக்கலாம்.
தேவையான மன உறுதி இருந்தால், வரதட்சணைக் கொடுமை வழக்கை, நீங்கள் நடத்தலாம். இரண்டு லட்சம் பணம் கொடுக்க வேண்டும் என்று, காவல் நிலையத்தில், மருமகள் வீட்டார் தனியாக எழுதி வாங்கினரா?
வழக்கு, விசாரிப்பு, வாய்தா, வழக்கறிஞருடன் மாரடிப்பு இவையெல்லாம் தேவையில்லை என நீயும், உன் குடும்பத்தாரும் நினைத்தீர்கள் என்றால், இரண்டு லட்சம் ரூபாயை மருமகள் வீட்டாருக்கு கொடுங்கள். பணம் கொடுக்கும்போது, எதிர்காலத்தில் எந்த பிரச்னையும் வராமலிருக்க எழுதி வாங்குங்கள்; பரஸ்பர விருப்பத்துடன் கூடிய விவாகரத்துக்கு மனு செய்யுங்கள்.
வீட்டு செலவை குறைத்து, வருமானத்தை அதிகப்படுத்துங்கள்; கடன்களை அடைக்க முறையாக திட்டமிடுங்கள்; உங்கள் தவறுகளை திருத்தி, உள்ளும் புறமும் மேம்படுங்கள்; மகனை, முழு உடல் பரிசோதனை செய்து கொள்ள சொல்லுங்கள்.
இரண்டு லட்சம் ரூபாய் கொடுத்து, அறிவு கொள்முதல் பண்ணியதாக மனதை சமாதானப்படுத்திக் கொள்ளுங்கள்; இறைவன் மீது பாரத்தை போட்டு, வாழ்வின் அடுத்த கட்டத்திற்கு நகருங்கள்.
— என்றென்றும் பாசத்துடன்,
சகுந்தலா கோபிநாத்.