
இங்கிலாந்து மன்னராக சார்லஸ் ஆனதும், அவரிடம் உள்ள பழக்கங்களை அறிந்துகொள்ள பலரும் விரும்பினர். அவர் பற்றி சேகரிக்கப்பட்ட சில சுவையான தகவல்கள்:
காலை உணவில் நிச்சயம் வீட்டில் தயாரான ரொட்டி, ஒரு கிண்ணம் நிறைய வெட்டப்பட்ட பழங்கள், புது பழச்சாறுகள் இருக்க வேண்டும்.
* உலகம் சுற்றப் போனாலும், இவை அடங்கிய காலை உணவு பெட்டி, அவருடனேயே செல்லும்
* சார்லஸ் செல்லும் இடங்களுக்கெல்லாம் அவருடைய படுக்கை, வீட்டு உபயோக பொருட்கள், சுவரில் மாட்டியிருக்கும் ஓவியங்கள், புகைப்படங்களும் செல்லும். துாக்கம் வரவழைக்க இவை அவசியமாம்
* பாலுடன் சேர்த்து கொறிக்கும் தானிய மணிகள், உலர்ந்த கொட்டைகள், பழங்கள் கலந்த கலவையும் எடுத்துச் செல்வார்
* மதிய உணவு சாப்பிட மாட்டார். மாறாக, 12 மணி வரை வேலை செய்து விட்டு நடப்பார். அடுத்த ஒரு மணி நேர இடைவெளியில், டீ, இரண்டு ரொட்டி துண்டுகளுக்கு இடையே வைக்கப்பட்ட இறைச்சி அல்லது வெஜிடபிள் கலவை சேர்த்த, 'சான்ட்விச்' சாப்பிடுவார். அத்துடன், 'கேக்' போன்றவையும் சில சமயம் சாப்பிடுவார். இந்த சமயத்தில், அவர் மனைவி கமிலாவும் கூடவே இருப்பார்
* சாப்பிட்ட பின், வெது வெதுன்னு இருக்கும் பாலாடை கட்டி மற்றும் பிஸ்கெட்களை விரும்பி சாப்பிடுவார்
* இரவு, 8:30 மணிக்கு உணவு. இரவு, 11:00 மணிக்கு அலுவலக அறைக்கு சென்று வேலை செய்த பின், நடு இரவுக்கு பின் துாங்கச் செல்வார்
* குளிக்கும், 'டப்'பில் பாதி தான் தண்ணீர் நிரம்ப வேண்டும்; அதுவும் வெது வெதுப்பாக இருக்க வேண்டும்
* தினமும் காலையில் டூத் பிரஷ்ஷில் ஒரு அங்குல நீளத்துக்கு பேஸ்ட்டை வைத்து தேய்ப்பார்
* செல்லும் இடங்களுக்கு எப்போதும், 'கிலினாக்ஸ்' நிறுவன, 'வெல்வெட் டாய்லெட் பேப்பர்' எடுத்துச் செல்வார்
* காலையில் அணியும் பைஜாமாவை தினமும் துவைத்து இஸ்திரி போட்டுத் தர வேண்டும்
* ஷூ லேசைக் கூட, இஸ்திரி போட்டு தான் அணிவார்
* அவருடன் எப்போதும் ஆறு விதமான தேன் செல்லும்
* சாப்பாட்டுக்கு என்னென்ன தயார் செய்ய வேண்டும் என்பதை, முன்கூட்டியே தெளிவாக கூறி விடுவார்.
'ராஜான்னா, சும்மாவா...' என்று சொல்ல தோன்றுகிறதா?
***
இங்கிலாந்தை சேர்ந்த ஆங்கில கவிஞர், ஜான் மில்டன் உலகப் புகழ் பெற்றவர். 'விசிடாஸ், பாரடைஸ் லாஸ்ட்' போன்ற புகழ்பெற்ற கவிதை நுால்களை எழுதியவர்.
ஒரு சமயம், இவருக்கு கடுமையான கண் நோய் ஏற்பட்டு, பார்க்கும் சக்தியை இழந்தார்.
ஒருநாள், கவிஞர் மில்டனும், அவரது நண்பர் ஒருவரும் உரையாடிக் கொண்டிருந்தனர்.
பேச்சினுாடே அவரது நண்பர், 'மிஸ்டர் மில்டன்... உங்கள் மனைவி மேரி, ரோஜாப் பூவைப் போல மிகவும் அழகாக இருக்கிறார்...' என்றார்.
அதைக்கேட்ட மில்டன், சிரித்தபடியே, 'அப்படியா... அது எனக்கு தெரியாது. ஆனால், அதில் உள்ள முள் அடிக்கடி குத்துவது மட்டும் எனக்கு தெரிகிறது...' என்றார்.
***
- நடுத்தெரு நாராயணன்