
அறிவாளியான பெரும் புலவர் ஒருவர், வறுமையில் வாடினார். பாண்டிச்சேரியில் வள்ளல் ஒருவர் இருப்பதை அறிந்து, அங்கு சென்றார்.
வள்ளல் வயலுக்கு சென்றுள்ளதாக, பணியாளர்கள் கூற, அங்கு சென்றார், புலவர்.
அறுவடையாகி இருந்த வயலில், கீழே கிடந்த நெல் மணிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தார், வள்ளல்.
அதைப் பார்த்த புலவர், 'என்னடா இது... நாமே, வறுமையில் இவரைத் தேடி வந்திருக்கிறோம். இவரோ, கீழே கிடக்கும் நெல் மணிகளைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறாரே...' என, நினைத்தார்.
அவரின் உள்ளத்தைப் புரிந்து கொண்ட வள்ளல், புலவரையும் அழைத்துக் கொண்டு வீட்டை அடைந்து, உணவளிக்க ஏற்பாடு செய்தார்.
இலையின் முன் புலவர் அமர்ந்ததும், தன் அறைக்குப் போய், தட்டு நிறைய பொற் காசுகளுடன் வந்து, இலையில் கொட்டினார், வள்ளல்.
திகைத்த புலவர், கேள்விக்குறியோடு வள்ளலைப் பார்த்தார்.
'என்ன புலவரே பார்க்கிறீர்... அறுவடையான வயலில் சிதறிக் கிடந்த நெல் மணிகளை, நான் எடுத்துக் கொண்டிருந்தபோது, என்னை ஏளனமாகப் பார்த்தீர்களல்லவா... இதோ, நீங்கள் விரும்பும் செல்வத்தை, அதுவும் தங்கக் காசுகளாகவே, உங்கள் இலையில் போட்டிருக்கிறேன். இதை உண்ணுங்களேன்.
'புலவரே, எவ்வளவு பொன் மணிகள் இருந்தாலும், அந்தத் தங்க மணிகளால் நேரடியாக நம் பசியைப் போக்க முடியாது. நம் உடம்புக்குள் சென்று, உடலோடு ஒன்றுபட்டு உடலாகும் பேறு, நெல் மணிகளுக்குத் தான் உண்டு. அதை எண்ணித்தான் நான், அறுவடையான வயல்களில் சிந்திக் கிடந்த நெல் மணிகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தேன்...' என்றார், வள்ளல்.
'ஐயா வள்ளலே... உணவுப் பொருளை வீணாக்கக் கூடாது என்பதற்காக, நெல்மணிகளை எடுத்துக் கொண்டிருந்ததை, நான் தவறாக எண்ணி விட்டேன். என்னை மன்னியுங்கள்...' என்றார், புலவர்.
'புலவரே... நீங்கள் உண்மையைப் புரிந்து கொண்டதே போதும். உணவுப் பொருளை வீணாக்குவது என்பது, உழவனின் உழைப்பை அவமானப் படுத்துவதாகும். இதைப் புரிந்து கொண்டால் சரி...' என்று சொல்லி, தங்கக் காசுகள் உள்ள இலையை, ஒரு பக்கமாக இழுத்து வைத்தார், வள்ளல்.
வேறு இலையைப் புலவரின் முன் போட்டு, உணவு பரிமாறினார். புலவரும் உண்டு முடித்தார்.
உண்டு முடித்த புலவரின் கைகளில், இலையில் கொட்டப்பட்டிருந்த தங்கக் காசுகளை எல்லாம், அப்படியே சிறு மூட்டையாகக் கட்டி ஒப்படைத்தார், வள்ளல்.
திருப்தியோடு திரும்பினார், புலவர். அந்தப் புலவர், ராம கவி ராயர். அவரை ஆதரித்த பாண்டிச்சேரி வள்ளல், ஆனந்தரங்கம் பிள்ளை.
பி. என். பரசுராமன்