
கவுண்டமணி பாணிக்கு மாறும், வடிவேலு!
நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் மீண்டும், 'ரீ - என்ட்ரி' கொடுத்திருக்கும், வடிவேலு, ஹீரோ, காமெடியன், குணசித்ர வேடங்கள் என, நடித்து வருகிறார். கவுண்டமணி பல படங்களில், 'ஹீரோ'களுடன் காமெடியனாக படம் முழுக்க, இன்னொரு, 'ஹீரோ' போன்றே நடித்த அதே பாணியை, தானும் கையில் எடுத்துள்ளார்.
அந்த வகையில், 'சந்திரமுகி- 2 படத்தில், படம் முழுக்க, லாரன்ஸ் உடன் இணைந்து நடிக்கிறேன். அடுத்து, விஜய் சேதுபதியுடன் நடிக்கும் படத்திலும் காமெடி கலந்த வேடத்தில் இன்னொரு, 'ஹீரோ'வாக நடிக்க உள்ளேன்.
'இனிமேல், அவ்வப்போது ஒரு படத்தில், 'ஹீரோ'வாக, நடித்துக் கொண்டே இதுபோன்ற முன்னணி, 'ஹீரோ'களுடன் இணைந்து நடிக்க, திட்டமிட்டுள்ளேன்...' என்கிறார், வடிவேலு.
— சினிமா பொன்னையா
மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜரி!
நடிகை ஸ்ருதிஹாசன், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தன் மூக்கில் அறுவை சிகிச்சை செய்திருக்கிறார். அதையடுத்து, அவரது முகத்தோற்றத்தை சிலர் கிண்டலாக விமர்சனம் செய்ததை அடுத்து, செம கடுப்பாகி விட்டார்.
'என் மூக்கில் சற்று வித்தியாசம் காட்ட வேண்டும் என்பதற்காக, அறுவை சிகிச்சை செய்தேன். இது என் தனிப்பட்ட விருப்பம். அதனால், யாரும் இதை விமர்சனம் செய்ய வேண்டாம். மேலும், என் முக தோற்றத்தை பார்த்து, 'நீ தமிழ்நாட்டு பெண் மாதிரி இல்லை; வட மாநில பெண்ணாக தெரிகிறாய்...' என்று கூறுகின்றனர், சிலர்.
'என் முக தோற்றத்தில் முழுமையான தமிழ் பெண்ணை கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே, இந்த சிறிய அறுவை சிகிச்சையை செய்திருக்கிறேன். இனிமேல், பக்கா தமிழ் பெண்ணாக, கிராமத்து வேடங்களில் நடிக்க இருக்கிறேன்...' என்கிறார்.
எலீசா
சர்ச்சையில் சிக்கிய, சிவகார்த்திகேயன்!
சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களில், ரஜினி போலவும், விஜய் போலவும் தன் நடிப்பை வெளிப்படுத்துவதை வழக்கமாக வைத்திருக்கிறார். குறிப்பாக, தற்போது அவர் நடித்துள்ள ஒரு படத்தின், 'பர்ஸ்ட் லுக் போஸ்டர்' விஜய் ஸ்டைலில் இருந்ததால், அதை பலரும் விமர்சனம் செய்தனர்.
அதையடுத்து, சிவகார்த்திகேயன் கூறுகையில், 'அவர்களது நடிப்பை பார்த்து என் நடிப்பை வளர்த்துக் கொண்டதால், என்னையும் அறியாமல் அவர்கள் சாயல் வெளிப்பட்டு விடுகிறது. கூடிய சீக்கிரமே எனக்கென்று ஒரு பாணியை உருவாக்கப் போகிறேன்.
'அதன்பிறகு, 'இது சிவகார்த்திகேயன் பாணி' என்று சொல்லும் நிலை உருவாகும். அப்போது, இந்த விமர்சனங்கள் காணாமல் போய் விடும்...' என்கிறார்.
— சினிமா பொன்னையா
துாண்டிலில் சிக்காத, பிரியங்கா மோகன்!
நடிகை பிரியங்கா மோகனிடம், 'சினிமாவில், 'டூ பீஸ், பிகினி' என்று நடித்தால் தான், முன்னணி நடிகையாக முடியும். கோடிகளில் சம்பளம் வாங்க முடியும்...' என்று, அவரை கவர்ச்சி களத்தில் இறக்கி விட திட்டமிட்டனர், சில இயக்குனர்கள்.
ஆனால், பிரியங்கா மோகனோ, 'எனக்கு அதில் ஆசை கிடையாது. குறைவான சம்பளம் வாங்கினாலும், 'டீசன்ட்' ஆன வேடங்களில் நடித்தால் போதும். அதோடு, கவர்ச்சியாக நடித்தால், ஓரிரு ஆண்டுகளிலேயே ரசிகர்கள் வெறுத்து விடுவர்.
'மேலும், குடும்பப் பெண்ணாக நடித்தால், எத்தனை ஆண்டுகள் நடித்தாலும், ரசிகர்கள் ரசித்துக் கொண்டே இருப்பர். அதனால், குடும்ப நடிகை என்ற, 'இமேஜ்' உடன் சினிமாவில் நீண்ட காலம் இடம் பிடிக்கவே ஆசைப்படுகிறேன்...' என்று சொல்லி, 'எஸ்' ஆகி விட்டார்.
எலீசா
சினி துளிகள்!
* விஜயின், 70வது படத்தை, கிரிக்கெட் வீரர் தோனி தயாரிக்க இருக்கிறார். தன் ராசி நம்பர் 7 என்பதால், அவரது, 70வது படத்தை தயாரிப்பதாகவும் கூறுகிறார்.
அவ்ளோதான்!