sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

வாழ்க்கை வாழ்வதற்கே!

/

வாழ்க்கை வாழ்வதற்கே!

வாழ்க்கை வாழ்வதற்கே!

வாழ்க்கை வாழ்வதற்கே!


PUBLISHED ON : நவ 06, 2022

Google News

PUBLISHED ON : நவ 06, 2022


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிரபலமான அந்த கட்டடத்தின், 8வது மாடியில் உள்ள, 'கோபிநாத் சாப்ட்வேர் சொலுஷன்ஸ் கம்பெனி'யின் வரவேற்பாளியிடம், தன்னை அறிமுகபடுத்திய பின், சேரில் அமர்ந்தான், கணேஷ்.

அவனையும் சேர்த்து மொத்தம், 10 பேர் நேர்முக தேர்வுக்கு வந்திருந்தனர். ஒவ்வொருவரும் போவதும், வருவதுமாக இருந்தனர்.

''மிஸ்டர் கணேஷ், எச்.ஆர்., கூப்பிடுறார்; நீங்க போங்க.''

முகத்தில் புன்னகை, நேர்த்தியான உடை மற்றும் அழகான தோற்றத்துடன் உள்ளே நுழைந்த கணேஷை பார்த்ததும், 'வாவ் என்ன ஸ்மார்ட்...' என நினைத்தாள், ரம்யா.

''வெல்கம் கணேஷ், உட்காருங்கள். உங்க சுயவிபரம் சூப்பர். இது மாதிரியான ஆளை தான், நாங்க தேடிக்கிட்டு இருக்கோம். மிகுந்த அனுபவம் மற்றும் சுவாரஸ்யமானவர். ஆமாம், நீங்க யு.எஸ்.,லேர்ந்து ஏன் வந்தீங்க?''

''என் உழைப்பும், வியர்வையும், அந்நிய மண்ணில், இதுவரை உழைத்தது போதும் என, முடிவு எடுத்து வந்துட்டேன்.''

''வாவ்... யூ ஆர் கிரேட். இறுதியாக, எம்.டி.,யுடன் நேர்முகத் தேர்வுக்கு அரை மணி நேரமாகும். காத்திருங்க,'' என்றாள்.

அமெரிக்காவில், எம்.எஸ்., முடித்து, அங்கேயே, 10 ஆண்டுகள் வேலை செய்தவன், கணேஷ். நல்ல சம்பளம், வசதியாக இருந்தும் அந்நிய மண்ணுக்கு உழைத்தது போதும் என்ற எண்ணத்துடன் குடும்பம் மற்றும் பெற்றோரை கவனிப்பதற்காக ஊர் திரும்பியிருந்தான்.

அடுத்த, 20வது நிமிடம் அழைக்கப்பட்டான், கணேஷ்.

'இன்டர்வியூ பேனலில்' ரம்யா, எம்.டி., மற்றும் கோபிநாத் கம்பெனி அட்வைசர் ராமமூர்த்தி இருந்தனர். ரம்யாவை தவிர்த்து, மற்ற இருவருக்கும் வயது, 45லிருந்து 50க்குள் இருக்கும்.

''வெல்கம் கணேஷ், உங்கள் சுயவிபரம் சிறந்ததாகவும், ஈர்க்கும் வகையிலும் இருக்கு. அதில், உங்க புத்திசாலித்தனம் தெரியுது.''

''நன்றி சார்!''

''இந்த கம்பெனியில் வேலை பார்க்கிற எல்லாரும், நேரம் காலம் பார்க்காம, வேலை செய்யணும். ஒரு முக்கியமான, 'புராஜெக்ட்'டை நீங்க கையாள தயாராக இருக்கணும்; 'இன்டர்வியூ' வருவதற்கு முன், இந்த கம்பெனி பத்தி தெரிஞ்சுருப்பீங்க...

''கோபிநாத் எம்.டி., - என் நண்பன். நாலு பேரோட ஆரம்பிச்ச இந்த கம்பெனி, கொஞ்ச நாள்ல, நண்பர்கள் விலகி போக, 24 மணி நேரமும், தன் உழைப்பை ரத்தமாக சிந்தி, இந்தியாவின் முக்கிய நகரங்களில், கம்பெனியை விரிவாக்கம் செஞ்சுருக்கார்.

''பிரபலமான மத்த கம்பெனிகளுடன் போட்டி போட்டு, வளர்ந்து வரும் நிறுவனம். அதாவது, இந்த இலக்கை அடைய, 20 ஆண்டுகள் கடுமையாக உழைத்துள்ளார். அவரின் அடுத்த இலக்கு, விரைவில், 'ஓவர்சீஸ் பிராஞ்ச்' திறப்பது தான்.

''அவரின் அறிவு கூர்மை, புத்திசாலிதனம் மற்றும் வியாபார நுணக்கங்களால் தான், இந்த கம்பெனி இப்படி வளர்ந்திருக்கு. எங்க கம்பெனியில நிறைய பேர் வேலை செய்ய பிரியப்படறாங்க. நாங்களும் வரும் நபர்களை, 'பில்டர்' பண்ணி, சேர்த்துக் கொள்கிறோம்,'' என முடித்தார், 'அட்வைசர்' ராமமூர்த்தி.

''எனக்கும் ஓ.கே.,'' என்றார், எம்.டி., கோபிநாத்.

''என்ன, 'பேக்கேஜ்' எதிர்பார்க்கறீங்க?''

சொன்னான், கணேஷ்.

மூவரும், ஆலோசித்த பின், ''எங்களுக்கு ஓ.கே., கணேஷ். மறுபடியும் நினைவுபடுத்துறோம், நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்யணும். 10 நிமிஷத்தில், 'அப்பாயின்மென்ட் ஆர்டர்' தயாராயிடும்,'' என்றார், கோபிநாத்.

''சாரி சார், உங்க, 'அப்பாயின்மென்ட் ஆர்டர்' வாங்கறதுக்கு முன், நான் சில விஷயம் பேசணும்.''

''ஓ.கே., சொல்லுங்க...'' என்றார், கோபிநாத்

''என் வயது 35, மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ளனர். அதாவது, வீடு, மனைவி மக்களுக்கு தான், என் முன்னுரிமை; அப்புறம் தான் வேலை.''

''என்ன சொல்ல வர்றீங்க?''

''எஸ் சார், சட்டபடி ஒரு நாளைக்கு, எட்டு மணி வீதம், ஐந்து நாளைக்கு, 40 மணி நேரம் தான் வேலை செய்ய முடியும். மத்தவங்க, 60 மணி நேரம் செய்யிற வேலையை நான், 40 மணி நேரத்துக்குள் முடிச்சுடுவேன்.

''ஒருவேளை, அவசர வேலை வந்தால், 'ஒர்க் பிரம் ஹோம்'ல தான் செய்வேன். நீங்க எதிர்பாக்கிற மாதிரி, காலை, 9:00 மணியிலிருந்து இரவு, 11:00 மணி வரைக்கும் வேலை செய்ய, என்னால் முடியாது.

''மனைவி, குழந்தைகளுடன் நேரம் செலவழிக்க விரும்புகிறேன். அதுல கிடைக்கற சந்தோஷம் வேற எங்கே கிடைக்கும்... காலை, 9:00 மணிக்கு ஆபீஸ் வந்தா, மாலை, 6:00 மணிக்கு வீட்டில் இருக்கணும்,'' என்றான், கணேஷ்.

''சனி, ஞாயிறு விடுமுறை இருக்கே. அப்போது குடும்பதோட வெளியே போய் சந்தோஷமா இருக்கலாமே,'' என்றார், கோபிநாத்.

''வாரத்தில் ஐந்து நாளும், ஒரே சேரில் உட்கார்ந்து, 'கேன்டீனில்' நொறுக்குத்தீனி, டீ - காபி குடிச்சு, மதிய சாப்பாட்டை புறக்கணிப்பதால், 'அல்சர்' வந்து... மன அழுத்தத்தில், இரவு, 12:00 மணிக்கு வீட்டுக்கு போனதும், ஒரு வாய் கூட சாப்பிடாம, அடிச்சு போட்ட மாதிரி அசதியில் காலை, 8:00 மணி வரைக்கும் துாங்கி...

''மறுபடியும், காலையில் சாப்பிடாமல் கிளம்பி, 10 நிமிஷம் தாமதம் ஆனா, 'டீம் லீடரின்' கோபத்தையும், திட்டையும் வாங்கிட்டு, அவசரம் அவசரமாக, 'புராஜெக்ட்' பண்ணி, தலைவலிச்சதும், 'கேன்டீனில்' டீ குடிச்சிட்டு, மறுபடியும் மதியம் சாப்பிடாம, வெறும் நொறுக்குத்தீனி, 'கோக்' மட்டும் சாப்பிட்டு...

''மாலையில், 'பர்கர்' மற்றும் டீ குடிச்சு வெள்ளிக்கிழமை வரை, இந்த அவஸ்தையை அனுபவிச்சிட்டு... 'எப்படா, வார இறுதி வரும், நல்ல துாக்கம் போடலாம்'ன்னு, நினைப்பேனே தவிர, சனி, ஞாயிறு, வெளியே போக ஆசைப்பட மாட்டேன்,'' என, ஒரே மூச்சில் சொன்னான், கணேஷ்.

மூச்சு விடாமல் கணேஷ் பேசியதை ரசித்த ரம்யா, ''இப்ப என்ன எதிர்பார்க்கறீங்க?'' என்றாள்.

''நம் வாழ்க்கையில ஒரு நோக்கம் இருக்கணும். இப்படித்தான் வாழணும்ன்னு, 'பிளான்' பண்ணணும்.''

''அப்ப உங்களுக்கு, வாழ்க்கையில் இலக்கு மற்றும் நோக்கம் இல்லையா?'' குறுக்கிட்டார், ராமமூர்த்தி.

''இருக்கு. ஆனா, நான் இப்படி வித்தியாசப்படுத்தி பார்க்கிறேன்.''

''இலக்குன்னா என்ன?'' தன் பங்குக்கு கேட்டாள், ரம்யா.

''ஸ்கூல், காலேஜ் படிக்கிறது; அப்புறம் நல்ல வேலை, சம்பளம், பொழுது போக்கு, விளையாட்டு, 'டிவி' பார்ப்பது; ஆண்டுதோறும், 'டூர்' போய் சந்தோஷமா இருப்பது. எனக்கு மட்டுமல்ல, எல்லாருக்கும் மேல சொன்ன இலக்கை அடையறது, அவ்வளவு சுலபமான வேலை கிடையாது. கஷ்டப்பட்டு உழைச்சு தான் இலக்கை அடையணும்.''

''இதை நீங்க அடையணும்ன்னு இன்னும் போராடிக்கிட்டு இருக்கீங்க... ஆம் ஐ கரெக்ட்!''

''எல்லாருடைய வாழ்க்கையிலும் இலக்கு இருக்கணும்; அதே சமயம், வாழ்க்கையின் நோக்கம் என்னவென்று தெரியணும். என் வாழ்க்கையில் இலக்கை அடைஞ்சாச்சுன்னு நினைக்கிறேன்.

''அந்நிய நாட்டில் உழைப்பை கொடுத்து, அவனை பணக்காரன் ஆக்கி, என் உடம்பை கெடுத்து, மன உளைச்சல் ஆனது போதும். 'லேட்டஸ்ட் டெக்னாலஜி அப்டேட்' பண்ணி வைச்சிருக்கேன். வேலையே கிடைக்கா விட்டாலும் கவலைப்பட மாட்டேன்.

''மூளை தான் என் மூலதனம். எப்படியாவது பொழச்சுக்க வழி கிடைக்கும். இப்போ என் நோக்கம் வீடு, மனைவி மக்கள சந்தோஷமா வைச்சுகிறது தான். உங்க குடும்பத்துக்கும், குழந்தைகளுக்கும், நீங்க கொடுக்கும் அன்பளிப்பு என்னவாக இருக்கும்?'' என்றான், கணேஷ்.

மூவரும் ஒரு நிமிடம் அதிர்ச்சியாகி, அமைதியாயினர்.

''மனைவிக்கு பிடித்த நகைகள் வாங்கி கொடுப்பதா, பையனுக்கு, 'பைக்' வாங்கி கொடுப்பதா, குழந்தைகளுக்கு வித விதமான, 'டிரஸ்' வாங்கி கொடுப்பதா, வீடு வாங்குவதா... இல்லவே இல்லை,''

மூவரும் ஒருமித்த குரலில், 'பின்ன என்ன?' என்றனர்.

''உங்க ஆரோக்கியம் தான், அவங்களுக்கு நீங்க கொடுக்கிற அன்பளிப்பு. சிலர், இலக்கு இலக்குன்னு உழைச்சு, எந்த நோக்கமும் இல்லாம இருப்பாங்க. அதனால் தான், ஐ.டி.,யில வேலை பார்க்கறவங்க, மன உளைச்சலுக்கு ஆளாகி, மனநல மருத்துவரிடம், 'தெரபி' எடுக்கிற நிலைமையில் இருக்கோம். அதையும் கம்பெனி செய்யுது.

''இயற்கை, மனிதனுக்கு தேவைக்கு தான் கொடுத்து இருக்கே தவிர, பேராசைக்கு இல்லை. கார்பரேட் உலகத்தில், நீ செய்யற வேலை வேற, நீ வேற இல்லை என்று உழைப்பாளிகளை மூளை சலவை செஞ்சு, உற்பத்தியை பல மடங்கு தந்திரமாக பெருக்கி கொள்ளும் போக்கு தான், இப்ப நடந்துக்கிட்டு இருக்கு.

''அநியாயமா சம்பாதிச்சா, அமைதியையும், நிம்மதியையும் இழக்க வேண்டிருக்கும். உங்க கம்பெனியில், நீங்க சொல்ற இலக்கை அடைய, ஒவ்வொரு ஊழியரும் மன அழுத்தத்துடன் வேலை செய்ய வேண்டி இருக்கு.

''என்ன தான் சம்பளம், ஊதிய உயர்வு கொடுத்தாலும், ஆரோக்கியத்தை உங்களால் தர முடியுமா?'' என்றான், கணேஷ்.

இப்படி விளக்கமாக சொல்ல சொல்ல, எச்சில் முழுங்க சிரமப்பட்டார், கோபிநாத். முகம் வியர்த்து கொட்டியது. முகத்தை துடைத்த பின் சமாளித்து, கை தட்டியபடி, ''வெல்டன் கணேஷ்... உங்க பேச்சில் உண்மை, நேர்மை, சமூக பார்வை எல்லாம் எனக்கு தெரிஞ்சுது.

''இந்த சின்ன வயசுல, வீடு, மனைவி, குழந்தைகள் தான் என் உலகம், அவங்க சந்தோஷம் தான் முக்கியம். அதே சமயம், என் உடம்பையும், மூளையையும் அதிகம் நேரம் கெடுத்துக்காமல் வாழ்க்கை வாழ்வதற்கே என்று தைரியமாக சொன்ன நீங்க, இலக்கு மற்றும் நோக்கம் இரண்டையும் கையில வெச்சுருக்கிற ஒரு ஜெம். நீங்க, இங்க வேலையில் சேருங்க. உங்க விருப்பப்படி பணியாற்றுங்க,'' என்றார், கோபிநாத்.

''இவ்வளவு நேரம் என்னை பேச வைத்து, என் கருத்துக்கும், பேச்சுக்கும் மரியாதை கொடுத்த உங்களுக்கு நன்றி சார்!''

கணேஷ் விடை பெற்ற அடுத்த நொடி, அவன் பேசிய வார்த்தைகளை மீண்டும் ஒரு நிமிடம் யோசித்தார், கோபிநாத்.

கணேஷ் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும், தன்னை சம்மட்டியால் அடித்தது போன்று இருந்தது கோபிநாத்துக்கு. 'பிசினஸ், பிசினஸ்' என்று அலைந்து, 40 வயதுக்கு மேல், திருமணம் செய்து, குடும்பம், குழந்தைகளை, கவனிக்க முடியாமல் போனதும், குழந்தைகள் தன் மீது வெறுப்பு காட்டியதும் நினைவுக்கு வந்தது.

மனைவியை சந்தோஷமா வைத்து கொள்ள முடியாத இயலாமையைக் காரணம் காட்டி, தனக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருப்பதும், அதனால், மன உளைச்சலுக்கு ஆளாகி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் மற்றும் 'கொலஸ்ட்ரால்' வந்ததும் நினைவுக்கு வந்தது.

'கணேஷ் சொன்ன மாதிரி, என் குடும்பத்துக்கு ஆரோக்கியம் என்ற வெகுமதி கொடுக்க தவறி விட்டேன். வாழ்க்கையையும், இளமையையும் தொலைத்து விட்டேன். இனி, வாழ்க்கை வாழ்வதற்கே...

'என் குடும்பத்தின் சந்தோஷமே, இனி என் பெரிய நோக்கம்...' என்று நினைத்தவாறே, மனைவியிடமும், குழந்தைகளிடமும், மன்னிப்பு கேட்டு அவர்களை அழைத்து வர, மாமனார் வீட்டுக்கு காரில் கிளம்பினார், கோபிநாத்.

எஸ்.ஸ்ரீவித்யாவயது: 42.

படிப்பு: எம்.பி.ஏ.,பணி: ஜி.எம்., எச்.ஆர்., - தனியார் நிறுவனம்சொந்த ஊர்: மன்னார்குடிஇவரது முதல் படைப்பான இச்சிறுகதைக்கு ஆறுதல் பரிசு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.கதைக்கரு பிறந்த விதம்: எனக்கு மிகவும் ஆர்வமூட்டி துாண்டுகோலாக அமைந்தவர், என் அப்பா. சொந்த அனுபவத்தை பதிவு செய்யச் சொல்லி ஆர்வப்படுத்தியதில் பிறந்த கதை.






      Dinamalar
      Follow us