sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

எதிர்பார்ப்புகள்!

/

எதிர்பார்ப்புகள்!

எதிர்பார்ப்புகள்!

எதிர்பார்ப்புகள்!


PUBLISHED ON : நவ 03, 2013

Google News

PUBLISHED ON : நவ 03, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொடைக்கானல் மலையில், அந்தக் கார், சீரான வேகத்தில், இறங்கிக் கொண்டிருந்தது. சுற்றிலும் தெரிந்த, பசுமை படர்ந்த மலைத்தொடர்களை ரசித்தபடி, பயணம் செய்து கொண்டிருந்த ராகவன், டிரைவரிடம்...

''சுப்பு... வண்டியை, ஒரு ஓரத்தில், ஓரங்கட்டி நிறுத்துப்பா. பாத்ரூம் போய்ட்டு போகலாம்,'' என்றார்.

கொடைக்கானல் பள்ளி ஒன்றில், ஹாஸ்டலில் தங்கிப் படிக்கும் மகளை பார்த்துவிட்டு, சேலத்துக்கு திரும்பிக் கொண்டிருந்தார் ராகவன்.

வண்டியில் இருந்து இறங்கியவர், சிறிது தூரத்தில் தெரியும் பள்ளத்தாக்கை நோக்கி, பெரியவர் ஒருவர் நடப்பதைப் பார்த்து, துணுக்குற்றார்.

''சுப்பு... அங்கே பாரு. ஒரு வயசானவரு, அந்தப் பள்ளத்தாக்கை நோக்கி போய்ட்டிருக்காரு. ஏதோ விபரீதமாக நடக்கப் போகுதுன்னு நினைக்கிறேன். சீக்கிரம் போ, அந்த பெரியவரை தடுத்து, இங்கே கூட்டிட்டு வா,'' என்று, பரபரத்தார்.

சுப்பு வேகமாக நடந்து, அந்தப் பெரியவரை அணுகி, அவருடன் வாக்குவாதம் செய்தபடி, பெரியவரின் கையை, வலுக்கட்டாயமாக பிடித்து, அழைத்து வருவதைப் பார்த்து, நிம்மதி பெருமூச்சு விட்டார் ராகவன்.

''ஐயா, நீங்க நினைச்ச மாதிரி, இந்தப் பெரியவர், தன் உயிரை மாச்சுக்கத்தான், பள்ளத்தாக்கை நோக்கி போயிருக்காரு. நல்லவேளை காப்பாத்தியாச்சு,'' சுப்பு சொல்ல, தன்னருகில், வாடிய முகத்துடன் நிற்கும் அந்தப் பெரியவரை பார்த்தார் ராகவன். பெரியவரின், கண்கள் கலங்கியிருந்தன.

''பெரியவரே... உங்க வயசுக்கு, நீங்க இப்படி ஒரு முடிவுக்கு போகலாமா... நல்லவேளை, அந்தக் கடவுள் கருணையால் தான், நாங்கள் உங்களை பார்த்திருக்கிறோம்.''

''மனசு நொந்து போயி, உயிரை விட துணிஞ்ச என்னை, ஏன் காப்பாத்தினீங்க... இன்னைக்கு இல்லாட்டியும், நாளைக்கு, இது நடக்க தான் போகுது,'' என்று, விரக்தியுடன் சொன்னார் பெரியவர்.

''உங்களுக்கு எழுபது வயசு இருக்கும்ன்னு நினைக்கிறேன். உங்க வயசுக்கு, உங்களுக்கு எவ்வளவு அனுபவங்கள், மன முதிர்வு ஏற்பட்டிருக்கணும். நீங்க, இப்படி ஒரு தப்பான முடிவுக்கு வரலாமா?''

''வாழ்க்கையில் எல்லா நல்லது கெட்டதுகளையும் பார்த்து, சமாளிச்சு வாழ்ந்தவன்தாம்பா. வயசான காலத்தில், ஒதுங்க இடம் இல்லாமல், தவிக்க விட்டுட்டாங்க, நான் பெத்த பிள்ளைங்க. என்னை, வேண்டாத பொருளா, நினைக்கிறதை, பொறுக்க முடியாமத்தான், வீட்டை விட்டு புறப்பட்டு வந்துட்டேன். இனி, நான் வாழ்ந்து என்ன பிரயோசனம். அதான், என்னைப் படைச்ச கடவுள்கிட்டேயே போகலாம்ன்னு முடிவு செய்திட்டேன். தயவு செய்து என்னைத் தடுக்காம, நீங்க வந்த வழி போங்க. நான் வரேன்.''

''பெரியவரே ஒரு நிமிஷம்... சாகணுங்கற முடிவுக்கு வந்துட்ட உங்களை, என்னால தடுக்க முடியாது. நீங்க சொன்ன மாதிரி, இன்னைக்கு இல்லாட்டியும், நாளைக்கு அந்த முடிவுக்கு தள்ளப்படுவீங்க. ஆனா, அதுக்கு முன்னாலே, எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா...''

பெரியவர், ராகவனை புரியாமல் பார்த்தார்.

''நான் ஏழைப் பிள்ளைங் களை வச்சு, ஒரு ஹாஸ்டல் நடத்திட்டு வரேன். அவங்க, படிப்பை கவனிக்கும் பொறுப்பை எடுத்து, படிக்க வைக்கிறேன். என்கிட்டே வேலை பார்த்தவர், இரண்டு மாச விடுமுறையில், சொந்த ஊருக்கு போயிருக்காரு. அவர் வர்ற வரைக்கும், உங்களால அந்த பொறுப்பை ஏத்துக்க முடியுமா? ஒண்ணும் பெரிய வேலை இல்லை. அந்த பிள்ளைகளுக்கு துணையா, காவலாக அவங்களோடு இருக்கணும். எனக்கும் உதவியாக இருக்கும். உங்களுக்கும் சாகறதுக்கு முன், ஏதோ ஒரு உபகாரம் செய்தோம்ங்கிற திருப்தி கிடைக்கும். இரண்டு மாசத்துக்குப் பிறகு, உங்க விருப்பப்படி, நீங்க, எங்க வேண்டுமானாலும் போங்க. நான் தலையிட மாட்டேன். என்ன சொல்றீங்க?''

''வயசான நான், என்ன உபகாரம் செய்ய முடியும். என்னவோ, நீங்க சொல்றதைக் கேட்கும்போது, நம்மால முடிஞ்ச நல்லதைச் செய்துட்டு போகலாம்ன்னு தான் தோணுது. இரண்டு மாசம் தான் இருப்பேன். அதுக்குப் பிறகு, என்னை, கட்டாயப்படுத்தக் கூடாது,'' என்றார்.

''ஆகட்டும் பெரியவரே, உங்க விருப்பம். காரில் ஏறுங்க.''

'தாத்தா... நீங்க ரொம்ப நல்லவராக இருக்கீங்க. இவ்வளவு நேரம், எங்களை விளையாட அனுமதிச்சீங்க. ரொம்ப தாங்க்ஸ் தாத்தா...' குழந்தைகள் பெரியவரைச் சுற்றி நின்று, தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

''விளையாடறது ரொம்ப நல்லது. போயி, கை கால் கழுவிட்டு வாங்க. படிக்க ஆரம்பிக்கணும். ஒழுங்கா எல்லாத்தையும் படிச்சு முடிச்சா, ராத்திரி துாங்கறதுக்கு முன், எல்லாருக்கும் அரிச்சந்திரன் கதை சொல்வேன்.''

'சரி தாத்தா நீங்க சொல்றபடியே செயறோம்...' என்றனர், கோரசாக.

அவர் அருகில், ஒரு சிறுவன் வந்து,

''தாத்தா... நான் நல்லா படிச்சு, பெரிய வேலைக்குப் போய், கஷ்டப்படற எங்க அப்பா, அம்மாவை காப்பாத்துவேன் தாத்தா,'' என்றான்.

அவனைப் பார்த்து, விரக்தியாக சிரித்தார் பெரியவர்.

''பெரியவரே... இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை. இங்க இருக்கிற பிள்ளைகளை அவங்க பார்க்க, பெத்தவங்க வருவாங்க. எல்லாரையும் மெயின் ஹாலில் உட்கார வைங்க. வந்து பார்த்துட்டு போகட்டும். அவங்க எல்லாருமே கூலித் தொழிலாளிங்க. தங்களைப் போல் தங்கள் பிள்ளைகளும் கஷ்டப்படாம, படிச்சு முன்னுக்கு வரணும்ங்கற எண்ணத்தோடு, பிள்ளைகளைப் பிரிஞ்சு இருக்காங்க.''

''நல்லா வந்து பார்க்கட்டும். பிள்ளைகளுக்கும், பெத்தவங்களை பார்த்த திருப்தி கிடைக்கும். சின்னஞ்சிறுசுங்க, படிப்புக்காக பெத்தவங்களை பிரிஞ்சு இருக்குதுங்க,'' என்று கூறினார் பெரியவர், உண்மையான பரிவுடன்.

பிள்ளைகளின் பெற்றோர், தங்களால் முடிந்த உணவுப் பண்டங்களை வாங்கி வந்து கொடுத்து, பிள்ளைகளை பார்த்து சந்தோஷத்தோடும், அன்போடும் பேசிக் கொண்டிருந்தனர். அதையெல்லாம் பார்த்தபடி, மெல்ல நடந்து வந்தார் பெரியவர்.

''தாத்தா... இங்க வாங்களேன்...''

அழைக்கும் குரல் கேட்டுத் திரும்பினார். அன்று ஒரு நாள், 'படிச்சு வேலைக்குப் போய், அப்பா, அம்மாவைக் காப்பாத்துவேன்' என்று, உறுதிமொழி சொன்ன, அந்தச் சிறுவன், தன் பெற்றோருடன் அமர்ந்திருந்தான்.

பெரியவர் அவன் அருகில் சென்றார். அவரைப் பார்த்து, ''தாத்தா... இவங்க தான், எங்க அப்பா, அம்மா,'' என்று, புன்னகையுடன் சொன்னான்.

இருவரும் எழுந்து, வணக்கம் கூறினார், ''உங்க பையன் ரொம்ப புத்திசாலி. நல்லா படிச்சு முன்னுக்கு வருவான். இந்த வயசிலேயே, தான் படிச்சு வேலைக்குப் போயி, பெத்தவங்களை கஷ்டப்பட விடாம காப்பாத்தணுங்கற நல்ல எண்ணம், அவன் மனசில் இருக்கு. நீங்க கொடுத்து வச்சவங்க. உங்களை நல்லபடியா பார்த்துக்குவான்,'' என்றார் பெரியவர்.

''அட போங்க சாமி. அதையெல்லாம் யார் எதிர்பார்த்தா. நாங்க தான் படிப்பு வாசனை இல்லாம, இப்படி கஷ்டப்பட்டு உழைக்கிறோம். எங்க பிள்ளையாவது நல்லா படிச்சு, அரசாங்க வேலை பார்க்கணும் சாமி. அதுக்காகத்தான், ஒரே பிள்ளையை பிரிஞ்சு, காட்டிலேயும், மேட்டிலேயும் கஷ்டப்படறோம். நாளைக்கு, இவன் எங்களை வச்சு காப்பாத்துவான், சோறு போடுவான்கிற எண்ணமோ, எதிர்பார்ப்போ எங்ககிட்ட இல்லை சாமி. அப்படி எதிர்பார்த்தா கடைசியில விரக்தியும், வேதனையும்தான் மிஞ்சும். ஏதோ அதுங்களை நல்வழிப்படுத்திட்டா போதும். கடவுள் எங்களுக்குக் கொடுத்த வாழ்க்கையை, திருப்தியா வாழ்ந்துட்டுப் போயிடுவோம். முடிஞ்சா, நாலு பேருக்கு நல்லது செஞ்சுட்டு போயிட்டே இருப்போம். அவ்வளவுதான் சாமி, மனுஷ வாழ்க்கை.''

யதார்த்தமாகப் பேசும், அந்தக் கிராமத்துப் பெண்ணை, வியப்புடன் பார்த்தார் பெரியவர்.

''பெரியவரே... உங்களுக்கு ரொம்ப நன்றி. இந்த இரண்டு மாசமா, இங்க இருக்கிற பிள்ளைகளை, அன்பாக, அனுசரணையாக உங்க பேரப் பிள்ளைகளைப் போல நல்லா பார்த்துக்கிட்டீங்க. லீவிலே போயிருந்தவர் வந்துட்டாரு. இனி, உங்க உதவி தேவையில்லை. நீங்க போகலாம்.''

''தம்பி... நான் எங்கேயும் போறதா உத்தேசமில்லை. கடைசி காலம் வரை, இந்த காப்பகத்திலேயே, இந்தப் பிள்ளைகளுக்கு துணையாக இருந்திடறேன்பா. என்னாலும் நாலு பேருக்கு உபயோகமாக இருக்க முடியுங்கிற திருப்தி கிடைக்குது. எதிர்பார்ப்புகள் தான் எனக்கு ஏமாற்றத்தையும், விரக்தியையும் கொடுத்திருக்கணும்ன்னு புரிஞ்சுக்கிட்டேன். என் கடமைகளை முடிச்சுட்டேன். கடவுள் கொடுத்த இந்த உயிரை, அவராக எடுத்துக்கற வரைக்கும் நாலு பேருக்கு உபகாரமாக வாழ்ந்துட்டுப் போறேன். எனக்கு அந்த வாய்ப்பை தருவியாப்பா,'' என்றார்.

மனம் நெகிழப் பேசும், அந்தப் பெரியவரின் கைகளை, அன்போடு பற்றிக் கொண்டார் ராகவன்.

- பரிமளா ராஜேந்திரன்






      Dinamalar
      Follow us