sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 25, 2025 ,ஐப்பசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கண்தானம்!

/

கண்தானம்!

கண்தானம்!

கண்தானம்!


PUBLISHED ON : மார் 10, 2019

Google News

PUBLISHED ON : மார் 10, 2019


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்ணப்பன் எனும் வேடன், கடவுள் மீதான தீவிர பக்தியால், அவனுடைய கண்களை ஒவ்வொன்றாய் தோண்டி எடுத்து, கடவுளின் சிலைக்கு வைப்பதாக புராணத்தில் படித்திருக்கிறான், ராமமூர்த்தி.

பாடப் புத்தகத்தில், கண்ணப்ப நாயனார் சரிதமாக அதை வாசித்தபோது, பிரம்மிப்பாக இருந்தாலும், பின்னாளில் அதை மூட பக்தி என்று கடந்து வந்து விட்டான்.

ஆனால், சமீபத்தில், நிஜமாகவே தான் உயிரோடு இருக்கும்போதே, தன்னுடைய கண்களை தோண்டி எடுத்து வேறு யாருக்காவது பொருத்தும்படி மன்றாடிய மூதாட்டியை, அவனால் அத்தனை சுலபமாக கடந்து வர முடியவில்லை.

மதுரையில் உள்ள பிரபல கண் மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக போயிருந்த போது, அந்த மூதாட்டியை சந்தித்தான், ராமமூர்த்தி. வரவேற்பறையில் இருந்த இளம்பெண், அந்த மூதாட்டியை சமாளிக்க முடியாமல் தடுமாறி கொண்டிருந்தாள்.

மூதாட்டிக்கு, 70 வயது இருக்கும். அணிந்திருந்த புடவை அழுக்காக இருந்தாலும், அவளின் உடலும், மனமும் ஆரோக்கியமாக இருப்பதாகவே தோன்றியது.

'டாக்டர்கிட்ட, என் கண்ணு ரெண்டையும் தோண்டி எடுத்து, அதை, கண்ணு தெரியாதவங்களுக்கு வைக்கச் சொல்லு தாயி...' என்று, சொல்லிக் கொண்டிருந்தாள், மூதாட்டி.

'அப்படியெல்லாம் செய்ய முடியாது, பாட்டி... பெரிய டாக்டர், 'ரவுண்ட்ஸ்' வர்ற நேரம்... சத்தம் போடுவார்... சொன்னா புரிஞ்சுக்குங்களேன்...' என்று அழாத குறையாக, அவளிடம் மன்றாடினாள், இளம்பெண்.

'ஒருவேளை, அந்த அம்மா, கண் தானம் பண்ண விரும்புறாங்களோ என்னவோ... அவங்களா, ஆர்வமா வர்றதை ஏன் தடுக்கறீங்க...' என்றான், ராமமூர்த்தி.

'அட, நீங்க வேற சார்... உயிரோட இருக்கும்போதே, அவங்க கண்களை தோண்டி எடுத்துக்க சொல்றாங்க... இங்க பல முறை வந்துட்டாங்க... ஒவ்வொரு முறையும், நானும் முடியாதுன்னு திருப்பி அனுப்பினாலும், மறுபடியும் மறுபடியும் வந்து நிக்கிறாங்க...' என்று அலுத்துக் கொண்டாள்.

ஆச்சரியமாக இருந்தது. இவளிடம் பேசி பார்த்தால், எழுதுவதற்கு மிகவும் சுவாரஸ்யமான கதை ஒன்று தேறும் போலிருந்தது, ராமமூர்த்திக்கு.

தமிழில் மட்டுமே கதை எழுதி, ஜீவித்து விட முடியும் என்ற, தற்கொலைக்கு சமமான முடிவை, 40 வயதில் எடுத்திருந்தான். நான்கைந்து புனை பெயர்களில் கதை, கவிதை, கட்டுரைகள் எழுதினாலும், வயிற்றுப்பாட்டுக்கே வருமானம் இல்லாத கஷ்ட ஜீவனம் தான்.

ஆனாலும், எழுதுவதில் உள்ள சந்தோஷத்திற்காகவும், புத்தகங்களில் வெளியாகி அதை பார்க்கும்போது, மனதில் பொங்கும் போதைக்காகவும், அதை மிகவும் மகிழ்ச்சியாக ஏற்று, வாழ்ந்து கொண்டிருந்தான்.

அவனுடைய, 15வது வயதிலிருந்தே கண்ணாடி அணிந்தான், ராமமூர்த்தி. 9ம் வகுப்பு படிக்கும்போதே, வகுப்பில், ஆசிரியர் கரும்பலகையில் எழுதும் எழுத்துக்கள் துல்லியமாக தெரியாமல் இருந்தபோதும், அவன் அதை பெரிது படுத்தியதில்லை.

ஆனால், சினிமா பார்க்கும்போது, அதுவும் சண்டை காட்சிகளின்போது, அடி வாங்குவது, எம்.ஜி.ஆரா, நம்பியாரா என்று தெளிவாக தெரியாமல், குழப்பம் வந்தபோது தான், அம்மாவிடம் சொன்னான்.

'அய்யய்யோ... மாரியாத்தா, காளியாத்தா... உங்களுக்கு மாவிளக்கு போட்டேனே... கண் மலர் வாங்கி படைச்சேனே... என் பிள்ளைய இப்படி குருடாக்கிட்டீங்களே... உங்களுக்கெல்லாம் கண்ணில்லையா...' என்று பலவாறு புலம்பினாள், அம்மா.

மதுரையிலிருந்த பிரபல கண் மருத்துவமனைக்கு, ராமமூர்த்தியை அழைத்து போய், கண்ணை சோதித்து, கிட்டப் பார்வைக்கு, கண்ணாடி அணிவித்து, ஊருக்கு அழைத்து வந்தார், மகாலிங்கம் மாமா.

ஆயிற்று... 40 ஆண்டுகளுக்கு மேலாக கண்ணாடியுடனேயே வாழ்ந்து பழகி விட்டான். ஆனால், சமீப நாட்களில் எந்த, 'பவர் லென்சு'க்கும் அவனுடைய பார்வை பளிச்சிடவில்லை. கண்ணில் வேறு ஏதோ பெரிய பிரச்னை என்று உணர்ந்தவன், மதுரைக்கு கிளம்பினான்.

அங்கு, கண்களை பரிசோதித்து, 'இரண்டு கண்களிலும் புரை வளர்ந்து இருக்கிறது. முதலில் மிகவும் மோசமாக புரை வளர்ந்திருக்கும் வலது கண்ணில், 'ஆபரேஷன்' செய்து, செயற்கை, 'லென்ஸ்' பொருத்தி விடலாம். ஆபரேஷனுக்கு முதல் நாள், மருத்துவமனையில், 'அட்மிட்' ஆக வேண்டும். யாராவது ஒருவர் உடன் இருக்க வேண்டும்...' எனக் கூறினர்.

அது தான் பெரிய பிரச்னையாக இருந்தது, ராமமூர்த்திக்கு.

அவனுடன் இப்போது யாரும் இல்லை. அவன், எழுத்தாளனாய் வாழ்ந்துவிட தீர்மானித்து, வேலையை உதறியதுமே, அவன் மனைவி அதை ஏற்கவில்லை.

'ஏன்... என் வருமானத்தில் ஒட்டுண்ணியாய் வாழப் போறியாக்கும்...' என்று சண்டை போட்டாள். ராமமூர்த்தி பிடிவாதமாக இருக்கவும், அவனிடமிருந்து விவாகரத்து வாங்கி போய் விட்டாள்.

ஆனால், இப்போதும் இருவருக்கும் சுமுகமான உறவு இருக்கிறது. எங்காவது பார்த்தால், இருவரும் ஒருவருக்கொருவர் நலம் விசாரித்து கொள்வர். அவளிடம்

போய் சொன்னால், ஆபரேஷனுக்கு பணமும் கொடுத்து, ஒருநாள் மருத்துவமனையில் வந்து தங்கியும் இருப்பாள். ஆனால், இப்போதைய அவள் புருஷனுக்கு தெரிந்தால், அது, அவளுக்கு பிரச்னையாகி விடும்.

ராமமூர்த்தியுடன் படித்த நண்பன் ஒருவன், கோயம்புத்துாரில் இருக்கிறான். அவன் தான், ராமமூர்த்திக்கு அவ்வப்போது பண உதவிகள் செய்து, பட்டினி கிடக்காமல் பார்த்துக் கொள்வான். அவனிடம் தான், ஆபரேஷனுக்கு பணம் வாங்க போகிறான். ஆனால், அவன், ஒவ்வொரு நிமிஷத்தையும் பணமாக பாவித்து ஓடிக் கொண்டிருப்பவன். அவனை மருத்துவமனையில் தங்க வைப்பது உசிதமல்ல.

தன் மீது அக்கறை காட்டுவதற்கு யாரும் இல்லாமல் போகிற வாழ்வென்பது, மிகவும் அவலமானது தான் என்று யோசித்த, ராமமூர்த்திக்கு துக்கம் பொங்கியது.

கண்புரை ஆபரேஷனின் போது, தன்னுடன் யாரை இருக்க சொல்லலாம் என்று, அவன் யோசித்துக் கொண்டிருந்தபோது தான், மூதாட்டிக்கும், வரவேற்பறை பெண்ணிற்கும் நடந்த உரையாடல், அவன் காதில் விழுந்து, அவர்களிடம் சென்றான்.

''என் கூட வாங்க பெரியம்மா, உங்கள நான் டாக்டர்கிட்ட கூட்டிட்டு போறேன்,'' என்று மூதாட்டியிடம் சொல்லவும், எந்த கேள்வியும் கேட்காமல், அவன் பின்னால் வந்தாள்.

வரவேற்பறை பெண்ணும், பிரச்னை தீர்ந்தால் போதுமென்று நிம்மதி பெருமூச்சு விட்டாள்.

மூதாட்டியுடன் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த ராமமூர்த்தி, ''எதுக்கு பெரியம்மா இப்படி முட்டாள்தனமா, உயிரோட இருக்கும் போதே கண்ணை எடுத்துக்க சொல்றீங்க... அப்படி எடுத்துட்டா, நீங்க குருடா ஆயிடுவீங்களே... அது தெரியாதா உங்களுக்கு?'' என்றான்.

''எல்லாம் தெரியுமப்பா... இந்த கண்ணால, எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லையே... அது இல்லாம குருடாயிட்டா, குருடின்னு சொல்லி பிச்சை கேட்டா, இரக்கப்பட்டு, உன்னைப் போல மகராசன்கள் பிச்சையாவது போடுவாங்க. அதுல வயிறார சாப்பிட்டுக்குவேனே,'' என்று சொல்லி, லேசாய் விசும்பினாள்.

சிலீரென்றிருந்தது, ராமமூர்த்திக்கு. அந்த மூதாட்டியை இதுவரை அவன், பிச்சைக்காரியாக நினைத்துப் பார்த்திருக்கவே இல்லை.

''என்ன சொல்றீங்க பெரியம்மா, ஒண்ணும் புரியலையே,'' என்று அவன் ஆச்சரியப்படவும், மெல்ல, தன் கதையை சொல்ல துவங்கினாள்...

''திருநெல்வேலி அருகில் இருக்கும், சிறு கிராமத்தைச் சேர்ந்த எனக்கு, 70 வயசாகுது. கணவர் இறந்துட்டார். இரண்டு மகன், ஒரு மகள். எல்லாருக்கும் கல்யாணமாயிடிச்சி. எங்களோட பிரதான தொழில், விவசாயம்.

''வானம் பொய்த்துவிட, விவசாய தொழில் பாதிச்சி போச்சு. கடைசி மகன் பராமரிப்பில இருந்த எனக்கு, அவனுக்கு எந்த விதத்திலாவது உதவ முடியலையேன்னு வருத்தம். வறுமை, அவனோட மனசில், விபரீத எண்ணத்தை ஏற்படுத்திடுச்சி.

''என்னை கோல்கட்டாவுக்கு, ரயிலில் அழைச்சு போய், அங்கேயே விட்டுவிட்டு வந்துட்டான். பிச்சையெடுக்கும் நிலைக்கு போன நான், தமிழ் குடும்பம் ஒன்றின் உதவியோடு, மதுரை வந்து சேர்ந்தேன். அங்கு வந்ததும், பிச்சை எடுப்பதையே தொழிலா செய்தேன்.

''உடலில் ஏதாவது குறை இருந்தால் தான், பிச்சை போடுவாங்கன்னு, சக பிச்சைக்காரங்க சொன்னாங்க. அதனால, என் கண்களை தானமாக கொடுக்க முடிவெடுத்தேன்,'' என்றாள், மூதாட்டி.

தொடர்ந்து, ''ஒவ்வொரு நாளும் சாவை எதிர்பார்த்து வாழ்ந்துகிட்டு இருக்கேன்ப்பா. ஆனா, சாவு தான் வரவே மாட்டேங்குது. என்னை போல, வயசானவங்கள, வலி தெரியாம ஊசி போட்டு, அரசே சாகடிச்சிடலாம். நாங்கல்லாம் எதுக்கு இன்னும் இந்த பூமியில கெடந்து சீரழியணும்,'' என்று, பொல பொலவென்று கண்ணீர் பெருக்கி, அழத் துவங்கினாள்.

ஓட்டலுக்கு அழைத்து போய், ''என்ன சாப்பிடுறீங்க பெரியம்மா?'' என்றான், ராமமூர்த்தி.

''நாக்கு ருசியெல்லாம் எப்பவோ மரத்துப் போச்சுப்பா... வயிறு ரொம்பணும்; அதுக்கு எதையாவது அள்ளி போட்டுக்கணும்... அவ்வளவு தான்,'' என்றாள்.

ஓட்டலிலிருந்து வெளியே வந்ததும், அவளுக்கு அழுகை முட்டியது.

ராமமூர்த்திக்கு, அவனுடைய அம்மா ஞாபகம் வந்தது. அம்மாவை தன் அருகில் வைத்து பராமரிக்க, அவனுக்கு கொடுத்து வைக்கவில்லை. எழுதுகிறேன் பேர்வழி என்று, சென்னையிலேயே வம்படியாய் இருக்க, கிராமத்தில், தனிமையில் கிடந்து, இறந்து போனாள்.

''உங்கள பார்த்ததும், எனக்கும் என்னோட எதிர்காலம் பத்திய பயம் வந்துருச்சு, பெரியம்மா. வயசு காலத்துல, முதுமைக்குன்னு கொஞ்சமாச்சும் சேர்த்து வைக்கணும்ன்னு இப்பத்தான் புரியுது,'' என்றவன், ''உங்க கிராமத்த விசாரிச்சு, உங்கள அழைச்சு போய் விட்டுட்டு வரட்டுமா?'' என்றான்.

''அங்க போயி, என்னத்தப்பா பண்றது... இப்ப யாரும், அங்க இருக்கவும் மாட்டாங்க. அதனால, நான் இங்கயே இருந்து, எப்படியோ பொழச்சுக்கு வேன்ப்பா,'' என்றாள்.

''அப்படின்னா, நீங்க, இனிமே பிச்சையெல்லாம் எடுக்க வேணாம், பெரியம்மா. உறவு, சொந்தம்ன்னு சொல்லிக்க எனக்கும் யாருமே இல்ல... இப்ப, எனக்கு கண்ணுல ஒரு ஆபரேஷன் பண்ணனும். அதுக்கு, நீங்க எனக்கு துணையா இருங்க. அப்புறம், நாம் சென்னைக்கு போயிடலாம்,'' என்றான்.

''என்னோட, 70 வயசு வரைக்கும், எங்க ஊரை விட்டு துாரமா எங்கயுமே போனதில்ல; ஆனா, இப்ப பாரு, ஊரு ஊரா சுத்தி அலையுறேன்,'' என்றவள், ''சரிப்பா... நான் உன் கூட வந்துடுறேன். ஒருநாள் நான் செத்துப் போயிட்டா என்னப்பா பண்ணுவ?'' என்றாள்.

ராமமூர்த்திக்கு, அவளின் கேள்வியே புரியவில்லை.

''என்ன பண்ணனும் பெரியம்மா... வேணுமின்னா, உங்க பசங்கள தேடி, அவங்ககிட்ட உங்கள ஒப்படைச் சிடறேன்... நீங்க வாழ்ந்த ஊர்லயே அவங்க நல்லடக்கம் பண்ணிக்கட்டும்,'' என்றான்.

''அதெல்லாம் வேண்டாம்ப்பா... வாழ்ந்த காலத்துல, யாருக்கும் ஒரு நல்லதும் பண்ணதில்ல. நான் செத்த பின், என் உடம்பை அரசு ஆஸ்பத்திரிக்கே குடுத்துடு... அவங்க, என் உடம்புல இருக்குற உறுப்புகள்ல ஏதாச்சும், மத்த உயிருங்கள காப்பாத்த தேவைப்பட்டா எடுத்துக்கிடட்டும்...

''வயசாகி செத்து போனா, அதையெல்லாம் பாவிக்க முடியாதுன்னா, என் உடம்ப வச்சு, பிள்ளைகள், பாடமாவது படிக்கட்டும்,'' என்று மூதாட்டி கூறியதை கேட்ட ராமமூர்த்திக்கு, கண்கள் கலங்கின.

சோ.சுப்புராஜ்






      Dinamalar
      Follow us