
எல்லாருக்கும் எல்லாமே தெரியும் என்று வைத்துக் கொள்வோம். இவ்வளவு தெரிந்தும் பிரச்னை ஏன் வருகிறது?
கண்ணன் பதில் சொல்கிறார்...
மகாபாரத- குருஷேத்ர யுத்தம் துவங்குவதற்கு முன் நடந்தது இது.
ஒருநாள், கர்ணனிடம், 'யுத்தம் சிறந்ததா, சமாதானம் சிறந்ததா...' என, கேட்டார், அர்ஜுனன்.
'சமாதானம் தான் சிறந்தது. நாளைக்கே யுத்தம் வந்து, உன்னை நான் தாக்கினால், நீ துயரப்படுவாய். அதைக்கண்டு இளகிய என் மனம் வருந்தும். ஆகையால், சமாதானமே உயர்ந்தது...' என்றார், கர்ணன்.
'நான், நம்மிருவருக்கும் கேட்கவில்லை. பொதுவாக எது சிறந்தது, சொல்...' என கேட்டார், அர்ஜுனன்.
'இதற்கான பதிலை உடனே சொல்ல இயலாது...' என்றார், கர்ணன்.
துரோணரிடம் போய், இதே கேள்வியை அர்ஜுனன் கேட்க, 'யுத்தம் தான் சிறந்தது. பகைவரை வெல்வதன் மூலம், பேர்-, புகழ், -செல்வம் என, பலவும் கிடைக்கின்றன. சமாதானத்திலோ, இவையெல்லாம் கிடைக்காது...' என்றார்.
அடுத்து, பீஷ்மரிடம் போய் கேட்டார், அர்ஜுனன்.
'சமாதானமே சிறந்தது. யுத்தத்தால், ஷத்ரியர்கள் தான் லாபம் அடைவர். சமாதானத்தால், உலகம் முழுதும் லாபம் அடையும். ஆகையால், சமாதானம் தான் சிறந்தது...' எனக் கூறி சிரித்தார், பீஷ்மர்.
அர்ஜுனன் திருப்தி அடையாததை கண்ட பீஷ்மர், 'இந்தக் கேள்வியை ஏன், நீ என்னிடம் கேட்கிறாய்...' என்றார்.
'தாத்தா... சமாதானம் இருக்கும் வரையில், என்னை விட, கர்ணன் தான் வித்தையில் சிறந்தவன் என, எல்லாரும் நினைப்பர். ஆனால், யுத்தம் வந்தால், யார் திறமைசாலி என்பது தெரிந்துவிடும். அதற்காகத்தான் கேட்டேன்...' என்றார்.
'அர்ஜுனா... சண்டையோ-, சமாதானமோ, அனைத்திலும் சிறந்தது தர்மம் தான். கர்ணன் மீதுள்ள கோபத்தை நீக்கி விடு... உலகம் முழுதும், நமக்கு உறவினர் ஆவர். அனைவரிடமும் அன்பாக இரு... அதுதான், நன்மை தரும்...' என்றார், பீஷ்மர்.
அப்போது, பீஷ்மரின் கண்களில் இருந்து, சில கண்ணீர்த்துளிகள் பூமியில் சிந்தின.
பதில் பேசாமல் நகர்ந்தார், அர்ஜுனன்.
சில நாட்கள் கடந்ததும், வியாசர் வந்தார். அவரிடமும், 'சண்டை சிறந்ததா, சமாதானம் சிறந்ததா...' எனக் கேட்டார், அர்ஜுனன்.
'அர்ஜுனா... இரண்டுமே உயர்ந்தது தான். இரண்டுமே தாழ்ந்தது தான். எந்த காரணத்திற்காக நாம் இவற்றை விரும்புகிறோமோ, அதைப் பொறுத்தே அதனதன் உயர்வும், தாழ்வும் அமையும்...' என்றார், வியாசர்.
அவர் சொன்னது, அர்ஜுனனுக்கு புரியவில்லை.
காலங்கள் கடந்தன. சூதாட்டம், வனவாசம், அக்ஞாத வாசம் எனும் மறைந்து வாழ்தல் என, அனைத்தும் முடிந்த நேரம். பாண்டவர்களை பார்ப்பதற்காக வந்தார், கண்ணன்.
'சண்டையா, சமாதானமா, சிறந்தது எது?' என, கண்ணனிடமும் கேட்டார், அர்ஜுனன்.
'அர்ஜுனா... இப்போதைக்கு சமாதானம் சிறந்தது. இப்போது சண்டை நடத்தினால், நமக்கு புகழ் கிடைக்காது. காரணம், நான் மத்தியஸ்தம் செய்து வைப்பதற்காக, அஸ்தினாபுரம் போய்க் கொண்டிருக்கிறேன். ஆனால், தக்க சமயம் வரும்போது, சண்டையும், சமாதானத்தைப் போலவே சிறந்து விளங்கும்...' என்றார், கண்ணன்.
அப்போது தான், அர்ஜுனனுக்கு வியாசர் சொன்ன பதிலின் பொருள் விளங்கியது. எந்தக் காரணத்திற்காக மனம் விரும்புகிறதோ, அதைப் பொறுத்தே உயர்வும், தாழ்வும் அமையும்- என்பதை புரிந்து கொண்டார், அர்ஜுனன்.
காரணங்கள் நல்லவைகளாக அமைந்து, உயர்வை அளிக்கக் கண்ணனையே வேண்டுவோம்!
பி. என். பரசுராமன்