தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இந்திய தொல் பழங்காலத்தின் தந்தை ராபர்ட் புரூஸ் பூட்!

இந்திய தொல் பழங்காலத்தின் தந்தை ராபர்ட் புரூஸ் பூட்!

இந்திய தொல் பழங்காலத்தின் தந்தை ராபர்ட் புரூஸ் பூட்!


PUBLISHED ON : மே 27, 2012

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 27, 2012


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மே 30, 1863 - இந்திய தொல் பழங்கால வரலாற்றின் பொன் நாள். பனியுக காலத்திலும், இந்தியாவில் மனிதன் வாழ்ந்ததற்கான தடயம் கிடைத்த நன்னாள். அன்று தான், ராபர்ட் புரூஸ் பூட் எனும் வரலாற்று ஆராய்ச்சியாளர், சென்னை, பல்லாவரம் பகுதியில், பழைய கற்கால கருவியை முதன்முதலில் கண்டெடுத்த நாள்.

யார் இந்த ராபர்ட் புரூஸ் பூட்? இங்கிலாந்து நாட்டில், 1834ல், பிறந்தவர். நிலவியல் வல்லுனரான இவர், தொல்பொருள் ஆராய்ச்சியாளராகவும் திகழ்ந்தவர். பழைய கற்கால மனிதர்கள் வாழ்ந்த இடங்கள், அவர்களது ஆயுதங்களை கண்டறிந்து, இந்திய தொல் பழங்காலத்தின் தந்தை என்று, வரலாற்று அறிஞர்களால் அழைக்கப்படுகிறார்.

கடந்த 1858, செப்டம்பர் மாதம், தன், 24வது வயதில், மத்திய நிலவியல் ஆய்வுத் துறையில், நில அளவையாளராக (சர்வேயர்) தன் பணியைத் துவக்கினார்.

33 ஆண்டுகள் பணிபுரிந்து, 1891ல், முதுநிலை கண்காணிப்பாளராக ஓய்வு பெற்றார். இவரது ஆய்வு முழுக்க, முழுக்க சென்னை மாகாணத்திற்கு உட்பட்டே நடந்துள்ளது என்கின்றனர் வரலாற்று ஆய்வாளர்கள்.

இவரது முதல் ஆய்வு, சென்னை பல்லாவரம் பகுதியில் துவங்கியது. இங்கு, கற்கால மனிதர்கள், கற்களையே ஆயுதங்களாக பயன்படுத்தினர் என்பதை கண்டறிந்து, உலகிற்கு தெரியப்படுத்தினார். அதன்பின், திருவள்ளூர் மாவட்டம் (அப்போது செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்தது) பூண்டி நீர்தேக்கத்திற்கு அருகே அத்திரம்பாக்கம் ஓடைப்பகுதி மற்றும் அதன் சுற்றுப் பகுதிகளில் கள ஆய்வு மேற்கொண்டார்.

இங்கு, ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன், மக்கள் வாழ்ந்தனர் என்பதற்கான வரலாற்று ஆதாரங்களை கண்டறிந்தார். இந்த ஆயுதங்கள், சென்னை கற்கோடாரி மரபு வகையைச் சார்ந்தது. கற்கால மக்கள் பயன்படுத்திய கல் ஆயுதங்களையும் சேகரித்தார். இவை அனைத்தும் பூண்டியில், தொல்லியல் துறையின் அகழ் வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன.

பூண்டி அகழ்வைப்பக காப்பாட்சியர் ஸ்ரீகுமார் கூறியதாவது:

ராபர்ட் புரூஸ் பூட், தென் இந்தியத் தீபகற்ப பகுதியில் கண்டுபிடித்த, 459 வரலாற்றுக்கு முற்பட்ட காலப் பகுதிகளில், 42 பகுதிகள் பழைய கற்காலத்தையும், 252 பகுதிகள் புதிய கற்காலத்தையும் சார்ந்தவை. திருநெல்வேலி மாவட்டத்தில், தேரி பகுதிகளில் நுண்கற்காலக் கருவிகளை கண்டெடுத்து, அப்பகுதியில் நுண்கற்கால தொழிற்சாலை இருந்தமையை உறுதிப்படுத்தியுள்ளார். பழைய கற்கால, புதிய கற்கால கல் ஆயுதங்களை, அதன் உருவமைப்பு மற்றும் தொழில் நுட்ப முறையைக் கொண்டு வகைப்படுத்தும் பணியை மேற்கொண்டார். தென் இந்தியாவில் பழைய கற்காலத்திற்கும், புதிய கற்காலத்திற்கும் இடையேயுள்ள நீண்ட இடைவெளியைக் கண்டறிந்து, அதற்கான காரணத்தை அறியும் பொருட்டு மேற்கொண்ட அவரது ஆய்வு சிறப்பு வாய்ந்தது.

சென்னை, மைசூர், ஐதராபாத், பரோடா பகுதிகளில், இவரால் சேகரிக்கப்பட்ட வரலாற்றுக்கு முற்பட்ட தொல் பொருட்கள், 1904ல், சென்னை அருங்காட்சியத் துறையால் வாங்கப்பெற்று, அதற்கென தனி காட்சியறை, தொல்லியல் பிரிவில் நிறுவப்பட்டது. அறிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொணர்ந்து, பல தொல்லியல் சிக்கல்களுக்கு தீர்வு கண்டு, 'இந்திய தொல் பழங்காலத்தின் தந்தை' என்றழைக்கப் பட்ட ராபர்ட் புரூஸ் பூட், டிச.,29, 1912ல், இயற்கை எய்தினார். இந்திய நாகரிக வரலாற்றை, லட்சம் ஆண்டுகளுக்கு முற்பட்டதென, முதன் முதலில் உலகுக்கு காட்டிய பெருமை இவரையே சாரும்.

இவ்வாறு ஸ்ரீகுமார் கூறினார்.

***

மே 30ம் தேதி இந்தியாவில் பனியுகக் காலத்திய மனிதன் வாழ்ந்ததற்கான அடையாளம் கண்டறியப்பட்ட நாள்.

பூண்டி அகழ் வைப்பகம் குறித்த தகவல்கள்:

*கடந்த 1985ல் துவக்கப்பட்ட பூண்டி அகழ் வைப்பகம், இந்தியாவிலேயே வரலாற்றுக்கு முற்பட்ட காலம் தொடர்புடைய பொருட்கள் கொண்டதாகும்.

*ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன், ஆதி மனிதன் வசித்த குடியம் குகை, இப்பகுதியில் தான் உள்ளது.

*பழைய கற்கால கருவிகள், நுண் கற்கால கருவிகள், புதிய கற்காலக் கருவிகள் மற்றும் பெருங்கற்கால மட்பாண்டங்கள், பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

* ஆராய்ச்சி வல்லுனர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமல்லாமல் இந்திய வரலாற்றை அறிந்து கொள்ள ஆர்வம் உள்ள எவரும், இங்குள்ள அகழ் வைப்பகத்தை நேரில் கண்டு அறிந்து கொள்ளலாம்.

பார்வை நேரம்: காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை.

விடுமுறை: வெள்ளி மற்றும் அரசு விடுமுறை நாட்கள்.

நுழைவுச் சீட்டு:

பெரியவர் - 5 ரூபாய்.

சிறியவர் - 3 ரூபாய்.

***

என். சரவணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us