PUBLISHED ON : மே 27, 2012

சிவசங்கரி எழுதுகிறார்: அமெரிக்காவில் புரூக்ளின் நகரம், கறுப்பு இனத்தவர் அதிகமாக வாழும் இடம். அமெரிக்கர்களுக்கு நீக்ரோக்கள் என்றால் பயம். கொலை, கொள்ளைக் குற்றம், அவர்களால் தான் நிறைய நடக்கின்றன என்பர்.
'கறுப்பர்கள் அதிகமாக இருக்கும் இடத்திற்குத் தனியாகப் போகாதீர், இருட்டின பின் கண்டிப்பாகப் போக வேண்டாம்...' என்று, பல அமெரிக்க நண்பர்கள் சொல்லி இருந்ததால், முதல் நாள் ரயிலில், இத்தனைக் கறுப்பர்களைக் கூட்டமாகப் பார்த்ததும், எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போனது.
யாரேனும் என் அருகில் கொஞ்சம் நெருங்கினால் கூட, 'சரி, பையிலிருந்து கத்தியை எடுத்துக் குத்தப் போகிறான். இல்லை, காதுகளில் உள்ள வைரத் கம்மலை அறுத்துவிடப் போகிறான்...' என்று கற்பனை செய்வேன்.
ஒருநாள் என் கணவரும், நானும், ரயிலிலிருந்து இறங்கி நடந்து வந்தோம். கூடவே, ஒரு தடியன் ஒட்டிக் கொண்டு வந்தான். 'எவ்வளவு பணம் வைத்திருக்கிறீர்கள்?' என்று கேட்டுக் கொண்டே வந்தான். எனக்குப் பயம் பிடித்துக் கொண்டது. 'பேசாமல் வா... அவன் கேட்பது புரியாத மாதிரி, வேகமாக நட...' என்று இவர் சொல்லவும், விறுவிறுவென நடந்தோம். தெரு திரும்பும் வரை கூடவே வந்தவன், பிறகு நின்று விட்டான்.
நண்பரான டாக்டர் ரெட்டியிடம், இந்த நிகழ்ச்சியைச் சொன்னோம். 'அவன் கெட்ட நோக்கத்தோடு உங்களைத் தொடரவில்லை. பிச்சைக்காரனாக இருப்பான். ஒரு டாலர் கொடுத்தால் போதும்,போய் விடுவான்...' என்றார். நன்றாக இருக்கிறதே பிச்சை கேட்கும் விதம்!
— 'அனுபவங்கள் தொடர்கின்றன...' நூலிலிருந்து...
ஈரோட்டில், 'குடியரசு,' விடுதலை' பத்திரிகைகளில் துணையாசிரியர் பொறுப்பை ஏற்று பணிபுரிந்தார் அண்ணாதுரை. பிறகு, காஞ்சிபுரம் திரும்பி, 'திராவிட நாடு' வார இதழை, 1942ல், துவங்கி நடத்தி வந்தார். அதில், அவர் எழுதிய சில கட்டுரைகள், நாட்டில் வகுப்புக் கலவரத்தைத் தூண்டும் விதத்தில் அமைந்துள்ளதாகக் குற்றம் சாட்டி, அரசாங்கம் அவர் மீது வழக்கு தொடர்ந்தது. அப்போது காங்கிரஸ் அரசு, 'திராவிட நாடு இதழை நிறுத்த வேண்டும், இல்லையேல் அண்ணாதுரை, மூவாயிரம் ரூபாய் ஜாமின் தொகை கட்ட வேண்டும்...' என்று ஆணையிட்டது. அண்ணாதுரை, இந்த ஜாமின் தொகை கட்ட, தொண்டர்களிடம் நன்கொடை கேட்டு, திராவிட நாடு பத்திரிகையில் எழுதினார். ஒரு சில நாட்களுக்குள்ளா கவே மூவாயிரம் ரூபாய் நன்கொடை வந்து சேர்ந்து விட்டது. அக்காலத்தில், அது மிகப் பெரிய தொகை.
உடனே அண்ணாதுரை, 'உரிய தொகை சேர்ந்து விட்டது. இனிமேல், யாரும் பணம் அனுப்ப வேண்டாம்...' என்று, திராவிட நாடு பத்திரிகையில் அறிவிப்பு வெளியிட்டார்.
இதழுக்கு மூவாயிரம் ரூபாய் ஜாமின் தொகை கட்டிவிட்டு, அரசாங்கத்தின் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
'வகுப்பு கலவரத்தை தூண்டும் விதத்தில், அண்ணா துரையின் கட்டுரை இல்லை. ஜாமின் தொகையைத் திருப்பிக் கொடுக்கலாம்...' என்று ஆணையிட்டது கோர்ட். கோர்ட்டிலிருந்து ஜாமின் தொகை திரும்பக் கிடைத்ததும், நன்கொடை அனுப்பியவர்கள் அனைவருக்கும், மணியார்டர் மூலம் பணத்தைத் திருப்பி அனுப்பி வைத்தார் அண்ணாதுரை. அப்படிப்பட்ட நேர்மையான ஒருவரை, அரசியலில் இன்று காண முடியுமா?
—'அண்ணாதுரை வாழ்க்கை வரலாறு' நூலிலிருந்து.
***
நடுத்தெரு நாராயணன்
