தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (10)

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (10)

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (10)


PUBLISHED ON : அக் 25, 2020

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 25, 2020


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அப்பா நகர்த்தும் காய்கள்!

டியூஷன் வாத்தியார் வாங்கித் தந்த அடிகளுக்குப் பிறகு, அப்பா என்னை ஒருபோதும் அடித்ததாக நினைவில்லை. ஆனால், என் செயல்பாடுகள் தொடர்ந்தபடி தான் இருந்தன. சிறு வயதிலேயே கையில் காசு கண்டபடி புழங்கினால் அது என்னவெல்லாம் திமிர்த்தனங்களைச் செய்யச் சொல்லும் தெரியுமா?

ஒருநாள், என் இரு நண்பர்களைக் கேட்டேன்.

'டேய்... இன்னைக்கு சிகரெட் பிடிக்கலாமாடா?' (அடப்பாவி மனுஷா... இது வேறயா என்கிறீர்களா?)

கேட்டதுமே, நண்பர்கள் சந்திரசேகரனும், சுப்பிரமணியனும் மிரண்டு போயினர். பேசி, சம்மதிக்க வைத்தேன்.

'கூல்' என்று ஒரு சிகரெட். இதுதான் காரம்(!) குறைவாக இருக்குமாம். 'சார்மினார்' ரொம்பக் காரமாம். இவற்றையும் தெரிந்து வைத்திருந்தேன். (அது சரி!)

பெட்டிக் கடையில் சிகரெட் கேட்க, என் நண்பர்களுக்கு பயம். 'ஐயா'தான் துணிவே துணைக்காரனாச்சே! கேட்டேன். கடைக்காரர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். 'பிஞ்சிலேயே பழுக்கிறியேடா பாவிப் பயலே...' என்றது, அவரது பார்வை.

எங்கள் ஆசிரியர்கள் வசிக்காத பகுதியாகப் போனோம்.

பற்ற வைக்கத் தெரியவில்லை. குச்சிகள் வீணான பிறகு, தெரியாமல் இழுத்து, நெஞ்சே அடைத்துக் கொண்ட மாதிரி இருந்தது; ஏக இருமல்!

'எவண்டா இதுக்கு, 'கூல்'ன்னு பேர் வைச்சான்?'னு கத்தினேன்.

கொடுத்த காசு வீணாகக் கூடாது என்று, கை விரல் சுடும் வரை இழுத்து முடித்தேன். நண்பர்கள் ரெண்டு பேரும் ஏனோ சீக்கிரமே துாக்கிப் போட்டு விட்டனர்.

வாயை, பொதுக் குழாய் ஒன்றில் கழுவி, பபுள்கம், அசோகா பாக்கு எல்லாம் மென்று வீடு திரும்பியபோது, வாசலில் அப்பா!

நல்ல துப்பறிவாளர் என்று கையோடு நிரூபித்தார். மண்டையில் சுத்தியலால் அடிப்பது போல் ஒரு கேள்வி கேட்டார்.

'சிகரெட் பிடிச்சியா?'

அதிர்ச்சியின் உச்சத்திற்கே போய் விட்டேன். எப்படி கண்டுபிடித்தார்? சுத்தமாகப் பிடிபடவே இல்லை. பதில் சொல்ல, வாய் திறக்கவில்லை. மாறாக, கண்ணீர்ப் பை திறந்து கொண்டது. 'பொல பொல'வென்று கொட்டியது. கதவு சாத்தப்படும், அடி உறுதி என்று நான் எதிர்பார்த்தேன்.

'கிட்ட வா...'

'இல்லப்பா! இனிமே செய்ய மாட்டேம்பா...' பெருங் குரலில் அழுதேன்.

'அடிக்க மாட்டேன். கிட்ட வா...' போனேன்.

ஆச்சரியப்படும் வகையில் தலையை வருடிக் கொடுத்தார்.

'ஏன் இப்படியெல்லாம் நடந்துக்குறே... உன்னை நான் எவ்வளவு நம்பிக்கிட்டிருக்கேன் தெரியுமா... என்னைப் பார்த்து என்ன கத்துக்க முடியும்ன்னு பாரு. இனிமே இந்தத் தப்பை செய்ய மாட்டேன்னு சத்தியம் பண்ணு...'

இன்னும் ஏதேதோ சொன்னார்.

கேள்விப்பட்ட அம்மா, 'நல்லா நாலு போடுவீங்கன்னு நெனைச்சேன்...' என்றார்.

'இல்ல மணி. இவனை அடிச்சுத் திருத்த முடியும்ங்கிற நம்பிக்கை, எனக்கு அறவே போயுடுச்சு. அன்புக்கு ஏங்குற புள்ளையா இருக்கான். என் மீது அவனுக்கு இருக்கிற பயத்தை, நான் பாசமா மாத்தணும். அப்பத்தான் இவனை வழிக்குக் கொண்டு வரமுடியும்...' என்றாராம்.

இதை பின்னாளில் கூறினார், என் அம்மா.

நேரத்தின் அருமையை உணர்த்த ஒரு பரிசு!

ஒருநாள், 'லேனா, ரவி கிளம்புங்க. காசிச் செட்டித் தெருவுக்குப் போறோம்...' என்றார், அப்பா.

ஜாலி மூட், அவரது கண்களில் அப்பட்டமாய் வெளிப்பட்டது.

'ஏம்பா?'

'வாங்களேன் சொல்றேன்...'

வழியெல்லாம் ஒரே கற்பனை! தின்பண்டமா, ஏதும் பொருளா, என்னவாக இருக்கும்?

காசிச் செட்டித் தெரு என்பது, வெளிநாட்டுப் பொருட்கள் கிடைக்கும் இடம் என்பது, தெரியாத வயது அது.

'ஒருத்தருக்கு, 150 ரூபா பட்ஜெட். பிடிச்ச வாட்ச்சை எடுங்க ரெண்டு பேரும்...' (ஒரு பவுனின் விலையே அன்று, 116 ரூபாய் தான்.)

'என்னது, பாரின் வாட்ச்சா... அப்பா...' பிளந்த வாயை மூட முடியவில்லை.

'பேவ லுாபா' என்று, ஒரு சுவிஸ் கடிகாரம். 160 ரூபாய், சாவி கொடுக்க வேண்டாம். 'ஆட்டோமாட்டிக் வாட்ச்!' அப்போதுதான் அறிமுகமாயிருந்த நேரம்.

புஷ்பக விமானத்தில் ஏறி அமராத குறை தான். இரவெல்லாம் துாக்கம் வரவில்லை. எப்படா விடியும். பள்ளிக்குப் போய் நண்பர்களிடமெல்லாம் காட்டிப் பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும்.

ஆசிரியர்கள் கூட அபூர்வமாகக் கைக் கடிகாரம் கட்டும் கால கட்டம் அது. மாணவர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். ஒரு மாணவன் கூட கட்டி, நான் பார்த்தது இல்லை.

வகுப்பில், ராங்க் எடுக்கிறவர்களை தவிர (மதிக்க மாட்டானுங்களே!) அனைவரும் என்னைச் சூழ்ந்து கொண்டனர். நுழைந்த பூகோள (ாறான) ஆசிரியர், 'என்னடா கும்பல் கூடிக்கிட்டு...' என்றார்.

'சார்! லக்ஷ்மணன் புது வாட்ச் கட்டியிருக்கான் சார்...' என்று கோரசாய் கத்தினர்.

அப்பா வாங்கிக் கொடுத்தது வெறும் கடிகாரமல்ல. அந்த இள வயதிலேயே அவர் இதயத்தில் பதித்தது, நேர உணர்வை.

'அன்பால் உன்னை வழிக்குக் கொண்டு வர்றேன் பாருடா! எனக்கு இல்லைன்னாலும் உனக்கு எல்லாம் உண்டுடா! நண்பர்கள் மத்தியில் நீ பெருமையாக வலம் வர நானாச்சுடா!'

இப்படித்தான் பல அப்பாக்கள் போதனைகளையும், செய்திகளையும் மகன்களுக்கு நேரடியாகச் சொல்வதில்லை. அப்படி சொன்னால் அவை எடுபடா என்று தெரிந்து, ஏதோ ஒன்றின் வழியே இயங்கி, ஏகப்பட்ட மறைமுகப் பாடங்களை எடுக்கும் மகத்தான ஆசிரியர்கள், இவர்கள். அவர்கள் நகர்த்தும் காய்கள், 'ராஜா'வை எப்படியும் முன்னே கொண்டு வந்து நிறுத்தி விடும்.

இத்தகைய உண்மைகளை உணர, மகன்களுக்கு மட்டும் ஏனோ ஏகப்பட்ட ஆண்டுகள் பிடிக்கின்றன.

இந்த மரமண்டைக்கும் இது பொருந்தியது.

புதுமைகளைப் புகுத்தியவர்!

தமிழ்ப் பத்திரிகை உலகில் பல புதுமைகளைப் புகுத்திய பெருமை தமிழ்வாணனுக்கு உண்டு.

புதிய தொடர்கதைகளை ஆரம்பிக்கும்போது, தமது, 'கல்கண்டு' இதழ் அலுவலகத்திற்கு வாசகர்களை வரவழைத்து அவர்களிடையே புதுத் தொடர்கதை பற்றிய அறிவிப்பைச் செய்யும் புதிய நடைமுறையைக் கொண்டு வந்தார்.

பத்திரிகைகளில் அதிக அளவில் துணுக்குச் செய்திகளை, 1950களிலேயே வெளியிட்டார்.

தமிழ்ப் பத்திரிகைகளுள் முதன் முதலில், கேள்வி - பதில் பகுதியை, 'என்னைக் கேளுங்கள்' என்கிற தலைப்பில் ஆரம்பித்த பெருமை தமிழ்வாணனுக்கு உண்டு.

தொடரும்

லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us