sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (20)

/

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (20)

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (20)

தடம் தந்த தந்தை தமிழ்வாணன்! (20)


PUBLISHED ON : ஜன 03, 2021

Google News

PUBLISHED ON : ஜன 03, 2021


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நான் ஓர் அப்பா பிள்ளை!

என் அப்பாவின் இதயம், தன் கடைசித் துடிப்புகளை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது தெரியாமல், மாமனார் வீட்டில், தலை தீபாவளியை அட்டகாசமாகக் கொண்டாடிக் கொண்டிருந்தேன்.

என் மனைவி, ஐந்து அண்ணன்களுக்குப் பின் பிறந்தவள் என்பதால், அண்ணன்கள், பெற்றோர், அப்பத்தா ஆகியோர், அவளை ஏகமாய் தாங்குவர்.

இதோடு, வீட்டின் மூத்த மாப்பிள்ளை, தலை தீபாவளிக்கு வந்திருக்கிறார் என்பதால், கவனிப்பிற்குக் கேட்க வேண்டுமா... ஒரு சிற்றரசன் போல உணர்ந்தேன். தங்கத்தட்டு, சிவப்பு கம்பளம் தான் பாக்கி!

ஆனால், நெஞ்சத்தின் ஓரத்தில், 'அப்பாவுக்கு இப்போது எப்படி இருக்கிறதோ தெரியவில்லையே...' என்ற தவிப்பு, அவ்வப்போது தீபாவளி குதுாகலத்திற்குள் நுழைந்து துளையிட்டுக் கொண்டிருந்தது.

தலை தீபாவளி முடிந்து, ஊர் திரும்ப ரயில் நிலையம் வந்தேன். காரைக்குடியிலிருந்து நான் பயணித்தது தான், கடைசி ரயில். ஆம்... எங்கள் ரயில் கடந்த சில மணி நேரத்தில், மதுராந்தகம் கிளியாற்றுப் பாலம் (நவ., 1977) வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. நான் தப்பித்தேன் என்பதைவிட, அதிஷ்டசாலி என்பேன்.

தமிழகத்தில், ரயில், சாலை, விமானப் போக்குவரத்து என, மூன்றும் நிறுத்தப்பட்ட, வரலாறு காணாத புயல் -- வெள்ளம் அப்போது!

சென்னை, மாம்பலம் ரயில் நிலையத்திற்கு, என் அத்தான், வி.முருகப்பன் வந்திருந்தார்.

'இது என்ன புதுமை... நீங்கள் ஏன் வந்தீர்கள்...' என்றேன். அவர் முகம், இறுக்கமாக இருந்தது. வழியில் எதுவும் பேசாமல் வந்தார். அவரது செயல், என் மனதிற்குள் ஒரு பிரளயத்தையே உண்டாக்கி விட்டது.

வீட்டு வாசலில் ஏகப்பட்ட கூட்டம். என் ஊகம் உறுதியாகி விட்டது. அங்கு நின்று கொண்டிருந்த, 'துக்ளக்' சோ, 'வெரி சாரி லேனா...' என்றார். ('கல்கண்டில்' தான், ராமஸ்வாமி என்ற பெயரில், முதன் முதலில் கிரிக்கெட் விமர்சனங்களை எழுதினார்.)

'தம்பீ...' என்று, என்னை அணைத்தபடி கலங்கிப் போனார், சீர்காழி கோவிந்தராஜன்.

இனியும் வீட்டிலும் நடந்த சோகக் காட்சிகளை விவரித்து, வாசகர்களின் கண்ணீர்ப் பைகளுக்கு வேலை வைக்க எனக்கு விருப்பமில்லை.

வாழை மரமானது குலை தள்ளி, சாய்ந்து, மடிந்து, கீழே வைத்து விட்டுப் போகிற சத்துகளை, தன் கன்றுக்கு அடியுரமாக மாற்றுகிறது.

எங்களுக்கு எல்லாம் தந்துவிட்டு, 'போதும் நான் வாழ்ந்தது. நீ, உன் வளமான வாழ்வைத் துவங்கு...' என்று, சொல்லாமல் சொல்லிவிட்டு, அப்பா புறப்பட்டு விட்டாரோ என்று கூட, என் மனதிற்குப் பட்டது.

ஐம்பத்தோரு வயதெல்லாம் ஒரு வயதா... உழைத்து, அதுவும் சாதுர்யமாக உழைத்து, ஒரு சாம்ராஜ்யத்தையே உருவாக்கி, ஒன்றைக் கூட அனுபவிக்காமல் இப்படி விடைபெற்று விட்டாரே என, நான் அவ்வப்போது கலங்குவது உண்டு.

அம்மா மீது, எனக்குப் பாசம் தான். ஆனால், கூடுதல் பாசம், அப்பா மீது தான். என் உடம்பில் ஏதும் அடிபட்டால், 'அப்பா...' என்று தான் கத்துவேன். யாரும் வியப்புச் செய்திகளைச் சொன்னால், 'அடேங்கப்பா...' என்பேன். யாரேனும் அறுத்துத் தள்ளினால், 'அப்பப்பா... தாங்க முடியலையேப்பா...' என்று, மனம், தன் உணர்வை வெளிப்படுத்தும்.

பெரிய, 'ரிலீப்' செய்தி கிடைத்தால், 'அப்பாடா, இனி நிம்மதி...' என்பேன். மறந்தும், 'அம்மா...' என்று, எனக்கு வரவே வராது. ஏன் இப்படி, அப்பா பிள்ளையாக ஆகிப் போனேன்?

என் வாழ்வும், வளமும், நான் கேளாமலேயே அப்பா தந்த வரங்கள். ஏகமாய் அவர், 'அட்வைஸ்' செய்தது இல்லை. ஆனால், எங்களது சகோதரச் சண்டையைப் பார்த்துவிட்டு, 'தம்பி ரவியுடன் ஒற்றுமையோடு இரு. மீண்டும் ஒரே கருப்பையில், நீங்கள் தோன்றப் போவது இல்லை...' என்று மட்டும் சொல்லியிருக்கிறார். விண்ணப்பம் போல் வைத்த இதை, நான் கண்ணெனப் போற்றி வருகிறேன்.

ஏனோ, இந்த மண்ணில் அம்மாக்களை உயர்த்திப் பிடிக்குமளவு, அப்பாக்கள் போற்றப்படுவதில்லையே என்ற, என் மனக் கேள்விக்கு, இதுவரை பூரண திருப்தி தரும் பதில் கிடைக்கவில்லை.

பிள்ளைகளை வயிற்றில், 10 மாதம் சுமக்கிறவள் அம்மா என்றால், தன் மரணம் வரை, அவர்களை நெஞ்சில் சுமக்கிறவர் அப்பா தான்.

அம்மா, அன்பை மட்டுமே காட்டி, கண்டிப்பதற்கு அப்பாவை முன்னே தள்ளுவதால், கடுமையான முகமூடி ஒன்றை அவர், வேறு வழியின்றி அணிய வேண்டி வருகிறது.

அப்பாவா... அடி, உதை, சுடு சொல்; எது கேட்டாலும் மறுப்பவர் என்றாகி, எதிரி என்ற நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறார், பாவம்.

நெஞ்சில் உள்ள அன்பை மறைத்து, வார்த்தைகளில் கடுமை காட்டுகிற நிலைக்கு அவர் தள்ளப்படுவதால், அவரது அருமை, பல பிள்ளைகளுக்கு கடைசி வரை புரிவதே இல்லை.

திருவிழாக் கூட்ட காட்சிகளை, தன்னை விட, தன் மகன் முதலில் பார்த்து மகிழட்டும் என, தோளில் துாக்கிச் சுமக்கும் அப்பாவின் ஆழ்மன ஆசை, எத்தனை பிள்ளைகளுக்குப் புரியப் போகிறது!

அம்மாவின் செல்லம், பல பிள்ளைகளைப் பாழாக்கியிருப்பதை மறுக்க முடியுமா... அப்பாவுக்குத் தெரியாமல் அம்மா செய்து கொடுத்த சலுகைகள், தந்த தொகைகள் பிள்ளைகளுக்கு நன்மைகளை மட்டுமே செய்திருக்கின்றன என்று, எவரேனும் உத்தரவாதம் கொடுக்க இயலுமா?

அதே நேரத்தில் அப்பாவின் உறுதிப்பாடும், மறுப்பும், கறாரும், கண்டிப்பும், ஒருபோதும் எங்களுக்கு நன்மைகளைச் செய்ததில்லை என்று, எல்லாப் பிள்ளைகளும், 'கோரஸ்' குரல் கொடுக்க முடியுமா?

நம் மண்ணில், அப்பாவின் மகாத்மியங்கள் இன்னும் சரிவர உணரப்படவில்லை என்றே, நான் உறுதியாக நம்புகிறேன்.

அப்பா (நலமாக) இருக்கிறார் என்ற கொடுப்பினை, யார் யாருக்கெல்லாம் இருக்கிறதோ அவர்கள், அவரை முன்னிலும் மதிப்புடனும், பாசத்துடனும் நடத்தக் கற்றுக் கொள்ளட்டும்.

ரயில் பயணத்திற்கு, 'பர்த்' வசதியை ஒதுக்கித் தந்த டிக்கெட் பரிசோதகருக்கு, உள்ளம் உருக நன்றி சொல்லும் பிள்ளைகள், வாழ்க்கைப் பயணத்திற்கு வழிவகுத்து கொடுத்த அப்பாவை, எந்த அளவிற்கு எண்ணிப் பார்க்கின்றனர் என்பதை, அவரவர்களின் நெஞ்சில் கை வைத்துச் சொல்லட்டும்.

அவரை, காலம் காலமாகச் சொல்லாலும், செயலாலும் காயப்படுத்திய, வெறுத்த, நிந்தித்த செயலுக்காக, ஒரு முறையேனும், 'அப்பா... நான் பெற்ற அனைத்தும், நீங்கள் என்னைப் பெற்றதால் வந்த வாழ்வு அப்பா...' என, மனம் உருகச் சொல்லி, சொட்டுச் சொட்டான கண்ணீர்த் துளிகளால், அவர் பாதங்களைக் கழுவி, பிராயச்சித்தம் தேடிக் கொள்ளட்டும்!

நிறைவுற்றது

லேனா தமிழ்வாணன்






      Dinamalar
      Follow us