
ஒரு காலத்தில், பெற்றவர்களை தெய்வத்துக்கு சமமாக எல்லா குடும்பங்களிலும் கருதினர். அவர்களின் பேச்சை, நீதிபதியின் உத்தரவாக மதித்து நடந்தனர். காலம் செல்ல செல்ல, பெற்றவர்களை மதிக்கும் போக்கு குறைந்தது.
குறிப்பாக, திருமணத்துக்குப் பின், பெற்றவர்களை அவமதிக்கவோ, வெறுக்கவோ, ஒதுக்கவோ வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு ஆளாயினர்.
பெற்றோர் மரணித்த பின், அவர்களுக்கு செய்த அவமரியாதையை நினைத்து கலங்கினர். தெய்வமாகி விட்ட அவர்களுக்காவது மரியாதை செய்வோம் என, கருதினர். இதற்காக ஏற்படுத்தப்பட்டது தான், தர்ப்பணம்.
தர்ப்பணம் என்ற சொல்லுக்கு, 'திருப்தி செய்வது' என, பொருள்.
குறிப்பாக ஆடி, தை மாத அமாவாசைகளில் செய்யும் தர்ப்பணம், விசேஷமானது. ஆடியில், தன் நண்பன் சந்திரனின் வீடான, கடக ராசிக்கு சூரியன் வருகிறார். சந்திரனும், சூரியனும் அப்போது இணைகின்றனர். இவர்கள் இணையும் நாளே அமாவாசை.
தை மாதத்தில், சூரியன், தன் மகன் சனியின் வீடான மகர ராசிக்கு வருகிறார். அதே வீட்டில், சந்திரனும் இணைவார்.
அப்போது, சூரியன், பிதுர்காரகன் (அப்பா ஸ்தானம்) என்றும், சந்திரன், மாத்ருகாரகன் (அம்மா ஸ்தானம்) எனவும் பெயர் பெறுவர். அம்மாவும், அப்பாவும் இணைந்திருக்கும் வேளையில், தர்ப்பணம் செய்வது, மிகுந்த பலன் தரும்.
தன் அம்மாவான சாயாதேவியை ஒதுக்கி விட்டதால், சனிக்கும், அவரது அப்பா சூரியனுக்கும், சண்டை. இதனால், அவர்கள் ஜென்மப் பகைவர்கள் ஆயினர்.
இருந்தாலும், சூரியன் மகரத்தில் நுழையும் தை மாதத்தில், அவர்கள் சேர்ந்திருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. எனவே, சூரிய, சந்திரர் மகரத்திற்குள் நுழையும் தை அமாவாசை, மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.
பிதுர்காரகனான சூரியன், தன் பிள்ளை வீட்டில் இருக்கும் காலத்தில், தங்கள் முன்னோருக்கு செய்யும் தர்ப்பணம், சிரார்த்தம் முதலியன முக்கியத்துவம் பெறுகின்றன.
எல்லா சிவாலயங்களிலும், சனி பகவான், தெற்கு நோக்கி தனி சன்னிதியிலும், சூரியன், மேற்கு நோக்கி தனி சன்னிதியிலும் இருப்பர். சண்டைக்காரர்களான இவர்களால், ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் வாய்ப்பு இல்லை.
நவக்கிரக மண்டபத்தில், சூரியன், கிழக்காகவும், சனி மேற்காகவும் எதிரும், புதிருமாக இருப்பர். தை மாதத்தில் இவர்கள் ஒரே வீட்டில் இணைகின்றனர் இல்லையா...
இதன் அடிப்படையில், எதிரிகளான இவர்களை இணைத்து வைத்து, சன்னிதி உருவாக்க வேண்டுமென, ஒரு மன்னன் நினைத்தான். அதன் அடிப்படையில், கும்பகோணம், சோமேஸ்வரர் கோவிலில், சன்னிதி உருவாக்கப்பட்டது.
இங்கே இருவரும் இணைந்து காட்சி தருகின்றனர். இதே போல, சந்திரனும், சனியும் இணைந்துள்ள சன்னிதி, கும்பகோணம்- - மன்னார்குடி சாலையில், 5 கி.மீ., தொலைவில், சாக்கோட்டையில் அமிர்தகலசநாதர் கோவிலில் உருவாக்கப்பட்டது.
பிப்., 12, தை அமாவாசையன்று, இந்த கோவில்களுக்கு வந்து, இவர்களைத் தரிசித்தால், பெற்றோர், பிள்ளைகள் உறவு வளரும் என்பதுடன், முன்னோர் ஆசியும் கிடைக்கும்.
தி. செல்லப்பா