
திருமண அறிவிப்பு விருந்து!சொந்த பந்தங்கள் அனைவரையும் அழைத்து, ஒருநாள் விருந்து வைத்தார், உறவினர் ஒருவர். எல்லாரும் விருந்து உண்டு, மகிழ்ச்சியாக பேசிக் கொண்டிருக்கும் வேளையில், அவரின் மகளை, அலங்கரித்து அழைத்து வந்து, அறிமுகம் செய்தார்.திருமணத்திற்கு வரன் தேடும் முயற்சியை, உறவினர்கள் மத்தியில் அறிவிப்பதற்காக தான், இந்த விருந்தை ஏற்பாடு செய்ததாக கூறினார்.மகளின் படிப்பு, பணி, பண்பு என, அவரின் நிறைகளை விவரித்தவர், குறைகளையும் மறக்காமல் எடுத்துக் கூறினார்.வந்திருக்கும் சொந்தங்களில், விருப்பப்படுவோரும், அவரவருக்கு தெரிந்த இடங்களில் கலந்தாலோசித்தும், தன் மகளுக்கு பொருத்தமான மாப்பிள்ளை அமைய உதவிட வேண்டினார்.விருந்து முடிந்து விடைபெறும் போது, பெண்களுக்கு, புடவை, ரவிக்கையும்; ஆண்களுக்கு, வேட்டி, சட்டை மற்றும் தாம்பூலம் வழங்கி, வழியனுப்பி வைத்தார்.அடுத்த சில வாரங்களிலேயே, உறவினர்களின் ஏற்பாட்டில், அவர் மகளுக்கு, நல்ல வரன் அமைந்து, திருமணமும் முடிந்தது.'மேட்ரிமோனியல்' மற்றும் தரகருக்கு கமிஷன் என, வீண் செலவு செய்தும், அந்த கமிஷனுக்காகவே, அவர்கள் அடித்துவிடும் பொய்களில் ஏமாந்தும், திருமணத்திற்கு பின், விவகாரமாகி, விவாகரத்து வரை செல்வதை தடுக்கவும், என் உறவினரின் செயல்முறையை நடைமுறைப்படுத்தி, பயனடையலாமே!- ஆர். செந்தில்குமார், மதுரை.
'கொரோனா'வால் கற்ற கைத்தொழில்!'கொரோனா'வால் வீட்டில் இருந்தபடி, 'ஆன்லைனில்' 8ம் வகுப்பு படித்து வருகிறாள், என் மகள். ஆயினும், ஓய்வு நேரத்தில், உறவினரிடம், ஒயர் கூடை பின்னுவதை ஆர்வமுடன் கற்றாள். 'ஆர்டரின்'படி விருப்பமான கூடைகளை பின்னி தருவதோடு, எங்கள் தெருவில் உள்ள இவளது பெண் தோழியருக்கும், இலவசமாக கற்றுக் கொடுத்தாள். இன்று, அனைவரும் கூடைகள் பின்னுவதை, பொழுதுபோக்காக மட்டுமின்றி, வர்த்தகமாகவும் செய்கின்றனர்.'டிவி' பார்ப்பது, மொபைல் போனில், 'கேம்' விளையாடுவது என்றில்லாமல், பயனுள்ள வகையில் கைத்தொழில் செய்து, பெற்றோருக்கு பெரும் உதவியாக உள்ளனர்.— எம்.ஆர். ஜெயச்சந்திரன், திண்டுக்கல்.
தொழில் நஷ்டத்திலிருந்து மீள...வாடகை இடத்தில், டீக்கடை நடத்தி வரும் நண்பர் ஒருவரை, சமீபத்தில் சந்தித்தேன்.சில மாதங்களுக்கு முன் சந்தித்தபோது, எதிர்பார்த்த அளவுக்கு வருமானம் இல்லாததால், தொழில் நஷ்டத்தில் இருப்பதாக புலம்பியவர், இப்போது, பரபரப்பாகவும், மிக மகிழ்ச்சியாகவும் காணப்பட்டார்.'இந்த, திடீர் மாற்றம் எப்படி...' என்று, அவரிடம் கேட்டேன்.'வாடிக்கையாளர்கள் தேடி வருவர் என்று, காத்துக் கிடந்து, ஏமாறுவதை விட, அவர்களை தேடி நாமே செல்லலாமே என்று நினைத்து, வருமானமின்றி, மிகுந்த சிரமத்தில் இருக்கும் சிலரை, பணிக்கு அமர்த்தினேன். 'அவர்களுக்கு, என் சொந்த செலவில், மிதிவண்டி மற்றும் டீ கேன் வாங்கி கொடுத்து, நான் போட்டுத் தரும் டீயை, ஆளுக்கொரு பகுதியாக சென்று, விற்று வர, அனுப்பி வைத்தேன்.'என் முதலீடு போக, மீதி லாபத்தை, மூன்றில் இரண்டு பங்கு அவர்களுக்கும், ஒரு பங்கை எனக்கும் என, பிரித்துக் கொள்கிறோம். இப்போது, போதுமான வருமானத்தோடு, நானும், என்னால் சிலரும், மகிழ்ச்சியாக இருக்கிறோம்...' என்றார்.எந்த தொழிலிலுமே, நஷ்டத்திலிருந்து மீள நினைப்போர், வெற்றுப் புலம்பலோடு தேங்கி விடாமல், மாற்று நடவடிக்கையில் இறங்கினால், நண்பரை போல மகிழ்ச்சியும், வெற்றியும் அடையலாமே!எச். சண்முகசுந்தரம், சேலம்