PUBLISHED ON : பிப் 05, 2017

ராசிபலன்களின் மேல் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட, தனக்கு, அத்தனை அதிர்ஷ்டம் இல்லை என்பதில், அலாதி நம்பிக்கை இருந்தது, ஹரிக்கு!
ஆனால், அப்போது, எமிரேட்ஸ் விமானத்தில், சென்னைக்கு பயணித்து கொண்டிருந்தவனுக்கு, தன் கண்களையே நம்ப முடியவில்லை. காரணம், அவனுக்கு பக்கத்து சீட்டில், மினுப்பும், வனப்பும், வாசமுமாய் வந்து அமர்ந்தாள் அவள். ஓரக்கண்ணால் பார்த்தான்; உடலெங்கும் புல்லரித்தது.
சாதாரணமாய், பழுத்து, இருமலும், எண்ணெய் பிசுக்குமாய் அல்லது சொந்த இருக்கை பத்தாமல், இவனது இருக்கையிலும் இடித்து வியாபிக்கிற மாதிரிதான் யாராவது அமர்வது வாடிக்கை.
அத்துடன், மேலே தூங்கி விழுவதும், கழிப்பிடம் போக, அடிக்கடி காலை இடித்து போய் வருவதும், 'சென்னை எப்போ வரும்... எப்போ வரும்...' என்று பிராண்டப்படுவது, அவனுக்கு, பழகிப் போன விஷயம்!
இன்று, சுக்ர திசையோ என்னவோ, ஒரு நல்ல காரியமாக, அதுவும், தன் திருமண நிச்சயத்திற்கு போகும் போது, அருகில் ஒரு தேவதை!
'சீ... தப்பு; எனக்கு நிச்சயிக்கப்பட்டிருக்கிற பிரபா உன்னதமானவள்... எனக்காகவே படைக்கப்பட்டள். அவளை தவிர, வேறு யாரையும், ஏறிட்டு பார்க்க கூடாது...' என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டான்.
முன் சீட்டில் பொருத்தப்பட்டிருந்த, 'டிவி'யை ஆன் செய்து, வயரை, காதில் செருக போன போது, அவன் வைராக்கியத்தை தகர்க்கும் விதமாக, ''ஹாய்...'' என்று புன்னகைத்து, கை நீட்டி, ''நான் தினுஷா,'' என்றாள்.
''பாத்தாலே தெரியுது.''
''என்ன?''
''ஒரு தினுசா தான் இருக்கீங்க,'' என்றதும், குலுங்கி சிரித்தாள். அடர்ந்து, அலையடிக்கும் முடியை கோதி, ஜீன்சிலிருந்து, பபிள்கம் எடுத்து நீட்டினாள்; மறுக்க முடியவில்லை.
பிடிவாதமாய் அவளை விலக்கி, பிரபாவின் மேல் கற்பனையை செலுத்தும் விதமாக பர்சை எடுத்து, அவளது புகைப்படத்தை பார்க்க, அவள், சட்டென அவன் மேல் சரிந்து, ''ஓ... நைஸ்! யார் இது, உங்க லவ்வரா,'' என்று கண் சிமிட்டினாள்.
அவன் அதிர்ந்து, பிரபாவின் புகைப்படத்தை மறைக்க, ''சாரி... விருப்பமில்லன்னா சொல்ல வேணாம்,'' என்றாள்.
''சேச்சே அப்படியெல்லாமில்ல... வுட்பி; என்கேஜ்மென்ட்க்காக தான் இப்போ லீவு எடுத்துட்டு போறேன்,'' என்றான்.
''க்யூட் கேர்ள்... பெஸ்ட் விஷ்ஷஸ்,'' என்று கைக்குலுக்கினாள்.
''தினுஷா... உங்களுக்கு மேரேஜ் ஆயாச்சா...''
''இன்னும் இல்ல... பாத்துட்டு இருக்காங்க. உங்கள மாதிரி யாராச்சும் கிடைச்சா, கல்யாணம் செய்ய தயாரா இருக்கேன்,'' கலகலவென கலவரம் செய்தாள்.
அவனுக்கு சங்கடமாயிருந்தது. ஒதுங்கும் பெண்களிடம் தான், வலிய புன்னகைத்து, வழிந்து பேசி, மனதில் இடம் பிடிக்க பல சாகசங்கள், கோமாளிதனங்கள் செய்து துரத்த தோன்றும்.
இவளோ இழைகிறாள். அவற்றை ரசிக்கவோ, கலாய்க்கவோ உள்ளுக்குள் தயக்கம்; உறுத்தல். நமக்கென்று ஒருத்தியை முடிவு செய்த பின், இது தவறு என்று நினைத்தான்.
அவள் விடுவதாயில்லை. சினிமா, பத்திரிகை, அரசியல், பொருளாதாரம் என, நிறைய பேசினாள்; போரடிக்காமல் இருப்பதற்காக இலவச இணைப்பாக ஏற்றுக் கொண்டான்.
சாப்பிடும் போது, ''இப் யூ டோன்ட் மைண்ட்...'' என்று, தன் தட்டு இனிப்பை, அவன் தட்டில் வைத்தாள். அவனது சம்மதம் கேட்காமலேயே, செல்பி எடுத்தாள்.
அதற்குள் சென்னை வந்து விட்டது.
ஒன்றாய் இறங்கினர். 'பிரபாவும் இவளைப் போல் தான் இருப்பாளோ...' என யோசித்தபடி, இமிகிரேஷனை நோக்கி நடந்தான். அவனுக்கு பின் அவள்!
கன்வேயரில், ஸ்கேனிங்கில் கைப்பையை போட்டு, லக்கேஜிற்காக காத்திருந்து, அவள் யாருக்கோ, கைப்பேசியில் பேசும் போது, அவளுக்கும் சேர்த்து டிராலியை தள்ளி, 'சே... ஏன் இப்படியெல்லாம் செய்கிறேன். இவள் யார்... நான்கு மணி நேரம் அருகில் அமர்ந்ததுமே, வீழ்ந்து விட்டோமே அல்லது வீழ்த்தி விட்டாளா...' என, தன்னையே நொந்து கொண்டான்.
அவனது லக்கேஜ் வந்ததும், எடுத்து கிளம்பினான்.
அதற்குள், அவள் ஓடி வந்து, ''நீங்க எங்கே போகணும்...'' என்றாள்.
''தி.நகர்!''
''வண்டி ஏதும் வருதா?''
''இல்ல; டாக்சியில தான் போகணும்.''
''வேணும்ன்னா என்னோட வாங்க; நானே, 'டிராப்' செய்துடறேன்,'' என்றாள். அவன் தயங்க, ''கமான்...'' என்று அவன் கையை கோர்த்துக் கொண்டாள்.
அவனுக்கு வியர்த்தது; ஆனாலும் மனது இனித்தது. இருவரும் இணைந்து கஸ்டம்சிலிருந்து வெளியே வந்து, டாக்சிக்காரர்களை ஒதுக்கி, அவளுக்காக காத்திருந்த வண்டியில் ஏறி, ஒன்றாய் பயணித்தனர். அவனை இறக்கி விடும் போது, ''ஹரி... இப்போ நேரமில்ல; இன்னொரு நாள் உங்க வீட்டுக்கு வரேன்,'' என்று தானாகவே சொல்லி, ''பை... டாட்டா...'' என்றாள்.
அவள் டாட்டா காட்டியது அவனுக்கில்லை; அவனுக்கு நிச்சயிக்கப்பட்டிருந்த, பிரபாவுக்கு என்பது, அப்போது, ஹரிக்கு தெரியாது.
பிரபாவின் வீடு -
எல்லாரும் நிச்சயதார்த்த மகிழ்வில் இருக்க, பிரபாவின் அப்பா, ''என்னது...'' என்று, மொபைலில் கொதித்தார். ''நம்ம மாப்பிள்ளையா... இருக்காது; நல்லாப் பாத்தீங்களா...''
''ஆமாம் சார்... அவரே தான்; மாப்பிள்ளைக்கு, 'சர்ப்ரைசா' இருக்கட்டும்ன்னு, அவர நீங்க வீட்டுல விட்டுட்டு வரச் சொல்லி, ஏர்போட்டுக்கு கார் அனுப்பியிருந்தீங்க... அங்க போனா, அவர், வேற ஒருத்தியுடன் ஒட்டி உரசி, ஒரே கார்ல போறாரு. அனேகமா, அவங்களுக்கு ஏற்கனவே துபாய்ல கல்யாணம் ஆகியிருக்கும்ன்னு தோணுது,'' என்றார் டிரைவர்.
உடனே, பிரபாவின் அப்பா, ஏர்போர்ட்டில் பணிபுரியும், தன் உறவினருக்கு போன் போட, அவரும், ''ஆமாண்ணே... நானும் பாத்தேன்; நல்லா விசாரிச்சுட்டேன். ரெண்டு பேரும், துபாயிலிருந்து, பக்கத்து பக்கத்து சீட்ல உட்கார்ந்து ரொம்ப அன்யோன்யமாய் இருந்திருக்காங்க,'' என்றார்.
ஹரியின் வீடு, இடி விழுந்தது போல, புயல், சுனாமி அடித்தது போல கதிகலங்கிப் போனது.
இரண்டு நாளில் நிச்சயதார்த்தம் என்கிற சந்தோஷத்துடன், ஹரியின் வரவுக்காக, ஓடோடி வந்திருந்த உறவுகளுக்கு, அச்செய்தியை, தாங்க முடியவில்லை.
ஆள் ஆளுக்கு, தாம் தூம் என குதித்து, 'இது எந்த ஊர் நியாயம்... நான் போய் பேசறேன்; என்ன சேதின்னு கேக்கறேன்...' என்று, எகிறியவர்களை, அடக்கினான், ஹரி.
''என் பேர்ல அவங்களுக்கு நம்பிக்கையில்லன்னா, விட்டுருவோம்; பயணத்தின் போது, சகஜமாய், சிரித்து பேசி வந்தது தப்பென்றால், அது அப்படியே இருந்துட்டு போகட்டும்; இந்த மாதிரி, ஒரு இடத்தில், பெண் கட்ட எனக்கு விருப்பமில்ல,'' என்றான்.
மங்களம் நடக்க வேண்டிய வீடு, அமங்கலமாகி விடவே, மறுநாளே, டிக்கட்டை மாற்றி கிளம்பினான், ஹரி.
விமானத்தில் போர்டிங், இமிகிரேஷன் முடித்து காத்திருந்த போது, மனதில் துக்கம் பொங்கிற்று. மற்றவர்களை சமாதானப்படுத்தி விட்டானே தவிர, அவனால் ஜீரணிக்க முடியவில்லை; 'இப்படியும் கூட மனிதர்கள் இருப்பரா... என்ன, ஏதென்று விசாரிக்க வேணாமா... யாரை சொல்லி என்ன செய்ய... எல்லாம் கவர்ச்சியில் மயங்கியதால் வந்த வினை. எல்லாவற்றுக்கும் காரணம் அந்த தினுஷா தான். அவ மட்டும், என் கையில் கிடைச்சா...' பல்லை கடித்து, விரல்களை முறுக்கிய போது, ''ஹாய்...''என்று அவனுக்கு முன் வந்து நின்றாள், அவள்.
அவனுக்கு, தன் கண்களையே நம்ப முடியவில்லை. ஜீன்சுக்கு பதில், புடவை கட்டியிருந்தாள். முடியை பின்னி, மல்லிகைப் பூ சூடி, கன்னமும், கண்களும் மின்ன, புன்னகைத்து, ''என்கேஜ்மென்ட் முடிஞ்சுதா?'' என்று கேட்டாள்.
''ம்... முறிஞ்சது,'' என்றான் கடுப்பாய்!
''சாரி ஹரி... எல்லாம் கேள்விப் பட்டேன்.''
''கேள்விப் பட்டாயா... எப்படி... எப்போ?''
''நீங்க கோபிக்கலன்னா, நான் ஒண்ணு சொல்லட்டுமா...''
''என்ன...'' என்றான் வெறுப்பாய்!
''இதை நிறுத்தினதே நான் தான்.''
''நீயா?''
''ஆமாம்; நானும், பிரபாவும் நெருங்கிய தோழிகள். ஒண்ணா படிச்சு, ஒண்ணா துபாயில வேலை பாக்கிறோம். அவ, வேற ஒருத்தர காதலிக்கிறா. அவங்க வீட்டுல ஒத்துக்கல... அதுக்காகத் தான் இதை என்னை நிறுத்த சொன்னா,'' என்றாள்.
''அவ ஏவினா, நீங்க கூவினீங்க; சரி... என் நிலைமைய நினைச்சுப் பாத்தீங்களா... சொந்தம் பந்தங்க மத்தியில எவ்வளவு அசிங்கம்... இப்ப, என் துபாய் நண்பர்கள் முகத்தில எப்படி விழிப்பேன்...''
''ஹரி... அதெல்லாம் சமாளிக்கலாம்; நிச்சயம் முடிஞ்சுடுச்சுன்னு சொல்லுங்க,'' என்றாள்.
''என்ன பேசறே நீ... பொண்ணு யாரு... புகைப்படம் காட்டுன்னு கேட்டா...''
''இந்தா இதை காட்டுங்க...'' என்று, தன் போட்டோவை நீட்டியவள், ''உங்களுக்கு பிடிச்சிருந்தா...'' என்று வெட்கப்பட்டாள்.
''நீங்க, எது பத்தியும் யோசிக்க வேண்டியதில்ல; ஜாதக பொருத்தம் கூட பாத்தாச்சு; எல்லாம் ஓ.கே., என்ன சொல்றீங்க...'' என்று கண் சிமிட்டினாள்.
''அடி கள்ளி!'' என்றான் உற்சாகத்துடன் ஹரி!
என்.சி.மோகன்தாஸ்
