sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 14, 2025 ,ஐப்பசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

நிதி உதவி!

/

நிதி உதவி!

நிதி உதவி!

நிதி உதவி!


PUBLISHED ON : ஏப் 07, 2013

Google News

PUBLISHED ON : ஏப் 07, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'ஐயா...' என்று அழைக்கும் குரல் கேட்டு, சாய்வு நாற்காலியில் உட்கார்ந்து, பெரிய புராணம் படித்துக் கொண்டிருந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் வேலாயுதம், எழுந்து வாசற்பக்கம் வந்தார்.

ஊர் பெரிய மனிதர்கள், நாலைந்து பேர் வாசலில் நிற்பதை பார்த்து திகைத்தார்.

''வாங்க வாங்க... என்ன... என்னை தேடி வந்திருக்கீங்க?'' என்று வரவேற்றவர், மரநாற்காலிகளையும், பெஞ்சையும் இழுத்துப் போட்டு, வந்தவர்களை உட்கார வைத்தார்.

ஊரிலுள்ள பள்ளிக்கூடத்தை விரிவுபடுத்தும் முயற்சியில், அவர்கள் ஈடுபட்டிருப்பது வேலாயுதம் அறிந்தது தான். அதற்காக, தன்னை நாடி வர காரணம் என்ன என்பது புரியாமல் தவித்தார்.

மளிகை கடைக்காரர் சட்டென விஷயத்துக்கு வந்தார்.

''வாத்தியார் அய்யா... உங்க கைராசி, நம்ம ஊர் பள்ளிக்கூடத்திலே படிச்ச மாணவர்கள், இப்ப நல்லா வளர்ந்து, பெரிய பெரிய இடங்களிலே செழிப்பா இருக்காங்க. எல்லாம், அவங்களுக்கு, படிக்கிற வயசிலே போட்ட உரம் தான்,'' என்று புகழ்ந்தார்.

பண்ணையாரும் ஆமோதித்தார்.

''ஆமாம்... கண்டிப்புன்னா கண்டிப்பு; அப்படி ஒரு நெருப்பா இருப்பீங்களே... அந்த பயம் தானே, மாணவர்களுக்கு நல்லா படிச்சு முன்னேறணுங்கற ஒழுக்கத்தை கொடுத்தது.''

கூச்சமாக இருந்தது வேலாயுதத்துக்கு...

''என்னங்க இது... ஒரு தலைமை ஆசிரியர் எப்படி இருக்கணுமோ அப்படித்தானே இருந்தேன். நம்ம ஸ்கூல்ல படிச்ச பிள்ளைகள், பிற்காலத்திலே நல்லபடியா வாழணுங்கற அக்கறையில் தானே அப்படி கண்டிப்பா இருந்தேன். ஆண்டவன் புண்ணியத்தில் நல்லா இருக்காங்க.''

''அது விஷயமாத் தானே உங்களை தேடி வந்தது.''

வேலாயுதம் விழித்தார்.

பண்ணையார் விளக்கினார்.

''ஐயா... உங்களுக்கே தெரியும். நம்ம ஊர் பள்ளிக்கூடத்தை விரிவு செய்து கட்டறதா முடிவு செய்திருக்கோம். அதுக்காக நிதி வசூல் செய்துக்கிட்டும் இருக்கோம். அது விஷயமா, உங்க உதவியும் தேவையா இருக்கு.''

''என் உதவியா?''

ஜவுளிக் கடைக்காரர், ஒரு லிஸ்டை நீட்டினார்.

''இதைப் பாருங்க... நம்ம ஊர் பள்ளிக்கூடத்திலே படிச்ச மாணவர்கள் தான் இவங்க எல்லாரும், சென்னையில் ஓகோன்னு இருக்கிறதா தெரிய வந்தது. பாஸ்கர் டாக்டர், மேல்நாட்டில் படிச்சுட்டு வந்து, சொந்தமா மருத்துவமனை வெச்சு நடத்தறான். சிவபாலன், பில்டிங் கான்ட்ராக்டரா இருக்கான். பெரிய பெரிய அடுக்குமாடிக் கட்டடம் கட்டி, பேர் வாங்கினவன். நல்லதம்பி, அரசியல்லே பெரிய புள்ளி. வக்கீலுக்கு படிச்சவன். நல்ல அந்தஸ்த்திலயே இருக்கான். வித்யாபதி, சென்னையிலே பல இடங்கள்லே பல்பொருள் அங்காடி வெச்சு நடத்தறான். இவங்களையெல்லாம் நீங்க நேர்ல போய் பார்த்தா நல்லது.''

''நானா...'' வேலாயுதம் திகைத்தார்.

''ஆமாம்... நீங்க தான் மறந்துட்டீங்களா?''

ஜவுளிக் கடைக்காரர் கேட்டார். ''ரெண்டு வருஷத்துக்கு முன்னாலே, நல்லதம்பி நம்ம பள்ளிக்கூட ஆண்டு விழாவுக்கு, தலைமை தாங்க வந்தானே, அந்த சமயம், உங்களை எப்படியெல்லாம் புகழ்ந்தான். 'நாங்க இப்ப நல்ல நிலைமையிலே இருக்கோம்ன்னா, அப்போ படிக்கிற காலத்திலே, எங்க தலைமை ஆசிரியர் எங்களை வழி நடத்தின முறை தான்...'ன்னு உருகி பாராட்டினானே. உங்க மேலே தனி மரியாதை அவங்களுக்கு.''

மளிகை கடைக்காரர் தொடர்ந்தார்.

''அதனாலே தான் சொல்றோம். நீங்க நேர்ல போய் அவங்களை சந்திச்சா, ரொம்ப சந்தோஷப்படுவாங்க. உங்க ஒரு வார்த்தைக்கே, நிறைய நிதி உதவி செய்வாங்க.''

''வந்து... யோச்சிச்சு சொல்றேனே,'' தயங்கினார் வேலாயுதம்.

''இதிலே யோசிக்க என்னங்க இருக்கு? போக வர செலவை நாங்க ஏத்துக்கறோம். கார் ஏற்பாடு செய்துருக்கோம். கூட துணைக்கு தமிழ் ஆசிரியர் இளஞ்செழியன் வருவார். சென்னையிலே ரெஸ்ட் எடுக்க, சாப்பாடுன்னு, என் தம்பி வீட்டுக்கு சொல்லி விட்டுட்டேன். நீங்க சரின்னு சொன்னா கிளம்பிடலாம்.''

அவர்கள் இவ்வளவு ஏற்பாடுகளையும் செய்து விட்டு, தன்னிடம் வந்து கேட்கும்போது, மறுக்க முடியவில்லை வேலாயுதத்தால். ஒப்புக் கொண்டார்.

சென்னையில், அவர்களை ஒரே நாளில் சந்திக்க வேண்டும் என்பதால், ரொம்ப கஷ்டப்பட்டு முன்பதிவு செய்திருந்தனர்.

அவர்கள் பிரபலமானவர்கள் என்பதாலும், இருபத்து நான்கு மணி நேரமும் ஓடிக் கொண்டே இருப்பர் என்பதாலும், ரொம்ப பிரயாசையுடன் நேரம் வாங்கியிருந்தனர்.

குறிப்பிட்ட நாளில், கார் வாசலில் வந்து நிற்க, வேலாயுதம் பளிச்சென்ற கதர் வேட்டி ஜிப்பாவும், நெற்றி நிறைய திருநீறுமாக, இளஞ்செழியன் உடன் வர கிளம்பினார்.

சென்னையில், பண்ணையாரின் தம்பி வீட்டில் தங்கி, சிற்றுண்டி உண்ட பின் கிளம்பினர்.

முதலில் பாஸ்கரின் மருத்துவமனை. வேலாயுதம் மலைத்துப் போனார். இது என்ன மருத்துவமனையா, நட்சத்திர விடுதியா... ஆடம்பரமும், படாடோபமுமாக ஜொலித்தது.

''கோடிக்கணக்கிலே செலவழிச்சிருப்பாங்க போல. அப்படீன்னா பாஸ்கர் டாக்டருக்கு நல்ல வரும்படிதான்,'' என்றார், கண்களை அகல விரித்தபடி இளஞ்செழியன்.

தரை முதல், கூரை வரை எல்லாமே அதிகப் பொருட்செலவில் இழைத்து போடப்பட்டிருந்தது.

பாஸ்கர், ஒரு மணி நேரத்துக்கு மேல் காக்க வைத்து, பிறகு தான் வந்தான். அதுவரை சும்மா இராமல், வேலாயுதம் அங்கங்கே போய் ஏதேதோ பேசி, விசாரித்து விட்டு வந்தார்.

பாஸ்கர், வேலாயுதத்தை அன்புடன் வரவேற்று, அவர் காலைத் தொட்டு வணங்கினான். குளிர்பானம் வழங்கினான்.

''உங்களுக்கு இல்லாததா... கூடிய சீக்கிரமே, 'செக்' அனுப்பி வைக்கிறேன் சார்,'' என்று தேனொழுக பேசி அனுப்பினான்.

அடுத்து சிவபாலன். நகரை ஒட்டிய ஏதோ ஒரு இடத்தில் கட்டடம் கட்டுவதை மேற்பார்வையிட சென்றவன், அங்கேயே அவர்களை அழைத்து வரச் சொன்னான்.

ஏகப்பட்ட ஏக்கரில் மிகப் பெரிய கட்டடம். வேலாயுதம், சிவபாலன் வரும் வரை, அங்கு வேலை செய்பவர்களிடம் பேச்சு கொடுத்தவாறு இருந்தார்.

சிவபாலன் ஓடிவந்து, அவரை அணைத்தபடி காருக்கு வந்தான். இளநீர் கொடுத்து உபசரித்தான். கட்டடம் கட்டுவதில், பணத்தை முடக்கி விட்டதாக கூறி, கூடிய விரைவில் அனுப்புவதாக வாக்கு கொடுத்து அனுப்பினான்.

நல்லதம்பியை தனியாக சந்திக்கவே கஷ்டமாக இருந்தது. எப்போதும் அவனைச் சுற்றி பத்து பேர் கூடவே இருந்தனர். வாசலிலும், ஐம்பது அறுபது பேர் காத்துக் கிடந்தனர். அவர்களிடம் பேசி பொழுதை போக்கினார் வேலாயுதம். கடைசியில் நல்லதம்பி பரபரப்பாக வந்து, வேலாயுதத்தை கைப்பிடித்து, தனி அறைக்கு அழைத்துப் போனான். அவசரமாக டில்லி செல்ல இருப்பதாக கூறியவன், திரும்பி வந்ததும், கண்டிப்பாக உதவி செய்வதாக உறுதி கூறி அனுப்பினான்.

வித்யாபதியை பார்க்கவே முடியவில்லை. அலுவலகத்தில் விசாரித்ததில், அவர் வியாபார விஷயமாக எங்கே இருக்கிறார் என்று உதவியாளர்களுக்கே தெரியவில்லை. கிளம்புவதற்கு முன், வேலாயுதம், இளஞ்செழியனுடன் பல்பொருள் அங்காடியை சுற்றிப் பார்த்து, பொருட்களைப் பற்றி விசாரித்துக் கொண்டார்.

சென்னை பயணம் ஏமாற்றமாக முடிந்ததில், இளஞ்செழியனுக்கு மிகுந்த வருத்தம்.

காரில் ஊர் திரும்பும்போது, வெறுப்பாக பேசினார்.

''என்னங்க ஐயா இது. நீங்களே நேர்லே வந்தும் கூட, சும்மா பேசியே அனுப்பிட்டாங்க. அவங்க இருக்கற வசதிக்கு, லட்சக்கணக்கிலே கொடுத்திருக்கலாம். உங்களுக்கு கொடுக்கற மரியாதை இவ்வளவு தானா?'' என்று அலுத்துக் கொண்டார்.

சிரித்தார் வேலாயுதம்.

''நீங்க நினைக்கிறது தப்பு இளஞ்செழியன். மரத்தை நட்டு, தண்ணி ஊத்தி வளர்க்கறதோட நம்ம கடமை முடிஞ்சிடறது. அது வளர்ந்து, பலன் தரப்போ, நான் தானே உன்னை வளர்த்தேன். அதனாலே, உன் பலன் பூரா என்னை சேர்ந்ததுன்னு கேட்க முடியுமா?''

''அதுக்காக... நேர்லே போய் கேட்டோமே, அதுக்காகவாவது ஏதாவது, ஒரு தொகை கையோட பணமாகவோ, காசோலையாகவோ கொடுத்திருக்கலாமில்லையா? உங்களை அவமதிக்கற மாதிரில்லே நடந்துக்கிட்டாங்க?''

''கொடுக்காததும், நல்லதுக்குத்தான்னு தோணுது.''

''என்னய்யா சொல்றீங்க?'' திடுக்கிட்டார் இளஞ்செழியன்.

''ஆமாம்பா... அங்கே போன இடங்களிலே, நானே பல பேரோட பேசினேனே... கவனிச்சீங்களா?''

''ஆமாங்க... நீங்களே போய் ஏதேதோ விசாரிச்சிங்க... நானே அப்புறமா கேட்கலாம்ன்னு இருந்தேன்.''

''என்னோட பழைய மாணவர்கள், இப்போ செல்வச் செழிப்பிலே இருக்கறது எனக்கு பெருமைதான் இளஞ்செழியன். ஆனா, அதுக்காக அவங்க தேர்ந்தெடுத்த முறை தவறானது.

பள்ளி நாட்களிலே, அவங்களை நான் நெறியோட தான் கொண்டு போனேன். ஆனா, அப்புறம் அவங்க எப்படி தவறான வழியை தேர்ந்தெடுத்தாங்கன்னு தெரியலை... பாஸ்கர் டாக்டரா, உத்தமமான சேவை செய்ய வேண்டியவன். ஆனா, சிகிச்சை என்ற பேர்லே, எக்கச்சக்கமாக பில் போடறான். சாதாரண நோய்க்குக் கூட, அந்த டெஸ்ட், இந்த டெஸ்டுன்னு சொல்லி, லட்சக்கணக்கிலே பணம் பிடிங்கிடறான். பளபளன்னு ஜொலிக்கிற மருத்துவமனையை பார்த்து மயங்கி, ஜனங்க ஏமாந்து போய், ஏராளமா பணம் கட்டறாங்க.

''அப்பறம் நல்லதம்பி, அரசியல் என்ற பெயர்லே, நிறைய தில்லுமுல்லு செய்றான். கட்சிப் பணி, தொண்டு நிறுவனம், நிவாரணப் பணின்னு பெயர் சொல்லி, கோடிக்கணக்கிலே பணம் சுருட்டறான்.

சிவபாலனும் அடுக்குமாடி கட்டற தொழில்லே, ரொம்ப மோசடி செய்யறான். தரமான கட்டுமானப் பொருள்ன்னு பில்லுலே ஏராளமா காட்டிட்டு, மட்டமான, மலிவான பொருட்களைத்தான் பயன்படுத்தறான். வித்யாபதி கூட, தன்னோட பல்பொருள் அங்காடியிலே, நல்ல பொருட்களை விக்கறதில்லே... மேல் நாடுகளிலே உபயோகமில்லை, அப்படீன்னு தூக்கி எறியற பொருட்களை மலிவா வாங்கி, அதுக்கு பளபளன்னு மேல் அட்டை போட்டு அநியாய விலைக்கு விக்கறான்.''

''அப்படியா சார்... இதையெல்லாம் எப்படி சார் கண்டுபிடிச்சீங்க.''

''அங்கங்கே ஆட்களோட வாயை கிண்டினேன். அவங்க சொன்ன தகவல்களை வெச்சு, உண்மையை கண்டுபிடிச்சேன். எல்லாமே பாவப்பட்ட காசு. கறை படிஞ்ச பணம். பள்ளிக்கூடம் என்கிறது கோவில். கல்விக்கண் திறக்கற உத்தமமான இடம். அதுக்கு இந்த மாதிரி பணம் உபயோகப்படறது எனக்கு பிடிக்கலை.''

''அப்ப... ஊர்லே போய் என்ன சொல்லப் போறீங்க?''

''நம்ம பள்ளியிலே படிச்ச எத்தனையோ மாணவர்கள், நேர்மையான வழியிலே வாழ்ந்துகிட்டிருக்காங்க. இவர்களை மாதிரி கோடீஸ்வரர்களா இல்லாட்டாலும், நல்லபடியாகவே வாழ்ந்துட்டு இருக்காங்க. அவங்ககிட்டே கேட்போம். அவங்களாலே லட்ச லட்சமாக கொடுக்க முடியாது. ஆயிரக்கணக்கிலே கொடுத்தாலே போதும். அதுவே, நமக்கு லட்சமா சேர்ந்துடும். இவங்க அஞ்சு பேர் கொடுக்கறதை, அவங்க ஐம்பது பேர் சேர்ந்து கொடுப்பாங்க. அது போதும் இளஞ்செழியன்,'' வேலாயுதம் தீர்மானமாக பேச, இளஞ்செழியன் கண் கலங்கினார்...

''ஐயா... உங்ககிட்டே மாணவனா இல்லாம போயிட்டேனேன்னு இப்ப வருத்தமா இருக்குங்க அய்யா,'' என்றார்.

***

பானுமதி ராஜகோபாலன்






      Dinamalar
      Follow us