
படம் தயாரிக்கும் ஜி.வி.பிரகாஷ்!
நான் படத்தில், விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்ததைத் தொடர்ந்து, இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷையும், ஹீரோவாக்கும் முயற்சி நடந்தது. ஆனால், கடைசி நேரத்தில் நடிப்பில் ஆர்வமில்லை என்று சொல்லி, தயாரிப்பாளராகி விட்டார். மதயானைக் கூட்டம் என்ற பெயரில், படம் தயாரிக்கும் ஜி.வி.பிரகாஷ், அப்படத்துக்கு தான் இசையமைக்கவும் இல்லை. அந்த வாய்ப்பை, ரகுநந்தனுக்கு கொடுத்து விட்டார்.
— சினிமா பொன்னையா
ஐஸ்வர்யா ராய்க்கு வயது 39!
ஏஜென்ட் வினோத் என்ற, இந்தி படத்தை இயக்கியவர் ஸ்ரீராம். அவர் அடுத்தபடியாக, தான் இயக்கும் படத்தில், ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்கும் முயற்சிகளில் இறங்கினார். ஆனால், கதையை கேட்டு, நடிக்க சம்மதம் சொன்ன ஐஸ்வர்யா ராய், அப்படத்தின் ஹீரோவுக்கு, வயது 25 என்றதும், மறுத்து விட்டார். மேலும், 'இப்போது எனக்கு முப்பத்தி ஒன்பது வயசு. ஒரு குழந்தைக்கும் தாயாகி, உடல் பருமனாகி விட்டேன். இந்த சூழலில், வயது குறைந்த ஹீரோவுடன் நான் நடித்தால், அக்கா - தம்பி போல் தெரியும்...' என்று, மறுப்புக்கு காரணம் கூறியுள்ளார்.
— எலீசா
புடவைக்கு மாறும் நடிகை பியா!
கூட்டம் படத்தில், துறு துறு கிராமத்து பெண்ணாக நடிக்கிறார் பியா. இப்படத்துக்காக, முதன்முதலாக பாவாடை - தாவணி அணிந்து நடித்ததை பெருமையாக கருதிய பியா, இனி மாடர்ன் வேடங்களை குறைத்து, இது போன்ற கிராமத்து சென்டிமென்ட் வேடங்களுக்கு, முக்கியத்துவம் கொடுக்க போவதாக கூறி வருகிறார். மேலும் சினிமா விழாக்களுக்கு, புடவை கட்டி செல்ல முடிவெடுத்திருப்பதாகவும், சொல்லி பூரிக்கிறார். ஆட்டம் எல்லாம் ஆடி ஓய்ந்து, நாட்டுப் புறத்துக்கு வந்தான்!
— எலீசா
மெச்சூரிட்டியான வேடத்தில் துளசி நாயர்!
கடல் படத்தையடுத்து, ரவி கே. சந்திரன் இயக்கும் யான் படத்தில், நடித்து வருகிறார் துளசி நாயர். முதல் படத்தை விட, இப்படத்தில் அவருக்கு வெயிட்டான வேடம். அதோடு, கல்லூரி படிப்பை முடித்த பெண்ணாம். அதனால், 15 வயதே ஆன துளசியை, காஸ்டியூம் மற்றும் முகத்தை மெச்சூர்டாகக் காட்டும் மேக்கப் போட்டு, அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமானவராக மாற்றியுள்ளார் இயக்குனர். ஆள்பாதி, அலங்காரம் பாதி!
— எலீசா
விஜய் ரசிகர் சாந்தனு!
டைரக்டர் பாக்யராஜின் மகனான சாந்தனு, விஜய்யின் தீவிர ரசிகர். அஜீத் படங்களை முதல் நாள், முதல் ஷோவில் பார்த்து விடும் ரசிகராக சிம்பு இருப்பது போல், விஜய் படங்களை பார்க்கும், ரசிகராக சாந்தனு இருக்கிறார். இந்நிலையில், ஜில்லா படத்தில் தன் அம்மா பூர்ணிமா, விஜய்க்கு அம்மாவாக நடிப்பதால், அதிக உற்சாகத்தில் இருக்கும் சாந்தனு, அப்படத்தின் பூஜை அன்று விஜய்யை சந்தித்து, அவருடன் புகைப்படம் எடுத்து, அதை, தன் வீட்டில் மாட்டியுள்ளார்.
— சி.பொ.,
குத்தாட்ட நடிகைகளான கோலிவுட் ஹீரோயினிகள்!
முன்னணி நடிகைகளுக்கு, ஒரு பாட்டுக்கு நடனமாட அதிக சம்பளம் தரப்படுவதால், பலரும் இப்போது அதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். எதிர்நீச்சல் படத்தில் நயன்தாரா, சிங்கம் - 2ல் அஞ்சலி, தேசிங்குராஜாவில் பானு, மதகஜராஜாவில் சதா, அகராதியில் கீர்த்தி சாவ்லா என, முன்னணி நடிகைகள், ஒரு பாட்டுக்கு நடனமாடும் படங்களின் பட்டியல், நீண்டு கொண்டே போகிறது. ஆதாயம் இல்லாமல் யாராவது ஆற்றைக் கட்டி இறைப்பரா!
— எலீசா
மீண்டும் இணையும் சமுத்திர கனி - சசிகுமார்!
ஜெயம் ரவி - அமலாபாலை ஜோடி சேர்த்து, நிமிர்ந்து நில் படத்தை இயக்கி வரும் சமுத்திர கனி, அடுத்து தன் நண்பரும், நடிகருமான சசிகுமாரை வைத்து ஒரு படம் இயக்குகிறார். ஏற்கனவே அவரை வைத்து தான் இயக்கிய, நாடோடிகள் போன்று இதுவும் காதல் கதை தான். அதே சமயம், நட்புக்கும் இப்படத்தில் ஒரு புதிய வடிவம் கொடுத்திருப்பதாக கூறுகிறார்.
— சினிமா பொன்னையா
அவ்ளோதான்!