PUBLISHED ON : ஆக 11, 2013

இருநூறு கதைகள் கேட்ட சிபிராஜ்!
நாணயம் படத்தில் வில்லனாக நடித்த சிபிராஜ்க்கு, அதன்பின், சினிமாவில் சுத்தமாக பட வாய்ப்பில்லை. அதனால், சில ஆண்டுகளாக சினிமா ஏரியா பக்கமே தலைகாட்டாமல் இருந்த சிபி, இப்போது, தன் தந்தையை தயாரிப்பாளராக்கி, ஒரு படத்தில், ஹீரோவாக நடிக்க தயாராகி விட்டார். நாய்கள் எச்சரிக்கை என்று, பெயரிடப்பட்டுள்ள அப்படத்தில், பயிற்சி பெற்ற ராணுவ புலனாய்வு நாய் ஒன்றுடன் இணைந்து, முக்கிய வேடத்தில் நடிக்கும் சிபிராஜ், இரண்டு ஆண்டுகளாக கேட்ட இருநூறு கதைகளில், இந்தக் கதையை தேர்ந்தெடுத்துள்ளார்.
— சினிமா பொன்னையா
தமன்னாவுக்கு ரெட் கார்டு?
தெலுங்கில் கமிட்டான சில படங்களில், 'ஒரு கோடிக்கு, தம்புடி குறைந்தாலும் நடிக்க மாட்டேன்...' என்று, வம்படியாக பேசி வந்தார் தமன்னா. இதனால், அதிருப்தியடைந்த ஆந்திர படாதிபதிகள் ஒன்று கூடி, தமன்னாவுக்கு, 'ரெட் கார்டு' போட முடிவு செய்தனர். இதனால், ஆடிப்போன நடிகை, திடுதிப்பென்று படக்கூலியை கணிசமான அளவு குறைத்துக் கொண்டதோடு, கொடி பிடித்த படாதிபதிகளை தனித்தனியாக சந்தித்து, அவர்களின் படங்களில் ஐம்பது சதவீதம் தள்ளுபடி செய்து, நடித்து தருவதாகவும் சொல்லி, அவர்களை சமாதானம் செய்து வைத்துள்ளார். ஆடி அடங்கியது அத்தோட!
— எலீசா
ரூட்டை மாற்றும் மோகன்லால்!
முழு நேர மலையாள ஹீரோவாக நடித்து வந்த மோகன்லால், இனி தன் ரூட்டை மாற்றப் போகிறார். தற்போது தமிழில் விஜய்யுடன், ஜில்லா படத்தில் நடித்து வருபவர், அடுத்து, புனித் ராஜ்குமார் நடிக்கும், மைத்ரி என்ற கன்னட படத்தில் விஞ்ஞானியாக நடிக்கிறார். இதையடுத்து, இந்தியிலும் நடிக்க விரும்பி, இந்தி படங்களை இயக்கி வரும் மலையாள இயக்குனர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இப்படி பல மொழிகளில் தான் நடிக்கும் படங்களை கேரளாவிலும், 'ரிலீஸ்' செய்ய வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட படாதிபதிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.
.—சி.பொ.,
நிறைவேறாத ஆசை!
விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்துள்ள ஆண்ட்ரியா, அடுத்து, மேல்தட்டு ஹீரோக்களுடன் மட்டுமே, ஜோடி சேர வேண்டும் என்ற முடிவில் இருந்தார். ஆனால், அப்படி பல படங்களுக்கு அவர் கல்லெறிந்தும், எந்த வாய்ப்பும் கை கூடவில்லை. அதனால், வேறு வழியில்லாமல், மீண்டும் மூன்றாம் தட்டு ஹீரோக்களுடன் நடிக்க தயாராகி விட்டவர், பிரபல ஹீரோக்களுடன், குத்துப் பாட்டுக்கு ஆடியாவது, தன் ஆசையை நிறைவேற்றிக் கொள்ள முடிவெடுத்திருப்பதாக கூறுகிறார். கிடைச்சா கஞ்சி தண்ணி, கிடைக்காட்டா குழாய் தண்ணி!
— எலீசா
'நோ எண்டரி' போட்டு வைத்த நஸ்ரியா!
நய்யாண்டி, ராஜா ராணி படங்களில் நடித்து வரும், நேரம் பட நாயகி நஸ்ரியாவுடன், டூயட் பாட, சில வளர்ந்து வரும் ஹீரோக்கள் மிகுந்த ஆசையில் இருந்தனர். ஆனால், பிரியாணி படத்துக்கு பின், கார்த்தியுடன் நடிக்கவிருக்கும் நஸ்ரியா, பிரபல ஹீரோக்களுடன் நடிப்பதற்கு கதை கேட்டு வருவதால், வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கு, 'நோ என்ட்ரி போர்டு' மாட்டி விட்டார். அதிர்ஷ்டம் ஆறாய் பெருகுகிறது!
— எலீசா
நாயகி தேடும் சந்தானம்!
தெலுங்கில் ராஜமவுலி இயக்கிய, மரியாதை ராமண்ணா படம், மிகப்பெரிய வெற்றியாக அமைந்ததால், அப்படத்தை கன்னடம், இந்தி மற்றும் பெங்காலி மொழிகளில் ரீ-மேக் செய்தனர். இப்போது, அப்படத்தை, தமிழில் ரீ-மேக் செய்து, ஹீரோவாகவும் நடிக்கிறார் சந்தானம். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்று படத்துக்கு பெயர் வைத்து விட்டு, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் நடித்த, விசாகா சிங் போன்று நல்ல மப்பும், மந்தாரமுமான ஹிரோயினியை தேடி வருகிறார் சந்தானம்.
— சி.பொ.,
தேடலை தீவிரப்படுத்திய விஜய்!
முன்பெல்லாம், மற்ற மொழிப் படங்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டாத விஜய், இப்போது, எல்லா படங்களையுமே பார்த்து விடுகிறார். படத்துக்கு படம், ஏதாவது வித்தியாசம் செய்து கொண்டேயிருக்க வேண்டும் என்று நினைக்கும் அவருக்கு, இப்படி மற்ற மொழிப் படங்களை பார்க்கும் போது, புதிய ஐடியாக்கள் கிடைப்பதாக கூறுகிறார். அதிலும், குறிப்பாக, இந்தி நடிகர்கள் ஷாரூக் கான், சல்மான் கான், தெலுங்கு நடிகர்கள் ஜுனியர் என்.டி.ஆர்., ரவி தேஜா, ராம் சரண் ஆகியோரின் படங்களை, மிஸ் செய்வதே இல்லை.
—சி.பொ.,
நாசூக்காக கேட்கும் 'தில்லு முல்லு' சிவா!
படத்துக்கு படம் சம்பளத்தை உயர்த்தி, பல கோடிகளை தொட்டு நிற்கிறார் சிவகார்த்திகேயன். அதனால், இப்போது அவரைப் பார்த்து, விமல் போன்ற நடிகர்களும் கோடிகளை சொல்லியடிக் கின்றனர். இதில், சிவா, படாதிபதிகளிடம் நேரடியாக இத்தனை கோடி வேண்டும் என்று கேட்காமல், தன்னை, 'புக்' செய்துள்ள கம்பெனிகள், எவ்வளவு சம்பளம் தருவதாக அக்ரிமென்ட் போட்டுள்ளனர் என்பதை அவர்கள் முன் எடுத்து வைத்து, 'இதற்கு மேல் என்ன தர முடியுமோ, அதை, நல்ல மனதோடு தாருங்கள்...' என்று நாசூக்காக கேட்கிறார்.
— சினிமா பொன்னையா
அவ்ளோதான்!
