PUBLISHED ON : ஆக 11, 2013

வானம்பாடி படத்தில், டி.எம்.எஸ்.,சின் வேண்டுகோளுக்கு இணங்க, தன் பாடல் வரியில், கண்ணதாசன் திருத்தம் செய்ததைப் போல, 'சங்கே முழங்கு' படப் பாடலிலும், எம்.ஜி.ஆரின் திருப்திக் காக ஒரு திருத்தம் செய்து கொடுத்தார்.
தாயில்லாத அனாதைக்கெல்லாம்
தோள் கொடுத்து தூக்கிச் செல்லும்
அந்த நாலு பேருக்கு நன்றி...
நாலு பேருக்கு நன்றி...
அந்த நாலு பேருக்கு நன்றி... என்று, கவியரசர் எழுதிய பாடலில் வரும் கடைசி சரணத்தில்,
வார்த்தையாலே நன்றி சொல்வோம்
போகும் போது வார்த்தை இல்லை...
போகு முன்னே சொல்லி வைப்போம்...
வாழும் போது வருவோர்க்கெல்லாம்
என்று முடித்திருந்தார்.
போகும் முன்னே சொல்லி வைப்போம்... என்ற வார்த்தையை. கொஞ்சம் மாற்றலாமே என்று கருத்து தெரிவித்தார் எம்.ஜி.ஆர்., உடனே, கவியரசர் அந்த சரணத்தை சிறு மாற்றங்களுடன்,
வார்த்தையாலே நன்றி சொல்வோம்...
வார்த்தை இன்றிப் போகும் போது
மவுனத்தாலே நன்றி சொல்வோம்...
வாழும் போது வருவோர்க்கெல்லாம்
என்று எழுதிக் கொடுக்க, மக்கள் திலகத்தின் முகத்தில் பரம திருப்தி. தன் பாடல்களில் வலிமையான எதிர்மறை வார்த்தைகள் வருவதை, எம்.ஜி.ஆர்., தவிர்ப்பது வழக்கம் என்பதற்கு இந்த சம்பவமும் ஒரு சிறந்த உதாரணம்.
***
திருநெல்வேலியில் 1933ம் ஆண்டில், தந்தையுடன் ஏற்பட்ட கசப்பின் காரணமாக, சொத்துக்களை பாகம் பிரித்துக் தரும்படி கேட்டார், எழுத்தாளர் புதுமைப்பித்தன். தந்தை மறுத்தார். கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து, தன் பங்குக்கு உரிய நிலத்தை தந்தையிடமிருந்து பெற்றார். ஆனால், விரைவிலேயே அந் நிலத்தை முஸ்லிம் ஒருவருக்கு விற்று விட்டார்.
'குடும்ப சொத்தை இப்படிச் செய்து விட்டானே, நம் வயலுக்கு மத்தியில் அந்நியனை நுழைத்து விட்டானே...' என்று, அவரது தந்தையும், உறவினர்களும் ஏசினர்.
'அவர்களைப் பழி வாங்க, எனக்கு இந்த ஒரு வழி தான் திறந்து கிடந்தது. உபயோகப் படுத்தி விட்டேன். என் குடும்பத் தார், என்னைத் தவிக்க விட்டனர். அந்தப் பாவத்தின் கதையை, ஞாபகப்படுத்திக் கொண்டிருக் கட்டும் என்று தான், அவர்களுடைய, தொடர்ச்சியான நிலத்தை துண்டாக்கி, இடையே, வேறு ஒரு சொந்தக்காரனை சொருகி விட்டேன்...' என்பார் புதுமைப் பித்தன்.
— தொ.மு.சி.ரகுநாதன் எழுதிய, 'புதுமைப் பித்தன் வரலாறு' நூலிலிருந்து...
***
என்.எஸ்.கிருஷ்ணனும், கண்ணதாசனும் பேசிக் கொண்டிருந்த போது, ஒருவர், 'நான் படம் எடுக்கப் போகிறேன்...' என்றார். உடனே, கலைவாணர், 'அப்போ மகுடி வாசிக்கப் போவது யார்?' என்று கேட்டார்.
ஒரு நாள், சக நாடக நடிகர்களுடன் திண்ணையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார் என்.எஸ்.கிருஷ்ணன். ஒரு பிச்சைக்காரன் வந்து, 'ஐயா, சாப்பிட்டு இரண்டு நாளாச்சுங்க...' என்று கூறி, பிச்சை கேட்டான்.
உடனே, என்.எஸ்.கே., 'சாப்பிடக் கூட நேரமில்லாம, அப்படி என்னய்யா உனக்கு தலை போற வேலை?' என்று கேட்டார்.
— என்.எஸ்.கிருஷ்ணனின், 'நகைச்சுவை விருந்து' நூலிலிருந்து...
***
நடுத்தெரு நாராயணன்
