
சிவகார்த்திகேயன் சம்பளம் ஐந்து கோடி!
எதிர்நீச்சல் படத்துக்கு முன், லட்சக்கணக்கில் சம்பளம் வாங்கி வந்த சிவகார்த்திகேயன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பின், ஐந்து கோடி கேட்கிறார். 'ரொம்ப அதிகமா இருக்கே...' என்று, ஓரிரு கோடியை குறைக்கச் சொல்லும் படாதிபதிகளிடம், 'இந்த மாதிரி பேரம் பேசும் நபர்களை கண்டாலே, எனக்கு பிடிக்கிறதே இல்லை...' என்று கூறி, முகத்தை திருப்பிக் கொள்கிறார். பெரிய படாதிபதிகளிடம் இப்படி, எடுத்தோம், கவிழ்த்தோம் என்று பேசுவது, அவர் எதிர்காலத்தை தான் பாதிக்கும் என்ற முணுமுணுப்பு, கோலிவுட்டில் கேட்கிறது.
-சினிமா பொன்னையா
ஐஸ்வர்யாவுக்கு நம்பிக்கை கொடுத்த படாதிபதிகள்!
பட்டத்து யானை படத்தில் நடித்த அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா, அந்த படத்திற்கு பின், பெரிய அளவில் படங்கள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். முதல் படமே ஓடாததால், எந்த தமிழ் தயாரிப்பாளர்களும், அவரை புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்யவில்லை. அதனால், தெலுங்கு, கன்னடம் படங்களில் கவனத்தை திருப்பியுள்ள ஐஸ்வர்யா, தன் தந்தையின் அபிமானிகளை அணுகி, சான்ஸ் கேட்டுள்ளார். அதில் சிலர், மேல்தட்டு ஹீரோக்களுடன் ஜோடி சேர்ப்பதாக ஐஸ்வர்யாவுக்கு வாக்குறுதி வழங்கியுள்ளனர். அதனால், மனசு நிறைய நம்பிக்கையுடன், அவர்களின் அழைப்புக்காக காத்திருக்கிறார் ஐஸ்வர்யா அர்ஜுன். அடுத்தடுத்து முயன்றாலும், ஆகும் நாள் தான் ஆகும்!
- எலீசா
வளர்ந்து வரும் ஹீரோக்களை தவிர்க்கும் லட்சுமி மேனன்!
கும்கி, சுந்தரபாண்டியன் படங்களில் நடித்த லட்சுமி மேனன், அடுத்து விமலுடன், மஞ்சப்பை சித்தார்த்துடன், ஜிகிர்தண்டா விஷாலுடன், பாண்டிய நாடு படங்களில் நடித்திருப்பதால், இப்போதே, முன்னணி நடிகையாக உயர்ந்து நிற்கிறார். மேலும், கடல் கவுதமுடன் சிப்பாய் படத்தில், அவர் நடிப்பதைப் பார்த்து, சில வளர்ந்து வரும் ஹீரோக்கள், முற்றுகையிட, 'அந்த படம் குட்டிப்புலியில், நடித்த போதே ஒப்பந்தமான படம். ஆனால், இனிமேல் அதேபோல் வளர்ந்து வரும் நடிகர்களுடன் நடிக்கிற ஐடியா இல்லை...' என்று, திருப்பி அனுப்பி விட்டார். தன்னைத்தானே மெச்சிக் கொள்ளுமாம் தவிட்டுக் கொழுக்கட்டை!
- எலீசா
தெலுங்கு படங்களுக்கு கல்லெறியும் காஜல்!
துப்பாக்கி படத்தில் நடித்த போது, பரபரப்பாக பேசப்பட்ட காஜல் அகர்வால், ஹன்சிகாவை வீழ்த்தி விடுவார் என்று கூட சிலர் நினைத்தனர். ஆனால், இவரால், அவரை ஓரங்கட்ட முடியவில்லை. அதன்பின், ஜில்லா மற்றும் ஆல் இன் ஆல் அழகுராஜா என, இரண்டு படங்களில் நடித்த போதும், இருக்கிற இடமே தெரியாமல் இருக்கிறார். தமிழில் அடுத்தபடியாக, முன்னணி ஹீரோக்களின் படம் கிடைக்காமல், உதயநிதியுடன், நண்பேன்டா பட வாய்ப்பு மட்டுமே கிடைத்திருப்பதால், மீண்டும், தெலுங்கு படங்களுக்கு, கல்லெறிந்து வரும் காஜல், முன் மாதிரி, அதிரடியாக சம்பளம் பேசாமல், அடக்கி வாசிக்க துவங்கியுள்ளார். வருந்தி வருந்திப் பார்த்தாலும், வருகிற போதுதான் வரும்!
- எலீசா
விஜயின் புதிய கொள்கை!
ஒரு காலத்தில், 'பஞ்ச்' டயலாக் பேசி, ரசிகர்களின் ரசனைக்கு தீனி போட்டவர் ரஜினி. அதேபோல், அஜீத்தும், அவ்வபோது, 'பஞ்ச்' பேசி வந்தவர், அதிலிருந்து மீண்டு விட்டார். ஆனால், விஜய் மட்டும் ரசிகர்கள் எதிர்பார்ப்பதாக சொல்லி, படத்துக்கு படம் பேசி வந்தார். ஆனால், தலைவா படம் சிக்கிக் கொண்ட போது, அதிருப்தியான காட்சிகள் மட்டுமின்றி, 'பஞ்ச் டயலாக்' பேசிய காட்சிகளையும் நீக்கினர். மேலும், 'ஜில்லா படத்திலிருந்து, இனி, 'பஞ்ச் டயலாக்' பேசுவதில்லை என்ற, புதிய கொள்கைக்கு மாறியுள்ளார்.
-சினிமா பொன்னையா
* ஜிகிர்தண்டா. படத்தில் நடிக்கும் சித்தார்த், இரண்டாம் பாதியில், மதுரை இளைஞனாக நடித்துள்ளார்.
அவ்ளோதான்

