sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அதையும் தாண்டிய அழகு!

/

அதையும் தாண்டிய அழகு!

அதையும் தாண்டிய அழகு!

அதையும் தாண்டிய அழகு!


PUBLISHED ON : நவ 03, 2013

Google News

PUBLISHED ON : நவ 03, 2013


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தெருவையே ரணகளம் செய்து, பெய்யும் மழைநீர் வீணாக கடலை அடைவதும், எட்டு மாத கர்ப்பிணியான ராகினி, வார்த்துப் போட்ட கனத்த தோசையும், மதியத்திற்கு, அவள் சமைத்துக் கொடுக்கும் லெமன் ரைஸ் என்று, எதுவுமே மாறாது என்று தான் அவனுக்குத் தோன்றியது. கசந்த புன்னகையுடன், ஆபிஸ் பேருந்தில் ஏறிய, ஐந்தாவது நிமிடம், நிலைமையே மாறி விட்டது.

முதல் சீட்டை, யாருக்கும் கொடுக்காமல், எப்போதும் தானே, ஆக்கிரமிக்கிற ராகவ் தான், முதலில் கத்தினான்...

''ஏ ஷ்யாம்.. உனக்கு பிராஜெக்ட் மானேஜரா பிரமோஷன் வந்துருக்கு... வாழ்த்துகள்.''

'என்ன என்ன' என்று கேட்டு, எல்லாரும், அவனை திரும்பி பார்த்தனர். அத்தனை ஜோடி விழிகளும், விரிந்தன.

ரத்னாகர், அவன் கைபற்றி, குலுக்கி, ''ரியலி கிரேட் ஷ்யாம். முப்பது வயசிலேயே, இது பெரிய அச்சீவ்மெண்ட். ஆல் தி வெரி பெஸ்ட்.''

ஷோபனா மலர்ச்சியாக சிரித்தாள். ''எல்லாம் பாப்பா பிறக்கிற வேளை ஷியாம். உன் திறமை பிளஸ் அதிர்ஷ்டம் ரெண்டும் சேர்ந்து கிடைச்சிருக்கிற பதவி உயர்வு. வாழ்க வளமுடன்.''

திடீரென, பஸ்சின் முகமே மாறிவிட்ட மாதிரி இருந்தது. கை குலுக்கி குலுக்கி மாளவில்லை. அத்தனை முகங்களிலும், சந்தோஷத்தையும், சிரிப்பையும் பார்த்த போது, அவனுக்கு நெஞ்சு கரைந்தது. எப்படி எனக்குக் கிடைத்தது... ஈஸ்வர் இருக்கிறான்; நீனா இருக்கிறாள்; ஏன், பரத்குமார் கூட சீனியர் தான். ஆனால், எனக்குக் கிடைத்துள்ளது. வேலையில் குறை வைக்காததும், முணுமுணுப்போ, புலம்பலோ இல்லாமல், டீம் மெம்பர்களை அரவணைத்து, கொடுக்கப்பட்ட அத்தனை பிராஜெக்டுகளையும், கச்சிதமாக முடித்துக் கொடுத்தது தான், இந்த பதவி உயர்வுக்கு காரணமா...

தன் கழுத்தில் தொங்குகிற, அடையாள அட்டையைப் பார்த்தான். மெல்ல அதை எடுத்து, முத்தமிட்டான். 'இது, எதற்கு இனி' என்று தோன்றியது. இனி, புதிய, அடையாள அட்டையில், புதிய புகைப்படத்தில், பிராஜெக்ட் மானேஜராக, அவனை, மகுடம் சூட்டி அழகு பார்க்கப் போகிறது கம்பெனி!

அவன் விரல்கள், பழைய மாலையை கசக்கின.

ராகினிக்கு, சந்தோஷத்தில், கண்ணீரே வந்து விட்டது.

''நிஜமாவா சொல்றீங்க... பிராஜெக்ட் மானேஜரா... இந்த வயசுலயா... எனக்கு தெரியுமுங்க, இது எவ்வளவு பெரிய சாதனைன்னு!'' என்று கூறி, மகிழ்ச்சியில், திக்குமுக்காடினாள்.

''அம்மா... என்ன வேலை செய்துக்கிட்டிருக்க... தேங்கா சட்டினியா... சரி சரி... அப்படியே, நெய்யை தாராளமா விட்டு, கேசரி பண்ணிடும்மா. உன் மாப்பிள்ளை, கம்பெனியில, பெரிய ஆளாய்ட்டு வரார்மா...'' என்று, தன் பெரிய வயிற்றைத் தூக்கிக் கொண்டு, அடுப்படிக்கு விரைந்து, அம்மாவை அணைத்தபடி சொன்னாள்.

ராகினியின் அம்மா முகம் மலர, அவனிடம் வந்து, ''ரொம்ப சந்தோஷம் தம்பி... ராகினி அப்பா, அப்பவே சொன்னாரு. மாப்பிள்ளை ரொம்ப திறமையானவரு. சீக்கிரமா முன்னேறிடுவாருன்னு. இப்பவே சுவீட் செய்றேன் தம்பி,'' என்று சொன்ன போது, அவனுக்கு, மிகப் பெருமையாக இருந்தது.

மாமனாரும், மாமியாரும் மெச்சுகிற மருமகன். அவர்கள் கண் எதிரில், அவன் உயர்கிறான். அவன் வளர்ச்சியைக் கண்டு, மெய் மறந்து, அவனையே பார்க்கின்றனர் அவர்கள்!

அவனுக்கு, ஒரு மேகம் வந்து, தன்னை தூக்கிக் கொண்டு, பறப்பதை போலிருந்தது.

அடுத்த பிராஜெக்ட், என்னவாக இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருந்த போது, நண்பர்கள் வந்து நின்றனர்.

''வீக் எண்ட் பார்ட்டிக்கு எங்கப்பா போகலாம்?''

''பார்க் அல்லது தாஜ்?''

''இல்ல... புதுச்சேரி போறோம்; பீச் ரிசார்ட்ல, கலக்குறோம்.''

''ஒய்... புதுச்சேரி, கோவா மச் பெட்டர்?''

''நீங்கள்லாம் எங்க வேணா போங்கப்பா. நாங்க, டீமில்,எட்டு பேர் இருக்கோம். மாயாஜால்ல ஸ்டார் பஃபே, டவேரா டிராப்... இது போதும், எங்களுக்கு...'' என்றனர், டீம் லேடீஸ்.

''சரி சரி,'' என்று, சிரித்தான் ஷியாம்.

அடுத்து வந்த நாட்கள், விழாக்கோலம் பூண்டிருந்தன. தரையில் இறங்காமல், அவன் பறந்து கொண்டே இருந்தான். வீட்டில், புது ராஜ்யத்தை உண்டாக்கி, ராகினி, அவனை, மகாராஜாவாக பட்டம் சூட்டியிருந்தாள். அக்கம் பக்கத்து பிளாட்டுகளில் வசிப்போர், அவனை, புருவம் உயர்த்தி, வாழ்த்து தெரிவித்தனர்.

பத்து லட்ச பேக்கேஜிலிருந்து, அப்படியே, முப்பது லட்ச பேக்கேஜ்; கார் வித் யூனிபார்ம் டிரைவர்; அன்லிமிட்டெட் பெட்ரோல்; டைனர்ஸ் கிளப் மெம்பெர்ஷிப்; மெடிகல் ரீயெம்பெர்செமெண்ட் பார் பேமிலி; அப்ராட் எல்டிசி., வாட் நாட்!

ஷியாமிற்கு, பழைய நாட்கள், நினைவுக்கு வந்தன.

வாலாஜாபாத் தாண்டி, ஒரு புழுதி படர்ந்த குக்கிராமம். அப்பா போஸ்ட்மேன். அம்மா துணிக்கடையில் சூப்பர்வைசர். கால் விழுந்த தாத்தா.

அவனும், அவனுக்குக் கீழே, மூன்று தம்பி, தங்கைகள். சே... வாழ்க்கையா அது. ஆனால், ஒரு விதத்தில், அது தான், மனதில், வெறியேற்றி, 'இந்த நரகத்தை விட்டு, வெளியே வா' என்று, கர்ஜித்தபடி இருந்தது.'படிப்பை கெட்டியாகப் பற்றிக் கொள்; எந்த சூழலிலும், அதை விட்டு விடாதே. படகு போல அதில் ஏறி, நெருப்பாற்றைக் கடந்து விடு' என்று, அது கதறியதை, அவன் காது கொடுத்துக் கேட்டான். பிளஸ்2வில், மாவட்ட அளவில் முதலிடம். அண்ணா யுனிவர்சிட்டியில், மெரிட்டில், ஐ.டி சீட். கேம்பசில் முதல் கிரீமிலேயரில், முதல் மகுடம். தேடி வந்த கல்யாணம்.

இதோ அடுத்த வைபவம்...

''ஷியாம் சார்... ப்ரூக் ஆப் கான்செப்ட், ரெடி பண்ணணும் சார். கடைசி நாளுக்கு இன்னும் நாலு நாட்கள்தான் இருக்கு,'' என்று சொன்ன நளனை, அலட்சியமாக ஏறிட்டுப் பார்த்து, ''பாத்துக்கலாம். உன் வேலையை மட்டும் நீ பாரு,'' என்ற போது, மொபைல் போன் அழைத்தது.

மாமனாரின் எண்ணைப் பார்த்தபடி, ''சொல்லுங்க மாமா,'' என்றான்.

''தம்பி... உங்களுக்கு, பையன் பிறந்திருக்கான். தாயும், சேயும் நலம். ராகினி உங்களைப் பார்க்கணும்ங்கிற, கொஞ்சம் சீக்கிரம் வாங்க,'' என்றார் பரபரப்பாக.

''அப்படியா... பையனா, ராகினி ஆசைப்பட்டபடியா... இதோ கிளம்பிட்டேன் மாமா,'' என்று, பத்து வயது சிறுவனைப் போல, படிகளில் இறங்கி ஓடினான்.

குழந்தை, அச்சு அசலாக, தன்னைப் போலவே இருந்ததைக் கண்டு, உண்மையிலேயே, அசந்து போனான் ஷியாம். மூக்கு, அதன் ஓரத்தின் சின்ன வளைவு, அப்படியே, தன் சிறு வயது புகைப்படத்தைப் பார்த்தது போல இருந்தது, ஷியாமை,பரவசத்திற்குள் கொண்டு போனது.

''ஷியாம் தம்பி... ராகினி எப்பவும் உங்களையே நினைச்சுகிட்டிருக்கிறவ. அதனாலதான், குழந்தை, அப்படியே, உங்களை உரிச்சு வெச்சிருக்கு. குழந்தை கொள்ளை அழகு இல்ல மாப்ளே,'' என்று, மாமனார் வாய் கொள்ளாத சிரிப்புடன், கூறினார்.

மாமியாரும் முகம் முழுக்க சந்தோஷம் வழிய, ''தலச்சன் ஆம்பளப் புள்ள, அதுலயும், கால் வழியா பொறந்த புள்ளெ. வீட்டுக்கு ஐஸ்வரியத்தைக் கொண்டு வரும்ன்னு சொல்வாங்க. வரும்போதே, தகப்பனுக்கு பதவி உயர்வையும் கொண்டு வந்திருக்கு பாத்தீங்களா!' என்று, ஆனந்தக் கண்ணீர் விட்டாள்.

மனைவியையும், குழந்தையையும் நெருங்கும் போது, மொபைல் போன் அழைத்தது.

அவனுடைய டீம் சீனியர் அருண் குரல் கேட்டது.

''குட் மார்னிங் சார்... சிட்டி பாங்க் இன்டர்நெட் பாங்கிங் புரொக்ராம், பிரசண்டேஷன் இருக்கு சார். வந்துடுவீங்க இல்ல சார்.''

''இல்ல அருண். நீயே மேனேஜ் பண்ணிக்க. நான், இப்ப, புது அப்பா. அத, கொஞ்சம், 'என்ஜாய் பண்ணணும். யூ நோ தட்!''

''ஓ.கே., சார். ஒரு நிமிஷம் சார், குருநாதன் பேசணுமாம்.''

''சொல்லு குரு.''

''சப்வே ரெஸ்டாரண்ட்டுக்கு பி.ஓ.சி., குடுத்திருந்தோமே சார்.''

''ஆமாம்.''

''அப்ரூவல் மெயில் வந்திருக்கு சார்... ஆர்டர் கொடுக்கிறதுக்கு முன், அவங்க நம்ம கம்பெனிய பார்க்க விரும்புறாங்களாம். பெரிய பிராஜெக்ட் சார். நாளைக்கு நீங்க வந்துடுவீங்கள்ல?''

''நானா...'' என்று, சிரித்தவன், ''என் மகன விட்டு, எப்ப நான் கிளம்புவேன்னு, எனக்கே தெரியாதுப்பா, நீ இதை டீல் பண்ணுப்பா குரு!''

''அப்படி இல்ல சார். பிரமோட் ஆன பிறகு வர்ற, முதல் வய்ப்பு சார்.''

''கவலைப்படாதே... நான் பாத்துக்கறேன்... சீ யூ பை பை.''

அவன் போனை அணைப்பதை, ராகினி பார்த்துக் கொண்டே இருந்தாள்.

ஒரு பக்கம், சீராக கலந்து வைத்திருந்த வென்னீர், அலுமினியக் கரண்டியில் தயாராக இருந்த சாம்பிராணி, கடலைமாவும், பயத்தமாவும் கலந்த ஈரக்கலவை. மென்மையான துவாலை. குளித்தபின், வருகிற, 'கபகப' பசிக்கு, தோதாக, பசும்பால்.

''நீ போய் ரெஸ்ட் எடு ராகிம்மா, பச்சை உடம்புக்காரி. குழந்தைய என் கிட்ட குடு,'' என்று, கையை நீட்டிய தாயை, ராகினி, ஏறிட்டுப் பார்த்தாள்.

''இன்னும் எத்தனை நாள்மா, இப்படி என்னை மிதக்க வைக்கப் போறே?''

''என்ன சொல்றே?''

''எப்ப, என்னை தரையில இறக்கி விடப் போறேன்னு கேட்கிறேன்?''

''நீ என்ன சொல்ல வர்றே... புரியும்படி சொல்?'' அம்மா, கவலையுடன் மகளைப் பார்த்தாள்.

''பத்து மாசம், தவம் இருந்தது போல் இருந்து, வலி சுமந்து, பிள்ளை பெத்தது, அழகுதான், அற்புதம் தான். ஆனா, இந்த சந்தோஷத்தை எல்லாம் எல்லாத்தையும் தாண்டி, ஒரு முக்கியமான விஷயம் இருக்கும்மா. மனைவியா இருந்து, தாயாவதும் ஒரு பதவி உயர்வுதான். ஆனா இந்த பதவி உயர்வு என்பது, இந்த புதிய பொறுப்புகள், சவால்கள், புது அனுபவங்கள்ன்னு, தன் தோளை வலிமையாக்கி, அதில், சுமைகளை சுகமா தூக்கிட்டுப் போகிறது தான். இப்ப, எனக்கு கிடைச்சிருக்கிற இந்த பதவி உயர்வு, ஒரு நல்ல மகனை, மாணவனை, குடிமகனை உருவாக்குற,பொறுப்பான தாயா இருந்து, அவனை நல்வழிப்படுத்துறது. நாட்டுக்கும், வீட்டுக்கும் பயன் தரக்கூடிய வகையில், அவன் மனநிலையை செம்மைப்படுத்துறது. இது தான், இப்போ எனக்கு கிடைத்திருக்கிற பதவியின் மூலம், நான் செய்ய வேண்டிய வேலை. குழந்தையை என்கிட்ட விடும்மா. சரியா செய்யறேனான்னு மட்டும் கவனி. குழந்தை வளர்ப்பு நுணுக்கம், டிப்ஸ் எல்லாத்தையும் சொல்லிக் கொடு. அடுத்த பிரமோஷன் என்னை தேடி வரும்மா,'' என்றாள் ராகினி.

புன்னகை கலந்து, இணக்கமான குரலில், கம்பீரமாகப் பேசும் மகளை, இதமாக பார்த்து, குழந்தையை நீட்டினாள் தாய்.

தள்ளி நின்று கவனித்துக் கொண்டிருந்த ஷியாம் மனதில், ராகினியின் வார்த்தைகள், மந்திர ஜாலம் செய்யத் துவங்கின.

உஷா நேயா






      Dinamalar
      Follow us