
அன்புள்ள அக்காவுக்கு வணக்கம்.
என் வயது 44. நான், ஒரு அரசு அலுவலகத்தில், கை நிறைய சம்பளம் பெறுபவள். எனக்கு திருமணமாகி பல ஆண்டுகள் ஆகின்றன. வளர்ந்த பிள்ளைகள் உள்ளனர். இவ்வளவு வருட தாம்பத்தியத்தில், என் கணவரை, நான் இப்பொழுது தான் புரிந்து கொள்ள முடிந்தது. எனக்காக வாழ்வது போன்றும், என் சொல் மீறாதவர் போலவும் நடித்துள்ளார் என்பதை, அறிந்து கொண்டேன்.
என் கணவர் பற்றிய விவரங்கள்:
திருமணம் ஆகும் போது, +2 தவறியவன். பெற்றோருக்கு செல்லப் பிள்ளை. என் மாமனார், மாமியார் சொந்த நிலத்தில் விவசாயம் செய்பவர்கள். என் கணவர், பார்ப்பதற்கு, உத்தமன் போல் நடிப்பர். ஆனால், அவ்வளவும் குறுக்கு புத்தி; மற்றவர்களை எப்பொழுதும் சந்தேக கண்ணுடன் பார்ப்பான். படிக்கும் வயதிலிருந்து, இன்றுவரை, அவன் விருப்பப்படும் பெண்கள், தங்கை முறையாக இருந்தாலும், மகள் முறையாக இருந்தாலும், எப்படியாவது, பணிய வைத்து விடுவான்.
என்னை, என் பெற்றோரிடமிருந்து பிரித்தான். என்னுடன் பிறந்தவர்கள் அனைவரையும் நான் வெறுக்குமளவிற்கு, என்னை உருவாக்கினான்.
இப்படியே நடந்து கொண்டிருந்த என் வாழ்க்கையில், என் தங்கை மகள் மூலம், ஒரு திருப்பம் ஏற்பட்டது. என் தங்கையிடம் என்ன பசப்பு வார்த்தைகளை கூறினானோ, அவள் மூலம், என் இறந்தகால வாழ்க்கை, அதாவது, 16, 17 வயதுகளில், நான் செய்த தவறை, அறிந்து, கொண்டான்.
நான், என் பழைய காதலனை பார்ப்பதோ, பேசுவதோ கிடையாது. எனக்கு முன், அவனுக்கு திருமணமாகி, நான்கு குழந்தைகள் இருக்கின்றன. அதனால், அவனும், என்னிடம் பேசுவதில்லை.
இந்த இடைப்பட்ட காலத்தில், பள்ளி படிப்பு தவறிய என் கணவனை, அதை முடிக்கவும் வைத்து, ஒரு நல்ல வேலையும் வாங்கிக் கொடுத்தேன். இவை அனைத்திற்கும், என்னுடைய சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை செலவழித்தும், பற்றாக்குறைக்கு, உடன் பணியாற்றும் அலுவலர்களிடம் கடனாக பெற்றும் படிக்க வைத்தேன். என் கணவன் வீட்டில், படிப்பு செலவுக்காக பணம் கேட்ட போது, கை விரித்து விட்டனர்.
இவ்வளவும் செய்த பின், இப்பொழுது, என் கணவன் வீட்டில், எங்கள் இருவருடைய சம்பளத்தையும், வாங்கி செலவு செய்கின்றனர். என்னுடைய பெற்றோர், நான் படித்து வேலைக்கு சென்றால், என் தம்பி, தங்கைக்கு உதவுவேன் என்ற ஒரே நோக்கத்துடன், எவ்வளவோ கஷ்டப்பட்டு, என்னை படிக்க வைத்தனர். ஆனால், என் கணவன், அவ்வளவையும் கெடுத்து, குட்டி சுவராக்கி விட்டான்.
ஒருநாள், எனக்கு மகன் உறவுடையவனை என்னுடன் சேர்த்து பேசி, அவமானப்படுத்தினான். கடுமையான எதிர்ப்புக்குப் பின், அந்த பேச்சை விட்டான். அதற்கு பின், என் நாத்தனார் மகனோடு இணைத்து பேசி, அவமானப்படுத்தினான். அதற்கும், சில எதிர்ப்பான வார்த்தைகளை பேசிய பின், அந்த பேச்சையும் விட்டான்.
கடைசியாக, எனக்கு மைத்துனன் முறை உள்ள ஒருவனிடம் என்னை இணைத்துப் பேசினான். அப்பொழுது தான், எனக்கு சரியான கோபம் வந்தது. அது தான், நான் செய்த முதல் தவறு. தவறு என்று தெரிந்தும், என்னுடைய கணவன், என் மீது போட்ட பழிக்கு, சரியான பாடம் கற்பிக்க வேண்டும் என எண்ணி, அதை செயல்படுத்தினேன். அவ்வாறான செயல்களின் முக்கிய கட்டத்தை, என் கணவன் அறிந்து விட்டான்.
இதை, என் பெற்றோர் முதல், அனைவரிடமும் கூறி, என்னை அவமானப்படுத்தினான். நான், அவனுக்கு பாடம் கற்பிக்க போய், எனக்கு அவமானமாகி விட்டது. இப்பவும் சொல்கிறேன், நான் தவறு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், செய்யவில்லை. கணவனை திருத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான், செய்தேன். அது, இது போல் முடியும் என, நான் நினைக்கவில்லை.
இப்போது, என் கணவன், முன்பு போல், அதே குடியும், கூத்தியுமாக தான் அலைகிறான். அவனுடைய நடத்தையில், எந்த மாற்றமுமில்லை. எந்த பெண் என்று கணக்கு இல்லாமல், பணத்தை செலவு செய்கிறான். ஆனால், என்னுடைய ஒவ்வொரு ரூபாய்க்கும் வரவு, செலவு கேட்கிறான். அவ்வாறு கூறவில்லையெனில், சண்டை, சச்சரவு, ரகளை.
சண்டையின் போது, கடைசியாக இணைத்து பேசிய, என் மைத்துனனையும், என்னையும் தொடர்புபடுத்தி பேசியே, என்னை சித்ரவதை செய்கிறான்.
இதனால், ஒவ்வொரு நாளும், எனக்கு, ஏன் இன்னும் உயிருடன் இருக்கிறோம், இறந்து விடலாம் என்றும், சில நேரங்களில், கண் காணாத இடத்திற்கு சென்று விடலாம் எனத் தோன்றும். ஆனால், எங்கும் செல்லவும் முடியவில்லை; சாகவும் முடியவில்லை. எல்லாவற்றிற்கும் காரணம், இந்த பிள்ளைகள்.
பிள்ளைகளாவது, என் மனதிற்கு, திருப்தியை தருவார்களோ என்னவோ... இத்தனை அவமானப்படுத்தி, என்னை துன்புறுத்தும், என் கணவனை திருத்த, ஏதேனும், வழியிருந்தால் கூறுங்கள். என் உடன் பிறந்த அக்கா எவருமில்லை. அந்த ஸ்தானத்தில் நீங்கள் இருந்து வழி கூறுங்கள்.
அன்புள்ள தங்கைக்கு -
உன் கடிதம் கிடைத்தது.
ஆண்கள், தாங்கள் செய்யும் தவறுகளுக் கெல்லாம் காரணம், தங்கள் மனைவி தான் என்று, கூசாமல் கூறுவர். திருமணத்துக்குப் பின்பும் அவர்கள் ஆயிரம் பெண்களுடன் தொடர்பு வைத்திருப்பர். ஆனால், கல்யாணத்துக்கு முன், தன் மனைவி ஒருவனைக் காதலித்திருக்கிறாள் என்பது தெரிந்தால் போதும்... பின் சமயம் கிடைக்கும் போதெல்லாம், அதைச் சொல்லிச் சொல்லியே, குத்திக் காட்டுவர்.
சரி, உன் விஷயத்துக்கு வருகிறேன்... நல்லவன் போல் நடித்து, உன்னை - உன் பெற்றோரிடமிருந்து பிரித்தான் என்கிறாயே... உனக்கென்று சொந்தமாய் புத்தி இல்லையா? உன்னை பெற்று, வளர்த்து, ஆளாக்கிய பெற்றோரை, நேற்று வந்தவர் சொன்னார் என்பதற்காக, நீ, ஏன் கை கழுவினாய்? நீ, ஒரு எடுப்பார் கைப்பிள்ளையாக இருப்பதால்தானே, - இவ்வளவும் நேர்ந்தது!
பள்ளி வகுப்பு தவறியவரை, மேற்கொண்டு படிக்க வைத்து, நல்ல வேலையில் அமர்த்திய நீ, அவரது படிப்புச் செலவுக்காக வாங்கிய கடனை, அவரையே அடைக்கச் சொல்லியிருக்க வேண்டும். அப்போது தான், அவருக்கு, பொறுப்பு வந்திருக்கும்.
அவர் சம்பளத்தில், ஒரு பகுதியை, குடும்பத்துக்கும், ஒரு பகுதியை பெற்றோருக்கும் செலவழிப்பதில் தவறில்லை. அதே போல, நீயும் உன் சம்பளத்தில், ஒரு பகுதியை உன் பெற்றோரின் செலவுக்கு கொடுப்பது தான் நியாயம்.
உன் கணவர், பல மலர்களை நாடும் வண்டாக இருந்தால், அவர், தன் தவற்றை உணர்ந்து திருந்த, வாய்ப்புகளை உண்டாக்கிக் கொடு. இப்படி முறையற்ற உறவினால், உடல் ரீதியாக, 'எய்ட்ஸ்' போன்ற, பல பிரச்னைகளை சந்திக்க வேண்டி வரும் என்பதை புரியவை. அவர், தன் மீதுள்ள தவறை மறைக்க, உன் மீது பழியைச் சுமத்தும் போது, மனசு வலிக்கத் தான் செய்யும். அதற்காக, நீயும் தவறு செய்யத் துணிவது, வடிகட்டின முட்டாள்தனம்.
நீ எழுதியிருந்த கடிதத்தைப் படித்த போது, உன் கணவன் மீது, உனக்கு, கொஞ்சம் கூட மதிப்போ, மரியாதையோ இல்லை எனத் தெரிகிறது.
மனசில், கணவனிடம் அன்பில்லாமல், கட்டிலில் மட்டும் அவனுடன் படுத்திருப்பது என்பது, மன்னிக்க முடியாத துரோகம். அதை விட, பிரிந்தே வாழலாம்.
ஒன்று செய்... அவரை உட்கார வைத்துப் பேசு.
'இது போல, நீங்கள் செய்வது எதுவும் பிடிக்கவில்லை. வருகிற சம்பாத்தியத்தில் நம்மிருவரின் பெற்றோருக்கும் கொஞ்சம் கொடுப்போம். எதிர்காலத்தில், நமது பிள்ளைகளுக்காக கொஞ்சம் சேமிப்போம். மிச்சமிருப்பதில், கடனில்லாமல், கஞ்சியானாலும் சந்தோஷமாய் குடிப்போம். சம்மதமானால், சேர்ந்து வாழ்வோம். இல்லை என்றால், நான் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு தனியாகப் போகிறேன். ஆனால் ஒன்று... அபரிமிதமான மோகத்தினால், வியாதியை வரவழைத்துக் கொண்டு வந்தால், நான் என் வீட்டில் சேர்க்க மாட்டேன்' இப்படி ஒரு எச்சரிக்கை விடு...
மசிந்தால் சரி; எகிறினால் தனியாகப் போ. உன்னால் முடியும். வாழ்த்துகள்.
- அன்புடன்
சகுந்தலா கோபிநாத்.

