
ஷங்கர் படத்தில் மம்மூட்டி!
விஜய்யின், ஜில்லா படத்தில் மோகன் லால் நடித்ததை அடுத்து, மம்மூட்டிக்கும், தமிழ்ப்படங்களில் நடிக்கும் ஆசை தலை தூக்கியுள்ளது. அதனால், சில முன்னணி இயக்குனர்களை தொடர்பு கொண்ட போது, ஐ படத்தையடுத்து, தான் இயக்கவிருக்கும், சரித்திர படத்தில் நடிப்பதற்கு, மம்மூட்டிக்கு சான்ஸ் கொடுத்துள்ளார் டைரக்டர் ஷங்கர். இப்படத்தில் கர்ணன் வேடத்தில் மம்மூட்டி நடிக்கவிருப்பதால், ஏற்கனவே தமிழில் நடித்த பழசிராஜா படத்தையும், மிஞ்சும் நடிப்பை வெளிப்படுத்தி, தமிழில் காலூன்ற, தயாராகி வருகிறார் மம்மூட்டி.
— சினிமா பொன்னையா.
சுயபுராணம் பாடும் அமலாபால்!
தலைவா படத்தில் நடித்த பின், விஜய்யின் நடிப்பு, பழகின விதங்கள் பற்றி, 'பில்டப்' கொடுத்து வந்த அமலாபால், இப்போது, வேலையில்லா பட்டதாரி படத்தில் நடித்துக்கொண்டே, தனுஷின் நடிப்பாற்றல் குறித்து, குட்டி பிரசங்கம் நடத்தி வருகிறார். 'இவர் மாதிரி நடிகர்களுடன் ஓரிரு படத்தில் நடித்தாலே, உடன் நடிப்பவர்களின் திறமையும் மெருகேறி வரும்...' என்று கூறும் அமலாபால், 'இனி நானும் குறிப்பிடத்தக்க நடிகையாகி விடுவேன். அந்த அளவுக்கு, பூவோடு சேர்ந்த, நாரும் மணப்பதுபோல், என் திறமையும் இப்படத்தில் பளிச்சிடும்...' என்று சுயபுராணம் பாடுகிறார். ஆளுக்கு தகுந்த சொட்டுக் கொடுக்கிறது!
— எலீசா.
கார்த்திகாவுக்கு சண்டை பயிற்சி!
கோ, மற்றும் அன்னக்கொடி, படங்களில் நடித்த கார்த்திகாவுக்கு அதன்பின், படங்கள் இல்லாததால், மாஜி நடிகையான, தன் தாய்குலம் ராதா நடத்திவரும் ஓட்டல் தொழிலில், சில காலம் கவனம் செலுத்தி வந்தார். இந்நிலையில், எஸ்.பி.ஜனநாதன் இயக்கும், புறம்போக்கு படத்தில், ஒரு ஆக் ஷன் ரோலுக்கு கமிட்டாகியுள்ளார் கார்த்திகா. இதே படத்தில், ஆர்யா, விஜயசேதுபதி, ஷாம் என, மூன்று ஹீரோக்கள் இருந்தும், யாருக்கும் ஜோடி இல்லை. அவர்களைப் போலவே கார்த்திகாவும், ஒரு மாறுபட்ட கேரக்டரில், சண்டை காட்சியில் நடிக்கிறார். அதனால், தற்போது கார்த்திகாவுக்கு, தீவிர சண்டை பயிற்சி கொடுத்து வருகின்றனர். இருக்கிற அளவோடு இருந்தால் எல்லாம் தேடி வரும்!
— எலீசா.
உற்சாகத்தில் ஜெயம் ரவி!
சமுத்திரகனி இயக்கத்தில், ஜெயம் ரவி நடித்துள்ள படம், நிமிர்ந்து நில். இப்படத்தில் 48 மற்றும் 25 வயதுகளில் இரண்டு மாறுபட்ட வேடங்களில், நடித்திருக்கும் ஜெயம் ரவி, 48 வயது வேடத்துக்காக, தொப்பை வைத்தவர் போன்று, தன்னை மாற்ற, பல மாதங்களாக போராடினார். அதன் பலனாக, அந்த கேரக்டர் மிகச் சிறப்பாக வந்துள்ளது. அதோடு, பெர்லின் திரைப்பட விழாவிலும், இப்படம் திரையிடப்பட உள்ளது. அதனால், 'தான், இரண்டு வருடமாக கஷ்டப்பட்டு நடித்ததற்கு, அங்கீகாரம் கிடைக்கப் போகிறது...' என்ற உற்சாகத்தில் உள்ளார் ஜெயம் ரவி.
— சி.பொ.,
மூன்று படங்களை டீலில் விட்ட சிம்பு!
வாலு, வேட்டை மன்னன் மற்றும் பாண்டிராஜ் இயக்கும் படம் என, மூன்று படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் சிம்பு. ஆனால், திடீரென்று கவுதம் மேனன் அழைத்ததும், நடித்து வந்த படங்களை, அப்படியே கிடப்பில் போட்டு விட்டு, சென்று விட்டார். இதற்கடுத்து, அஜீத் நடிக்கும் படத்திலும், நடிக்கப் போவதாக சொல்லிக் கொண்டிருக்கிறார். இதனால், 'சிம்புவுக்காக வருடக்கணக்கில் என்னால் காத்திருக்க முடியாது...' என்று, மெரினா படத்தில், தான் அறிமுகம் செய்த, சிவகார்த்திகேயனை வைத்து, புதிய படமொன்றை ஆரம்பித்துள்ளார் டைரக்டர் பாண்டிராஜ்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை
* காதல் மற்றும் திருமணம் சம்பந்தப்பட்ட கிசுகிசுக் களை நிறுத்த வேண்டும் என்பதற்காக, சமீபகாலமாய் ஜோடி சேர்ந்து நடிப்பதை, காதலில் சொதப்பிய நடிகரும், பாணா காத்தாடி பறக்க விட்ட நடிகையும் தவிர்த்து வருகின்றனர். இருப்பினும், நண்பர்கள் சார்பில் நடத்தப்படும் பார்ட்டிகளில், ஜோடியாக கலந்து கொள்கின்றனர். சமீபத்தில் கூட, தாய்லந்தில் நடிகருக்கு, அவரது நண்பர்கள் கொடுத்த பார்ட்டியில் கலந்து கொண்ட நடிகை, விடிய விடிய ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என்று அமர்க்களப்படுத்தியுள்ளார்.
* தமிழில் மேல்தட்டு நடிகர்களுடன் தொடர்ந்து நடித்த போதும், பொம்மலாட்டம் நடிகையின் மார்க்கெட் தள்ளாட்டத்திலேயே உள்ளது. அதனால், ஆந்திரா சென்றுள்ள அம்மணி, அங்குள்ள மாஜி ஹீரோ ஒருவரின் வாரிசு நடிகரை, கெட்டியாக பிடித்து விட்டார். அவரது புண்ணியத்தில், சில புதிய படங்களில் கமிட்டாகியிருக்கும் நடிகை, அதில் ஒரு படத்தில், டூ-பீஸ் காஸ்டியூமில் பிரவேசிக்கிறார்.
* பாலிவுட் நடிகை கத்ரினா கைப்பின் தாயார், சென்னையில் ஏழு ஆண்டுகளாக வசித்தவர், இப்போது மதுரையில் வசித்து வருகிறார்.
* பொங்கல், ரிலீசில் இருந்து தள்ளிப்போன ரஜினியின், கோச்சடையான் படத்தை, தமிழ் புத்தாண்டு அன்று வெளியிட திட்டமிட்டுளளனர்.
* ஜில்லா படத்தையடுத்து, மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்கிறார் விஜய். இப்படமும், துப்பாக்கி படம் போன்று, தீவிரவாதம் சம்பந்தப்பட்ட கதையில்
உருவாக இருக்கிறது.
* தன் முதல் மனைவி சூசனை விவாகரத்து செய்து விட்ட இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன், அவருக்கு 100 கோடி ஜீவனாம்சமாக கொடுத்து உள்ளார்.
* மலையாளம், தெலுங்கில் கேரக்டர் நடிகையாகியுள்ள சோனியா அகர்வால், பாலக்காட்டு மாதவன் என்ற படத்தில்,பிராமண பெண்ணாக நடித்து வருகிறார்.
* மலையாளத்தில், காக்டெயில் என்ற பெயரில் உருவான படம், அதிதி என்ற பெயரில், தமிழில் ரீ- மேக் ஆகிறது. இதில் நந்தா நாயகனாக நடிக்கிறார்.