PUBLISHED ON : ஜன 19, 2014

புலியருவிக்கு குளிக்க சென்ற வாசகிகள், புலியருவிக்கு மேல் உள்ள அடர்ந்த காட்டிற்குள் விழும் அருவியில் குளிக்க செல்லும் வழி குறித்து விசாரித்தனர் என்று, போலீசார் கூறியதும், 'அங்கே யாருமே போகமாட்டார்களே... எப்படி தைரியமாக போனார்கள், பெயரிலேயே 'புலி'யிருக்கும் அருவியாயிற்றே! அந்த, 'கிலி'கூட இல்லாத வாசகிகளாக இருக்கின்றனரே...' என்றெல்லாம் மனதில் நினைத்து, 'சரி மேலே போய் பார்த்து விடுவது' என்ற முடிவுடன்,
'பட பட'த்த மனதுடன் காட்டுப்பாதைக்கு போகிற வழியில், கால் வைத்ததும், 'ஹலோ கேப்டன் எங்கே தனியா கிளம்பிட்டீங்க?' என்ற கோரஸ் குரல், பின்பக்கம் இருந்து வந்தது.
திரும்பிப் பார்த்தால், என்னை தவிக்கவிட்ட அதே வாசகியர். 'அப்பாடா...' என்று மனசில் நிம்மதி ஏற்பட்டாலும், 'நீங்கள்லாம் காட்டுக்குள் விழும் அருவிக்கு வழி கேட்டீங்களாமே... அங்க தான் போய்ட்டீங் களோன்னு பயந்து போனேன்...'என்றதும் 'சும்மா விசாரிச்சோம், நாங்க யாரு அந்துமணி வாசகிகள் ஆச்சே... ரொம்ப சமர்த்து பிள்ளைங்க; அதனால், உங்க அனுமதி இல்லாம, எங்கேயும் போக மாட்டோம்...' என்றனர்.
ஆனால், இந்த சமர்த்து பிள்ளைங்க, அதோடு என்னை விடவில்லை. அன்று இரவே, அவர்களது அடுத்த அ(ல)ம்பை தயார் செய்தனர்.
இரண்டாம் நாள் இரவு, பெரும்பாலும் தூங்காத இரவாகவே இருக்கும். காரணம், மறுநாள் அதாவது டூரின் மூன்றாவது நாள், குற்றாலத்தை விட்டு திரும்ப வேண்டும். பின், அவரவர் ஊர், வீடு, வேலை, கவலை என்று, வழக்கமான சுமைகளோடு, ஐக்கியமாகி விடுவர்.
ஆகவே, இரண்டாவது நாளின் இரவு என்பது, பிரியப் போகும் அன்பு சகோதர சகோதரிகளிடம், மனம் விட்டு பேசக்கூடிய இனிய இரவாக இருக்கும் என்பதால், பலரும் தூங்காமல், மெல்லிய நிலவொளியில், அருவியின் ஒசையை கேட்டுக்கொண்டு, புதிய உறவுகளுடன் பேசிக்கொண்டு இருப்பர்.
அதற்கேற்ப, வாசகர் கலந்துரையாடல், நகைச்சுவை பட்டிமன்றம், வேடிக்கை விளையாட்டு என்று ஆனந்தமாக பொழுது, போகும். இரவு உணவு சாப்பிடவே, 11:00 மணியாகி விடும்.சாப்பிட்ட பின், அனைவரும் பேசி முடித்து, அவரவர் அறைக்கு திரும்பும் போது, நள்ளிரவை தாண்டி விடும்.
'காலை, 6:00 மணிக்கு, குளியலுக்கு போக வேண்டும். கொஞ்ச நேரமாவது தூங்குங்கள்...' என்று சொல்லி, வாசகர்களை, கட்டாயமாக அறைக்கு அனுப்பி வைப்போம்.
அன்றும், அவ்வாறு வாசகர்களை தூங்கச் சொல்லி அனுப்பிவிட்டு திரும்பினால், காலையில் புலியருவியில், 'நாங்க சமர்த்தான வாசகிகள்' என்று சொன்னவர்கள் மட்டும், ஒரு கோஷ்டியாய் நின்று கொண்டிருந்தனர். 'என்னாச்சு... நீங்கள்லாம் தூங்க போகவில்லையா?' என்று கேட்டதும், 'இல்லை. குற்றாலம் போனா இரவு குளியலை, 'மிஸ்' பண்ணிடாதீங்க'ன்னு ஒரு முக்கியமானவர் எங்களுக்கு சொல்லியிருக்கார். அதனால, இரவு குளியலுக்கு, அருவிக்கு போக போறோம்...' என்றனர்.
கூடுதல் குளிர் மற்றும் ஜில்லிப்புடன், கூட்டமில்லாத அருவியில், இரவில் குளிப்பது மகா ஆனந்தம். விவரமானவர்கள் பகல் முழுவதும் தூங்கிவிட்டு, இரவில் மெயினருவியிலும், ஐந்தருவியிலும் குளிப்பது என்பது, தொன்றுதொட்டு நடப்பதுதான். அதுவும், இளைஞர்கள் என்றால், அவர்களின் முதல் தேர்வு, இரவு குளியலாகத்தான் இருக்கும்.
'இதுவரைக்கும் வந்த வாசகர்களில், எவரும் இரவு குளியலுக்கு முன்வந்தது இல்லை. நீங்கதான் இதை முதலில் முன்னெடுத்து வைத்திருக்கிறீர்கள். இருந்தாலும், இதற்கு சில முன் ஏற்பாடுகள் செய்யணும். முக்கியமா பஸ் டிரைவரை எழுப்பி, பஸ்சை கொண்டு வரச் சொல்லணும்...' என்றதும், 'அதெல்லாம் நாங்க சொல்லிட்டோம். இதோ அண்ணன் நிற்கிறாருல்ல...' என்று, பஸ் டிரைவரை காட்டியதும், 'ஆமாண்ணே... தங்கச்சிங்கள்லாம் சொன்னாங்க. நாங்களும் ரெடி, பஸ்சும் ரெடிண்ணே...' என்றனர்.
'ஆயிரந்தான் இருந்தாலும், உங்ககூட வந்த ஆண் வாசகர்களும் வந்தாதானே நல்லாயிருக்கும். ஆனா, அவுங்கள்லாம் தூங்கப் போயிட்டாங்களே... இனி, எப்படி, எழுப்பறது...' என்றதும், 'யார் சொன்னா தூங்கிட்டாங்கன்னு... இப்ப பாருங்க...'ன்னு சொல்லி, ஒருவர் விசில் ஊத, அதற்காகவே காத்திருந்தது போல, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில், போர்த்திய போர்வையுடன், ஆண் வாசகர்களும், 'நாங்களும் வந்துட்டோம்ல' என்று, ஆஜராகி, 'குளிருக்கும், குளியலுக்கும் இதமா, இஞ்சி டீ சாப்பிட்டா நல்லாயிருக்கும்ன்னு, அதைக்கூட, 'கேன்'ல நிரப்பி வச்சுருக்கோம்...' என்றனர். 'எல்லாம் சரி. ஆனால், அந்துமணி சார் அனுமதி இல்லாம நான் எதையும் செய்ய மாட்டேன். அதனால, அவரோட அனுமதி வேண்டும்...' என்றதும், 'தாராளமா கேளுங்க. இந்த ஐடியா கொடுத்ததே அந்துமணி சார்தான். போங்க நேரத்தை வீணாக்காம போய் கேளுங்க...' என்றனர்.
அவரை தயக்கத்துடன் தொடர்பு கொண்ட போது, 'எல்லாம் எனக்கு தெரியும். பாதுகாப்பிற்கு, மெயினருவியில் இன்ஸ்பெக்டர் முத்துராணி தலைமையிலான போலீசார், நம்ம வாசகர்களை வரவேற்க தயாராயிருப்பாங்க. ஏற்கனவே பேசியாச்சு. நீங்க பத்திரமா, நம்ம வாசகர்களை கூட்டிட்டு போய்ட்டு வந்துடுங்க...' என்று, 'கிரீன் சிக்னல்' கொடுத்தார்.
கடைசியில், 'நான்தான் அவுட்டா' என்று, நினைத்தாலும், மெயினருவியில் அன்றைய இரவு, வாசகர்கள் போட்ட குளியல், சந்தேகமில்லாமல் ஆனந்த குளியல்தான். கிட்டத்தட்ட விடியும் வரை குளித்தவர்களை அழைத்துக் கொண்டு, பஸ்சுக்கு திரும்பிய போது, 'விடாது கருப்பு போல' சமர்த்து வாசகிகளால், அடுத்து ஒரு குழப்பம் காத்திருந்தது.
— அருவி கொட்டும்
குற்றாலமும், இலஞ்சி முருகனும்...
குற்றால நாதர் கோவில் 2000 ஆண்டு தொன்மையானது என்றால், அதற்கும் முந்தியது என்று கருதப்படுவதுதான், இலஞ்சி குமரன் (முருகன்) கோவில். இதற்கான சான்றுகளை குற்றாலபுராணம் மற்றும் சிலப்பதிகாரத்தில் காணலாம். குற்றாலத்தில் இருந்து வடக்கே 3 கி.மீ.,தூரத்தில் செங்கோட்டை தென்காசி பிரியும் சாலையில் இக்கோவில் அமைந்துள்ளது.
கோவிலானது மா, பலா, வாழை, கமுகு, தென்னை முதலிய மரங்கள் செறிந்த சோலைகளால் சூழப்பட்டு, தெற்கே சிற்றாறு என்னும் சித்ரா நதியும், வடக்கே வடக்காறு என்ற செங்கோட்டையாறும் பாயும் நீர்வளம் மிக்கது. இப்படி இயற்கை காட்சிகளுக்கு மத்தியில் அமைதி தவழும் சூழலில் அமைந்துள்ள இலஞ்சி குமரன் கோவில் நுழைவு வாயில் கோபுரத்தில், மயில் வாகனத்தோடு விஸ்வரூப தரிசனத்தில் காட்சி தருகிறார் குமரன்.
மகடாகம விதிப்படி அமைக்கப்பட்ட இத்தலத்தில், மூலவரான குமரப் பெருமான் வள்ளி, தெய்வானை சமேதரராய் வீற்றிருக்கிறார். அவருக்கு வலது பக்கம், அகத்திய முனிவரால் வெண்மணலால் ஸ்தாபிக்கப்பட்ட லிங்கம் உள்ளது. இந்த லிங்கத்திற்கு இருவாலுகநாயகர் என்று பெயர். இவர் குழல்வாய் மொழியம்மையோடு அருள்பாலிக்கிறார்.
அகத்திய முனிவரால் பூஜை செய்யப்பட்டதும், அருணகிரிநாதரால் பாடப்பெற்றதும், கபிலர், துர்வாசர், காசியபர் ஆகிய மாமுனிகளின் சந்தேகங்கள் நிவர்த்தி செய்யப்பட்டதுமான வரலாற்று சிறப்பு மிக்க இந்த கோவிலில், திருமணம் செய்வது விசேஷம் என்பதால், வருடம் முழுவதும், அநேக திருமணங்கள், இங்கு நடந்தவண்ணம் இருக்கும்.
எல்.முருகராஜ