PUBLISHED ON : பிப் 02, 2014

யதார்த்தமான அப்பாவாக கமல்!
விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்ததும், நடிகர் ரமேஷ் அரவிந்த் இயக்கும் உத்தம வில்லன் படத்தில் நடிக்கும் கமல், நான்கு டீன்-ஏஜ் பெண்களுக்கு அப்பாவாக நடிக்கிறார். அதனால், தன் கெட்டப்பை முதிர்ச்சியாக மாற்றி, அதிக மேக்கப் போடாமல் யதார்த்தமான அப்பாவாக தோன்றுகிறார். மேலும், விஸ்வரூபம் படத்தின் இரண்டு பாகத்திற்கும் கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக் ஷன் செய்து நடித்துள்ள கமல், உத்தம வில்லன் படத்திற்கு கதை திரைக்கதை மட்டும் தான் எழுதுபவர், வசனம் எழுதும் பொறுப்பை கிரேசி மோகனிடம் ஒப்படைத்துள்ளார்.
— சினிமா பொன்னையா
நயன்தாரா பாணிக்கு மாறும் கார்த்திகா!
'மாறுபட்ட நடிகையாக சினிமாவில் இடம் பிடிப்பேன்...' என்று சொல்லிக்கொண்டு, கதை சொன்ன டைரக்டர்களை கேள்விமேல் கேள்வி கேட்டு, டென்ஷன் செய்தார் கோ பட நாயகியான கார்த்திகா. ஆனால், அதன் பிறகு, அவர் நடித்த அன்னக்கொடி சறுக்கி விட்டதால், தடுமாறிப்போன நடிகை, இப்போது புறம்போக்கு படத்தில் நடிப்பதையடுத்து, தன் வெட்டி பந்தாக்களை விட்டொழித்து விட்டார். மாறாக, இனி நயன்தாரா பாணியில் ஆக் ஷன், கிளாமர் என, பிரவேசிக்கப் போகிறேன் என்று கூறுபவர், நயன் பேசிக் கொண்டிருக்கும் சில படங்களையும், தன்பக்கம் இழுக்கும் திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டுள்ளார். சேதியறிந்து, கார்த்திகா மீது நயன்தாரா செம கடுப்பில் உள்ளார். சும்மா கிடந்த சங்கை, ஊதி கெடுத்த கதை!
— எலீசா
அஜித்தின் சமையல் டைரி!
சமையல் கலையில் ஆர்வம் கொண்டவரான அஜித், தான் குடும்பத்துடன் வெளிநாடுகளுக்கு செல்லும் போது, அங்கு ஏதாவது, வித்தியாசமான சுவை கொண்ட உணவுகளை சாப்பிட்டால், அதன் செய்முறை விளக்கத்தை, அங்கிருப்பவர்களிடம் கேட்டு தெரிந்து கொண்டு, சென்னை வந்ததும், அதே போன்று, சமைத்து, அசத்துகிறார். இப்படி, சமைக்கும் புதிய வகை உணவுகளின் பார்முலாவை, தனி டைரி போட்டு, எழுதி வைத்துள்ளார். அப்படி அவர் சேகரித்து வைத்திருக்கும் பார்முலாவை கொண்டு, ஒரு சமையல் கலை புத்தகமே போடலாம்.
— சி.பொ.,
அம்மாவான அமலாபால்!
தமிழில், டீன்ஏஜ் வேடங்களாக தேடிப்பிடித்து நடித்து வரும் அமலாபால், மலையாளத்தில், ஒரு படத்தில் இரண்டு வயது குழந்தைக்கு அம்மாவாக நடித்து வருகிறார். அதோடு, இதுவரை இல்லாத அளவுக்கு வெயிட்டான பர்பாமென்சும், கொடுத்திருக்கிறார். அதுமட்டுமின்றி, மோகன்லால், மம்மூட்டி படங்களிலும் கமிட்டாகியுள்ளார். இதனால், 'ஓல்டு இமேஜ் ஒட்டிக் கொள்ளாதா?' என்று அமலாவைக் கேட்டால், 'தமிழில்தான் அப்படி முத்திரை குத்தி விடுவர். ஆனால், மலையாளத்தில் எந்த பிரச்னையும் இல்லை. மெச்சூரிட்டியான வேடங்களில் நடிப்பவர்களுக்கு, நல்லதொரு இமேஜ் தான் கிடைக்கும். அதனால் தான், மலையாளத்தில் மட்டும், வயது வித்தியாசம் பார்க்காமல் அனைத்து ஹீரோக்களுடனும் நடிக்கிறேன்...' என்கிறார். கீழே விழுந்தாலும், மீசையில் மண் ஒட்டவில்லை!
— எலீசா
ஆக் ஷன் படமெடுக்கும் மணிரத்னம்!
கடல் படத்தின் அதிர்ச்சி தோல்விக்கு பின், தன் புதிய பட விஷயத்தில், பல மாதங்களாக அமைதி காத்த மணிரத்னம், இப்போது தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவை கதாநாயகனாக வைத்து, புது படத்தை இயக்குவதென முடிவு செய்துள்ளார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் அப்படத்தை, முன்பு தான் இயக்கிய ரஜினியின், தளபதி, கமலின், நாயகன் போன்ற படங்களுக்கு இணையான அதிரடி ஆக் ஷன் படமாக இயக்க திட்டமிட்டுள்ளார். இப் படத்தில், கதாநாயகியாக நடிக்க பிரபல இந்தி நடிகை ஒருவர், தமிழுக்கு இறக்குமதி ஆகிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
* பாலிவுட் நடன மாஸ்டரை, இரண்டாம் தாரமாக்கிக் கொண்ட செல்லம் நடிகர், மும்பையில் குடியேறியதில் இருந்தே, குறித்த நேரத்தில் படப்பிடிப்புகளில் ஆஜராவதில்லை. அப்படியே வந்தாலும், யாருடனாவது போனில் கடலை போடுவதையே, பிரதானமாக செய்து வந்தார். இதனால், அவர் மீது அதிருப்தியடைந்த தமிழ்ப்பட இயக்குனர்கள், தற்போது வில்லன் கேட்டகிரியில் இருந்தே, நடிகரை தூக்கி விட்டனர். இதே நிலை எல்லா மொழிகளிலும் உருவாகியிருப்பதால், தன் சொந்த பேனரில் உருவாகும் படத்தில் நடிக்கத் துவங்கி விட்டார் நடிகர்.
* தன்னை பிக்கப் நடிகர் என்று, பலரும் மேடைகளில் சொன்ன போதும், அடங்கவில்லை அந்த மூன்றெழுத்து ஹீரோ. அபிமான நடிகைகளை சந்திப்பதற்கென்றே, ஒரு கெஸ்ட்அவுசை அந்தப்புரம் போன்று பயன்படுத்தி வருகிறார். இரவில் மட்டுமே, ஆள் நடமாட்டம் இருக்கும் அந்த பங்களாவுக்கு, சில மெகா நடிகைகளே விசிட் அடித்து, குடி, குடித்தனம் என்று கும்மாளம் போடுகின்றனர்.
துணுக்கு மூட்டை!
* ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் முயற்சியாக, தமிழ், மலையாளம் என, இரு மொழிகளில் தயாராகும் படங்களாக தேடிப்பிடித்து நடிக்கிறார் நஸ்ரியா.
* இலங்கையில் நடந்த இறுதிப் போரை மையப்படுத்தி, உருவாகும், யாழ் என்ற படத்தின் பாடல்களும், வசனமும், ஈழத் தமிழிலேயே இடம்பெறுகிறதாம்.
* ஜில்லாவை தயாரித்த சூப்பர் குட் பிலிம்ஸ், அடுத்து, மகேஷ்பாபுவை ஹீரோவாக வைத்து தயாரிக்கும் படத்தை, லிங்குசாமி இயக்குகிறார்.
