தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : பிப் 02, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : பிப் 02, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அண்ணாதுரையின் ஆலோசனையின் பேரில், 'விடுதலை' அலுவலகத்தில், 1947-ல் ஈ.வெ.ரா.,வை சந்தித்தேன்.

முதல் கேள்வியே, 'நீ என்ன ஜாதி?' என்று தான் கேட்டார். எனக்குப் பெரும் அதிர்ச்சி; 'முதலியார்...' என்றேன். உடனே அவர்,

'கறி திங்கற முதலியாரா, தின்காத முதலியாரா?' என்று கேட்டார். பக்கத்திலிருந்த மணியம்மை யிடம், 'உங்க ஆளுங்க...' என்பது மாதிரி, கண்ணசைத்துக் காட்டினார்.

பின், ஜாதி பற்றி கேட்டதற்கு, அவரே விளக்க மளிக்கும் விதமாக 'ஏன் கேட்டேன் தெரியுமா? மற்றவர்களுக்கு, 'விடுதலை' என்பது சாதாரண பத்திரிகையாகத் தெரியலாம். ஆனால், இது, என்னுடைய எண்ணத்தின் வாகனம். உணர்ச்சிப்பூர்வமான ஈடுபாடு இருந்தால் தான், வேலை செய்ய முடியும். எல்லா ஜாதிக்காரர்களுக்கும், அந்த உணர்வு வராது. பார்ப்பனரல்லாதவர்களில் கூட, தங்களை உயர்வாகவும், மேல் ஜாதிக்காரர்களாகவும் நினைத்துக் கொள்கிறவர்கள் இருக்கின்றனர். ஆகவே, 'விடுதலை' பத்திரிகையில் பணியாற்றுவதற்கு, ஜாதிப் பின்னணியும் பார்ப்பதுண்டு...' என்றார்.

இதை, அப்படியே, அண்ணாதுரையிடம் சொன்ன போது, 'அவர் தாம் ஈ.வெ.ரா.,' என்றார்.

— பத்திரிகையாளரான காலம் சென்ற கண்ணன் ஒரு கட்டுரையில்.

காந்திஜி, தென் ஆப்ரிக்காவில், வக்கீல் தொழில் செய்யச் சென்றபோது, சார்லஸ் டவுன் என்ற ஊரில் இறங்கினார். அங்கிருந்து, குதிரை வண்டியில் பயணம் செய்ய வேண்டியிருந்தது. அதற்குரிய சீட்டையும், அவர் முன்பே வாங்கியிருந்தார்.

குதிரை வண்டிகளில், பெரும்பாலும், வெள்ளைக்காரர்களே போவர். அவர்களுடன், இந்தியர்களைச் சரி சமமாக, உட்கார வைக்க மாட்டார்கள்.

அன்று, காந்திஜி போக இருந்த வண்டியின் நடத்துனர், ஒரு ஆங்கிலேயன். அவன், காந்திஜியை வண்டி ஓட்டிக்குப் பக்கத்தில் உட்கார வைத்தான். வண்டியின் உள்ளே, வெள்ளையர்கள் உட்கார்ந்திருந்தனர். அதனால், அவரை உள்ளே உட்கார வைக்க, மறுத்து விட்டான். ஒரு வழியாக, அடுத்த ஊர் வந்து சேர்ந்தது. அப்போது, அந்த நடத்துனர், காந்திஜி இருந்த இடத்தில் உட்கார்ந்து, புகை பிடிக்க விரும்பினான். ஆகவே, வண்டியின் படியில், ஒரு சாக்கை விரித்து, அதில், அவரை உட்காரச் சொன்னான். இது பெரிய அநியாயம் அல்லவா... காந்திஜி இதை எப்படி சகிப்பார்! அவர், அவனிடம், 'நியாயப்படி, நீ எனக்கு உள்ளே இடம் கொடுத்திருக்க வேண்டும். அப்படியல்லாமல், வெளியே உட்கார வைத்தாய். நானும், போனால் போகிறது என்று உட்கார்ந்தேன். இப்பொழுதோ, எல்லாரும் கால் வைத்து ஏறும் படியில், உட்காரச் சொல்லுகிறாயே... நான் அங்கே உட்கார மாட்டேன்...' என்றார்.

அவ்வளவு தான்... அந்த முரடன், காந்திஜி அருகில் வந்து. 'பளார் பளார்' என்று, அவரது கன்னத்தில் அறைந்து, வண்டியிலிருந்து அவரை கீழே தள்ளினான்.

காந்திஜியோ, வண்டியின் கைப்பிடியை கெட்டியாகப் பிடித்துக் கொண்டார்; வேறு ஒன்றும் செய்யவில்லை. அவனோ, அடிப்பதையும், இழுப்பதையும் விடவில்லை. இவை அனைத்தையும், வண்டிக்கு உள்ளே இருந்த வெள்ளையர்கள் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். அவர்களும் மனிதர்கள் தானே! அவர்களில் சிலர், காந்திஜியின் மேல் இரக்கம் கொண்டனர்.

ஒருவர் அந்த நடத்துனரைப் பார்த்து, 'அவரை ஏன் அடிக்கிறாய்?' என்று கேட்டார். இன்னொருவரோ, 'அவர் சொல்வது நியாயம் தானே...' என்றார். மற்றொருவர், 'பரவாயில்லை; அவரும் எங்களோடு உட்காரட்டுமே...' என்று சொன்னார்.

அந்த நடத்துனரோ, 'முடியவே முடியாது' என்று கத்தினான். ஆனால், அவன் காந்திஜியை அடிப்பதை மட்டும் நிறுத்தினான்; எல்லாரும் சொல்லும் போது என்ன செய்வது...

எனினும், அவன் காந்திஜியை வண்டிக்குள் உட்கார வைக்கவில்லை, வண்டி ஓட்டியின் மறுபுறத்தில், வேலைக்காரன் ஒருவன் உட்கார்ந்திருந்தான். அவனை, வண்டியின் படியில் உட்கார வைத்து. அந்த இடத்தை, காந்திஜிக்குக் கொடுத்தான். அவரும் எதுவும் சொல்லாமல், அந்த இடத்தில் அமர்ந்து, பயணம் செய்தார். இவ்வாறு, பல துன்பங்களை அனுபவித்த பின், காந்திஜி, அவர் போக வேண்டிய ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்.

காந்திஜி மட்டுமா... தென் ஆப்ரிக்காவில் இருந்த அத்தனை இந்தியர்களும், இப்படித்தான் துன்பப்பட்டனர்; அதை நினைத்துத்தான், காந்திஜி வருந்தினார்.

— 'காந்திஜியின் வாழ்வில்' என்ற நூலிலிருந்து.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us