PUBLISHED ON : பிப் 16, 2014

சுயசரிதை எழுத விரும்பாத கமல்!
ஏற்கனவே, 'பத்மஸ்ரீ' விருதை பெற்ற கமல், சமீபத்தில், 'பத்மபூஷன்' விருதையும் பெற்றுள்ளார். இதையடுத்து, இந்த விருது அளிக்கப்பட்டதில், ரொம்பவே மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ள கமல், 'இந்த விருது என்னை பொறுப்புள்ள கலைஞனாகவும் மாற்றியுள்ளது. இன்னும், சினிமாவில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற உத்வேத்தைக் கொடுத்துள்ளது...' என்கிறார். மேலும், 'சுயசரிதை எழுதும் எண்ணம் உள்ளதா?' என்று அவரிடம் கேட்ட போது, 'எழுத மாட்டேன். காரணம், எனக்கு பொய்யாக எழுத தெரியாது. அப்படி நான் உண்மைகளை எழுதும் பட்சத்தில், பலரது மனசு காயப்படும். ஆனால், நான் யாரையும் காயப்படுத்த விரும்பவில்லை...' என்று கூறுகிறார்.
— சினிமா பொன்னையா
அமலாபால் சைடு பிசினஸ்!
சினிமாவில் மார்க்கெட் இருக்கும் போதே சுதாரித்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்த அமலாபால், திருவனந்த புரத்தில், ஒரு ஜவுளி ஷோ ரூம் திறக்க திட்டமிட்டுள்ளார். எட்டு கோடி ரூபாய் முதலீட்டில், அந்த ஷோரூமை திறக்கும் அமலாபால், ஒருவேளை, இன்னும் கூடுதலாக முதலீடு தேவைப்பட்டால், தனக்கு, மேலும் சில கோடிகளை தர வேண்டும் என்று, தன் வருங்கால லைப் பார்ட்டனரான, டைரக்டர் விஜய்யிடம் வேண்டுகோள் வைத்து, அவரையும், அந்த ஜவுளி வியாபாரத்தில் பங்குதாரராக்கியுள்ளார். இரவல் துணியாம், இரவல் சட்டையாம்; இழுத்துக் கொட்டு மேளத்தை, இருகக் கட்டு தாலியை!
— எலீசா
'ஹன்சிகாவே என் டார்லிங்...' - சிம்பு!
நயன்தாராவுடன் மீண்டும் சிம்பு நடிப்பதால், அவர்களுக்கிடையிலான காதல் கெமிஸ்ட்ரி, மீண்டும், 'ஒர்க்கவுட்டாகி' இருப்பதாக செய்திகள் புகைந்து வருகின்றன. ஆனால், சிம்புவோ, 'இனி மேல், எப்ப3ோதுமே, என் டார்லிங் ஹன்சிகா மட்டும் தான்...' என்று, உரக்க சொல்லி வருகிறார். அதோடு, அதை உலகுக்கு உணர்த்தும் வகையில், தன் வாலு படத்தில், 'நயன்தாராவும் வேண்டாம், ஆண்ட்ரியாவும் வேண்டாம், ஹன்சிகா மட்டுமே போதும்...' என்றொரு பாடலை எழுதி, பின்னணி பாடியுள்ளார் சிம்பு. அதோடு, அப்பாடலில், ஹன்சிகாவின் அழகை, மானாவாரியாக புகழ்ந்து தள்ளியிருக்கிறார்.
— சி.பொ.,
'பஞ்ச் டயலாக்' பேசும் சந்தானம்!
பஞ்ச் டயலாக்கிற்காகவே இளவட்ட ரசிகர்கள் படம் பார்க்க வருகின்றனர் என்பதால், அவர்களை கருத்தில் கொண்டு, பிரச்னைக்கு வழிவகுக்காத வகையில், தற்போது, அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்கள், 'பஞ்ச் டயலாக்' பேசி வருகின்றனர். இந்நிலையில், காமெடி நடிகர் சந்தானத்துக்கும், பஞ்ச் டயலாக் பேசும் ஆசை தலை தூக்கியுள்ளது. அதனால், தான் ஹீரோவாக நடித்து வரும், வல்வனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில், 'வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்; என் சொல்லே, நண்பர்களுக்கு ஆயுதம்' என்று, 'பஞ்ச்' பேசி நடித்துள்ளார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
* விரல் வித்தை நடிகர், என்னதான் கன்டிஷன் போட்டாலும், அவரது காதலி நடிகை அவற்றை பின்பற்றுவதில்லை. மாறாக, அவர் எந்தெந்த நடிகர்களுடன் பேசக் கூடாது என்கிறாரோ அவர்களுடனெல்லாம் கடலை போடுகிறார். இதனால், அவர்களுக்கிடையிலான காதல், கூடிய சீக்கிரமே வெடித்து விடும் என்று தெரிகிறது.
* பார்ட்டி வைத்தே ஹீரோக்களை கவர் செய்யும் பால் நடிகை, தற்போது, சில மேல்தட்டு ஹீரோக்களுக்கு, தொடர்ந்து பார்ட்டிக்கு அழைப்பு விடுக்கிறார். ஆனால், நடிகையிடம் சிக்கினால், அதன்பின், படவாய்ப்புகளுக்கு சிபாரிசு செய்தாக வேண்டும் என்று உஷாராகிவிட்ட நடிகர்கள், அம்மணியின் பிடியில் சிக்காமல் தொடர்ந்து, 'எஸ்கேப்' ஆகின்றனர்.
* ஏ,ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில், நடிக்கவிருக்கும் விஜய், அதற்கடுத்து சிம்பு தேவன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
* தன் டுவிட்டரில், தன்னைப் பற்றிய தகவல் மட்டுமின்றி, சில நடிகர், நடிகைகளின் நடிப்பு குறித்தும் விமர்சித்து வருகிறார் சமந்தா.
* மணிரத்னம் இயக்கவிருக்கும் படத்தில், மீண்டும் ஐஸ்வர்யா ராய் நடிக்கிறார். நாகார்ஜுனா, மகேஷ்பாபு இணைந்து நடிக்கும் அப்படத்தில், ஐஸ்வர்யாவுக்கு முக்கிய கேரக்டர் கொடுத்து, ரீ-என்ட்ரி கொடுக்கிறார் மணிரத்னம்.
* சமீபத்தில் வெளியிடப்பட்ட 86வது ஆஸ்கர் விருதுக்கான பட்டியலில், ஒரு இந்திய படமோ, இந்திய நடிகர் - நடிகைகளின் பெயரோ இடம் பெறவில்லை.
* விமல், சிவகார்த்திகேயன் மற்றும் விதார்த் ஆகிய நடிகர்களை, பங்காளி என்றே அழைக்கிறார் பரோட்டா சூரி.

