
நான், திரிபுரா மாநிலத்தின் தலைமைச் செயலாளராகப் பணிபுரிந்த போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த, சுகமய் சென்குப்தா என்பவர் முதல்வராக இருந்தார். நீண்ட பளபளக்கும் வெண்மையான தாடியுடன், சாட்சாத் வசிஷ்ட மகரிஷி மாதிரி தோற்றமளித்தாலும், சிந்தனை, சொல், செயலில் சகுனியின் சுபாவத்தை கொண்டவர் அவர். எனக்கும், அவருக்கும் கண்டதும் மோதல்.
அவர் ஒரு சந்தேகப் பேர்வழி என்பதாலும், அவரைக் கேட்காமல், இந்திராவால் அனுப்பப்பட்டவன் நான் என்பதாலும், என்னை, இந்திராவின் ஒற்றன் என்றே நினைத்து விட்டார். அவருடைய காரியதரிசியிடம், 'முதல்வர் டில்லி போக, ஏதாவது திட்டம் போட்டிருக்கிறாரா?' என்று கேட்டால் கூட, அவரை கண்காணிக்கிறேன் என்று நினைத்து விடுவார்.
ஒருமுறை நாங்கள் பேசிக் கொண்டிருந்த போது, அவர் வாலிப வயதில், பல நாடகங்களில் நடித்திருப்பதாகவும், ராமாயண நாடகத்தில், ராமராக நடிப்பது தான், அவருடைய ஸ்பெஷல் வேடம், என்றும் கூறினார்.
'அப்படியானால், அப்போது உங்களுக்கு தாடி இருந்திருக்காதே...' என்றேன். 'தாடி இருந்தால் என்ன... நான் தாடியோடு தான், ராமனாக நடித்தேன்...' என்று, ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். 'தாடியோடா, சீதையை கல்யாணம் செய்து கொண்டீர்கள்...' என்றேன் திகைப்புடன். 'ஆமாம்...' என்று சொல்லி, 'வால்மீகி ராமாயணத்தில், எந்த இடத்தில், ராமர் மழுங்கச் சிரைத்துக் கொண்டு இருந்தார் என்று சொல்லியிருக்கிறது... ஒரு சுலோகம் காட்டு பார்ப்போம்! அதுவும் தவிர, அந்தக் காலத்தில் பிளேடு, ரேசர் எல்லாம் இருந்ததா... பாவம் அவர், காட்டில் யாரிடம் எப்படி தாடியை மழித்துக் கொண்டிருப்பார்...' என்றார்.
இந்த உரையாடலுக்கு பின், கடந்த, 35 ஆண்டுகளில், முடிந்த வரை, வால்மீகி ராமாயணத்தை படித்துப் பார்த்ததிலும், அதில் புலமை உள்ளவர்களைக் கேட்டறிந்து கொண்டதிலும், ராமர் முகம், ரவிவர்மா படங்களிலோ, மெகா சீரியலிலோ பார்த்த மாதிரி, வெல்வெட்டு போல் இருந்திருக்க வேண்டுமென்பதற்கு, ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை.
‑— ப.ஸ்ரீ.ராகவன் ஐ.ஏ.எஸ்., எழுதிய, 'நேரு முதல் நேற்று வரை' நூலிலிருந்து.
ஹைதர் அலி, தன் ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்கள் அனைத்தையும், இதர நாடுகளிலிருந்து தான் விலைக்கு வாங்கினார். ஆனால், திப்பு சுல்தானோ தனக்கு தேவையான அனைத்து ஆயதங்களையும், மைசூரிலேயே தயாரித்துக் கொண்டார். அவருடைய பீரங்கிகள், மைசூரிலேயே வார்க்கப்பட்டன. ஆங்கிலேயே படைகளின் பீரங்கிகளை விட, பெரிதாகவும், குண்டுகள் அதிக தொலைவு செல்லும் வீச்சையும் பெற்றிருந்தன.
ராக்கெட் ஆயுதங்களையும், திப்பு சுல்தான் மைசூரிலேயே உற்பத்தி செய்து, போர்க்களத்தில் உபயோகித்தார். ராக்கெட் ஆயுதம் பயன்படுத்தப்படாமலிருந்த காலத்தில், ஐரோப்பாவில் நடைபெற்ற யுத்தங்களில் கூட, முதன் முதலில், திப்பு சுல்தான் தான், ஆங்கிலேயருக்கு எதிராக, மைசூர் யுத்தத்தில், ராக்கெட்டுகளை பிரயோகம் செய்தார். சீறிப் பாய்ந்து வரும் ராக்கெட்டுகளை கண்டு, வெள்ளைக்காரப் படைகள் பதறிப் போயின.
ஏ.பி.ஜே. அப்துல்கலாம் (முன்னாள் இந்தியப் ஜனாதிபதி) ஒரு சமயம், அமெரிக்காவின் ராக்கெட் தொழில் நுட்ப ஆய்வுக்கூடமான, 'வாலேபஸ்'சுக்கு சென்றார். அமெரிக்க ராணுவ ஆய்வு அமைப்பான, நாசாவுக்கு சொந்தமான இடம் அது. அங்கு வரவேற்பு கூடத்தில், ராக்கெட் தாக்குதல் நடக்கும் ஒரு போர்க்களக் காட்சியை பிரதிபளிக்கும் மிகப் பெரிய ஓவியம், சுவரை அலங்கரித்திருந்தது. அந்த இடத்திற்கு பொருத்தமாக இருத்த அவ்ஓவியம் குறித்து அப்துல்கலாம், தம் சுயசரிதையில்,
'அந்த ஓவியத்தில், ராக்கெட்டுகளை செலுத்திக் கொண்டிருந்த வீரர்கள் வெள்ளையர்களாக இல்லாதது, என் கவனத்தை கவர்ந்தது; கூர்ந்து பார்த்தேன். ஆசிய உருவமைப்பும், நிறமும் கொண்டவர்களாக அவர்கள் காணப்பட்டனர். பிரிட்டிஷாரை எதிர்த்து, இருநூறு ஆண்டுகளுக்கு முன், ஸ்ரீரங்கபட்டணத்தில் (கர்நாடக மாநிலம்) திப்பு சுல்தான் நடத்திய விடுதலைப் போர்க் காட்சி அது என்பதைக் கண்டு, பிரமித்துப் போனேன். திப்புவின் தாய்நாடே, நினைவு கூர தவறிய அவருடைய ராக்கெட் தொழில்நுட்பத்தை, நாசா நினைவுக் கூர்ந்து, ஓவியமாக தீட்டி, அலங்காரமாக வைத்திருந்ததைப் பார்த்த போது, ஒரு இந்தியன் என்ற வகையில் பெருமிதத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தது...' என்று குறிப்பிட்டுள்ளார் அப்துல்கலாம்.
— ஜி.ஆளவந்தார் எழுதிய, 'மாவீரன் திப்புசுல்தான்' நூலிலிருந்து.
நடுத்தெரு நாராயணன்

