PUBLISHED ON : ஆக 17, 2014

கதை எழுதும் ஏ.ஆர். ரஹ்மான்!
இந்தியில் ஒரு படம் தயாரிக்கும் முயற்சியில் இறங்கிய ஏ.ஆர்.ரஹ்மான், அதைத் தொடர்ந்து, தமிழில் இரண்டு படங்களை தயாரிக்கிறார். இதுபற்றி, அவர் விடுத்துள்ள செய்தியில், 'வாழ்க்கை தந்த அனுபவங்களாலும், சந்தித்த மனிதர்களாலும் எனக்குள் பல கதைகள் உருவாகியுள்ளன; அதில் ஒரு கதையை தான், இப்போது இந்தியில் தயாரிக்கிறேன். அதேபோல், தமிழில் தயாரிக்கவிருக்கும் படங்களுக்கான கதைகளை, எப்போதோ தயார் செய்து விட்டேன்; அப்படங்களில் ஒன்றில், இருபது வயது இளைஞர் ஒருவர் நாயகனாக நடிக்கிறார். மேலும், கதை உருவாக்குவது, தயாரிப்பது, இசையமைப்பதோடு என் எல்லையை நிறுத்திக் கொள்வேன்; காரணம், படங்களை இயக்குவது பெரிய சுமை என்பது எனக்கு தெரியும்...' என்று கூறியுள்ளார்.
— சினிமா பொன்னையா
தமிழுக்கு வந்த இன்னொரு மலையாள நடிகை!
மலையாளம், தெலுங்கு மற்றும் கன்னட படங்கள் பலவற்றில் நடித்தவர் கேத்ரின் தெரசா. கேரளாவை சேர்ந்தவரான இவர், மெட்ராஸ் என்ற படம் மூலம், தமிழுக்கு இறக்குமதியாகியுள்ளார். இப்படம் இன்னும் திரைக்கு வரவில்லை என்றாலும், அதற்குள் ஜெயம் ரவி, அஞ்சலியுடன் நடித்துவரும் படம் மற்றும் அதர்வா நடிக்கும், கணிதன் ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். லட்சுமிமேனன் மலையாள படங்களில் நடிக்கச் சென்றுள்ள இந்த நேரத்தில், இன்னொரு மலையாள நடிகை களமிறங்கியிருப்பதோடு, அவரை விட கிளாமர் ஏரியாவிலும் புகுந்து விளையாடக் கூடியவர் என்பதால், மேலும் சில இயக்குனர்களின் கவனம், கேத்ரின் தெரசா பக்கம் திரும்பியுள்ளது. ஆக, லட்சுமிமேனன் இடத்துக்கு ஸ்ரீதிவ்யா போட்டியாவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இப்போது கேத்ரின் தெரசா திடீரென்று களமிறங்கி, அவருக்கு பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். புது வெள்ளத்தில் கெளுத்தி மீன் ஏறுவது போல!
— எலீசா
சந்தானத்தை காலி செய்த சூரி!
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் நடித்த பின், சந்தானத்தின், 'ரேட்டிங்' எகிறி விட்டது என்றாலும், அதுவே அவரது காமெடி மார்க்கெட்டுக்கு உலை வைத்து விட்டது. காரணம், இப்போது அவர், கதாநாயகனாகி விட்டதால், முன்பை விட அதிக சம்பளம் கேட்பார் என்று, காமெடி வேடத்துக்கு சந்தானத்தை அணுக பட அதிபர்கள் தயங்குகின்றனர். மாறாக, பரோட்டா சூரியை ஒப்பந்தம் செய்து வருகின்றனர். அதனால், சந்தானத்தை காலி செய்ய இதுதான் சரியான நேரம் என்று நினைத்த சூரி, சம்பள விஷயத்தில் அடக்கி வாசித்தபடி, புதிய படங்களை கைப்பற்றி வருகிறார். அந்த வகையில், தற்போது சூரியின் கையில், ஒரு டஜன் படங்களும், சந்தானத்தின் கையில் நான்கு படங்கள் மட்டுமே உள்ளன.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
த்ருஷ்யம் படத்தின் தெலுங்கு ரீ-மேக்கை இயக்கியுள்ள அந்த முன்னாள் பிரபல நடிகை, தமிழிலும் அப்படத்தை இயக்க ஆசைப்பட்டார். ஆனால், பட நாயகனான விஸ்வரூபம் நடிகர், அதற்கு ஒத்துக்கொள்ளவில்லை. இதனால், அவர் மீது உள்ளூர கோபத்தில் இருக்கிறார் நடிகை.
பப்ளிமாஸ் நடிகை மீண்டும் தளபதி நடிகருடன் இணைந்து விட வேண்டும் என்று எடுத்த முயற்சி, தோல்வியடைந்து விட்டது. ஹாசன் நடிகை உள்ளே புகுந்து, இவரை துரத்தி விட்டார். அதேபோல், இன்னொரு படத்திலும், ஐ பட நடிகை புகுந்து இவரை வெளியேற்றி விட்டார். மேற்படி படங்களின் கதாநாயகர்களே, அவர்கள் பக்கம் சாய்ந்து, இவரை ஓரங்கட்டி விட்டனர். அதனால், தன் மீதான ஈர்ப்பு கோலிவுட் கதாநாயகர்களுக்கு குறைந்து விட்டதன் காரணம் என்ன என்று தெரியாமல், கவலையில் உறைந்து போயிருக்கிறார் நடிகை.
துளிகள்!
* விஷாலின் பிறந்த நாளான ஆகஸ்ட், 29ம் தேதி, அவர் நடித்து வரும் பூஜை படத்தின், 'டீஸர்' வெளியாகிறது.
* சுந்தர்.சி இயக்கத்தில், தீயா வேலை செய்யணும் குமாரு மற்றும் அரண்மனை படங்களில் நடித்துள்ள ஹன்சிகா, அவர் இயக்கும் அடுத்த படத்தில், விஷாலுக்கு ஜோடியாக நடிக்கிறார்.
* தான் இயக்கும் படங்களில் நடிப்பதில்லை என்ற கொள்கையை கடைபிடித்து வருகிறார், நடிகை ஸ்ரீப்ரியா.
அவ்ளோதான்!
