தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஆக 17, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஆக 17, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவிற்கு —

என் வயது 21; இன்ஜினியரிங் மூன்றாம் ஆண்டு படிக்கிறேன். ஒரு தங்கை இருக்கிறாள்; என் குடும்பம், ஒரு காலத்தில் வசதியாய் வாழ்ந்து, தற்போது வறுமையில் வாடி கொண்டிருக்கிற ஏழைக் குடும்பம். என் அம்மா மிகவும் பொறுமைசாலி; என் தந்தை, 20 பேருக்கு வேலை கொடுத்தவர், தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தால், மன உளைச்சலுக்கு ஆளாகி, கவலையை மறக்க, மது அருந்த துவங்கியவர், இன்று குடிக்கு முழு அடிமையாகி விட்டார்.

வாழ்க்கையில் யாருமே படாத துன்பங்களை நாங்கள் அனுபவித்துக் கொண்டிருந்தாலும், உறவினர்களின் உதவியால் சற்று நம்பிக்கையுடன் வாழ்கிறோம். நானும், எப்படியாவது குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வந்துவிட வேண்டும் என்ற வைராக்கியமும், லட்சிய வெறியும் கொண்டு நன்றாக படித்து வருகிறேன். ஆனால், சிறுவயதிலிருந்தே என் தந்தையை கண்டு அஞ்சியதாலோ என்னவோ, பயம் நிறைய உண்டு. இதனால் ஒரு செயலை செய்ய நினைத்தால், பலவிதமான எதிர்மறை எண்ணங்களும் வருகின்றன. இத்தகைய மனத் தடுமாற்றத்தினால், ஒரு சில இடங்களில் தோல்வியை தழுவுகிறேன்.

நான், பிளஸ் 1 படிக்கும் போது பள்ளியில் புதிய மாணவன் ஒருவனின் நட்பு கிடைத்தது. அவன் மிகவும் நல்லவன்; பிறருக்கு உதவி செய்வான். ஆனால், அவனை எல்லாரும் தவறாக பேசினர்; அவன் நடையையும், பாவனையையும் கேலி செய்தனர். ஆனால், எனக்கு அவனைப் பார்த்தால் எதுவும் தோன்றியதில்லை. ஒருமுறை அவன் வீட்டிற்கு சென்றிருந்தேன்; என் எண்ணம் அனைத்தும் மாறியது. அவன் எல்லா தவறான பழங்கங்களையும் கொண்டிருந்தான். எனக்கு ஆபாச படங்களை காட்டியதுடன் மட்டுமல்லாமல் என்னிடம் நெருங்கி பழக ஆரம்பித்தான். சொல்வதற்கே வெட்கமாக இருக்கிறது... ஓரினச் சேர்க்கையில் ஈடுபட்டான்; நானும் அவனுக்கு இணங்கி விட்டேன். மேலும், எனக்கு தவறு என்று தெரிந்த இந்த விஷயத்தை மீண்டும் மீண்டும் செய்தேன்; கட்டுப்பாடாக இருக்க நினைத்தும் என்னால் முடியவில்லை.

தற்போது, ஒரு பெண்ணை காதலிக்கிறேன்; அவள் தான் என் மனைவி என்று முடிவு செய்து விட்டேன். அவள் மிகவும் நல்லவள்; ஆனால், பொறுமைசாலி அல்ல. நான் தவறு செய்தால், தட்டிக் கேட்கும் ஒரே ஜீவன் அவள். அவள் மேல் கொண்ட காதலால் என் படிப்பிற்கு, எந்த ஒரு பாதிப்பும் ஏற்பட்டதில்லை.

அவளிடம் என் குடும்ப விஷயங்கள் அனைத்தையும் சொல்லி விட்டேன். ஆனால், அந்த பழக்கத்தை மட்டும் சொல்லவில்லை. அவளிடம் இதைச் சொல்லலாமா வேண்டாமா என, பெரும் குழப்பத்தில் இருக்கிறேன். தற்போது அந்த மாதிரியான தவறான செயல்களில் ஈடுபடவில்லை. என் காதலியிடம், குடும்ப நிலையை மேம்படுத்திய பின், திருமணம் செய்து கொள்வதாக கூறி, எட்டு ஆண்டுகள் காத்திருக்க சொல்லியிருக்கிறேன்; அவளும் சம்மதம் தெரிவித்து விட்டாள்.

அம்மா... என் நண்பரிடம் கொண்ட அந்த தவறான பழக்கத்தை அவளிடம் சொல்லி விடவா... எனக்கு அவளிடம் எதையும் மறைக்க பிடிக்கவில்லை. ஆனால், இந்த விஷயத்தை சொன்னால், கண்டிப்பாக என்னை ஏற்க மாட்டாள்; என்ன செய்வது என்று எனக்கு வழிகாட்டுங்கள் அம்மா.

இப்படிக்கு,

உங்கள் மகன்.


அன்புள்ள மகனுக்கு —

உன் கடிதம் கிடைத்தது; பொதுவாகவே, 16 வயது என்பது ஹார்மோன் குழப்பங்கள் நிகழும் வயது. இந்த வயதில் தடுமாற்றங்கள் நிகழ்வது சகஜம். கெட்ட நண்பன் சகவாசத்தால் ஓரின சேர்க்கையாளனாக மாறியிருக்கிறாய். தற்போது அதிலிருந்து விலகி விட்டதாகவும் கூறுகிறாய். பின், ஏன் இந்த விஷயத்தை அவளிடம் சொல்வதற்கு இத்தனை தவிக்கிறாய்? நீ என்ன கின்னஸ் சாதனையா நிகழ்த்தியிருக்கிறாய், உன் காதலியிடம் பெருமையுடன் சொல்லி மகிழ துடிக்கிறாய்?

மகனே... புரியாத வயதில் தெரியாத ஒரு காரியத்தை செய்து விட்டாய்; அதையே ஏன் திரும்பத் திரும்ப நினைத்து மருகிக் கொண்டிருக்கிறாய்?

கால் இடறி சேற்றில் விழுந்து விட்டோம் என்பதற்காக அதையேவா காலத்துக்கும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்... இல்லை தானே! இந்த இடத்தில் பள்ளம் இருக்கு என்று சுதாரித்து, அடுத்த முறை அந்த இடத்தைக் கடக்கும் போது கவனமாக காலை வைத்து, சுற்றிப் போவோமா இல்லையா? அதே போன்று, மீண்டும் அந்த புதைக் குழியில் விழுந்து விடாமல் எச்சரிக்கையாக இரு; அது போதும்.

கண்ணா... நிகழ்காலம் மட்டும் தான் நமக்கானது; இறந்த காலம் புதைக்கப்பட்ட சவம்; அதை தோண்டி எடுத்து ஆராய்ச்சி செய்ய நினைக்காதே; நாற்றம் தான் அடிக்கும். அதைவிடுத்து, மனசுக்குள் நீ வெறுக்கும் அந்த கடந்த காலத்தை கடந்து போ... உனக்கான கடமைகளும், நீ புரிய வேண்டிய சாதனைகளும் கடல் போல் விரிந்து கிடக்கு!

காதலில் ஈடுபடும் காதலனோ, காதலியோ தங்கள் எதிர்பாலினரிடம் தங்களின் இருண்ட பக்கங்களை, வெளிச்சம் போட்டு காட்டக் கூடாது. அப்போதைக்கு மன்னிப்பதாக கூறுபவர்கள் பின்னாளில், குத்திக் காட்டி துன்புறுத்துவர். அதன்பின், சொர்க்கத்தின் கதவுகள் மூடி, நரகத்தின் கதவுகள் திறந்து கொள்ளும். காதலியை எட்டு ஆண்டுகள் காத்திருக்க சொல்லியிருக்கிறாய்; இதுமிக நீண்ட இடைவெளி. இடைப்பட்ட காலத்தில் மீண்டும் ஓரினச்சேர்க்கை பழக்கம் உன்னை தொற்றிக் கொண்டாலும் தொற்றிக் கொள்ளும்; ஜாக்கிரதை!

எதற்கும் முன்னெச்சரிக்கையாக, ஹெச்.ஐ.வி., டெஸ்ட் எடுத்துப் பார்த்து விடு; ஓரின சேர்க்கையாளர்களை ஹெச்.ஐ.வி., எளிதாக தாக்கும். டெஸ்ட் ரிப்போர்ட் நெகடிவ் வந்தால் குற்ற உணர்ச்சி இல்லாமல் வாழ்க்கையை தொடரலாம். எட்டு ஆண்டுகள் காத்திருக்க முடியாமல் உன் காதலி, உன் கை நழுவி போகக் கூடும் அல்லது அவளுடைய பெற்றோர் அவளுக்கு திருமணம் செய்து வைத்து விடலாம். அம்மாதிரியான சூழ்நிலை வந்தால், மனமொடிந்து விடாதே... தங்களுடைய இருண்ட ஏழ்மைக்கு, உன் மூலம் விடிவு கிடைக்கும் என்று, கண்களில் ஏக்கத்தை நிரப்பி, உன் கைகளை நம்பி, ஒளிமயமான எதிர்காலத்தை கனவுகண்டு கொண்டிருக்கும், உன் பெற்றோரையும், தங்கையையும் மனதில் இருந்திக் கொள்; உன் லட்சியத்தில் உறுதியாக இரு.

படிப்பு முடிந்ததும், வேலைக்கு போய், பொறுப்புமிக்க அண்ணனாய் உன் தங்கைக்கு திருமணம் செய்து வை. தாயை அன்பாக பார்த்துக் கொள்; குடி நோயிலிருந்து தந்தையை மீட்டு பராமரி. நீண்ட நாள் காத்திருக்க வைக்காமல், உன் கடமை அனைத்தும் முடிந்த பின், உன் காதலி உனக்காக காத்திருந்தால் அவளை மணந்து கொள்; வாழ்த்துகள்!

— என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us