PUBLISHED ON : செப் 14, 2014
தீபாவளிக்கு ஐந்து மெகா படங்கள் ரிலீஸ்!
வருகிற தீபாவளிக்கு விஜய்யின், கத்தி விஷாலின், பூஜை படங்கள் தான் வெளிவருவதாக இருந்தது. ஆனால், கத்தி படத்திற்கு எதிர்ப்புகள் எழுந்திருப்பதால், அப்படம் வெளியாவதில் சந்தேகம் நிலவியது. அதன் காரணமாக, ஐ படத்தை வேகவேகமாக முடித்து, தீபாவளிக்கு வெளியிடும் வேலைகளில் இறங்கினார் இயக்குனர் ஷங்கர். இந்த சூழலில் அடுத்தபடியாக கமலின், உத்தம வில்லன், தனுஷின், அனேகன் படங்களும் தீபாவளி போட்டியில் குதிக்க, வரிந்து கட்டியுள்ளன. இதைப்பார்த்த விஜய், 'தீபாவளி ரிலீஸ் என்று ஏற்கனவே அறிவித்து, பின்வாங்கினால் சரிவராது...' என்று கூறி, தற்போது, கத்தி படத்தை எப்படியேனும் தீபாவளிக்கு வெளியிட்டு விட வேண்டும் என்று, திரைக்கு பின்னால் பிரச்னைகளை சுமூகமாக தீர்க்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார். ஆக, இந்த தீபாவளிக்கு கமல், விஜய், விக்ரம், தனுஷ் மற்றும் விஷால் என, ஐந்து படங்கள் வெளியாவது உறுதி.
— சினிமா பொன்னையா
சிவப்பு ரோஜாக்கள் - 2ம் பாகம் தயாராகிறது!
கடந்த, 1978ல் கமல், ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான படம் சிவப்பு ரோஜாக்கள். இப்படத்தை இயக்கிய பாரதிராஜா, அப்படத்தை மீண்டும் ரீ-மேக் செய்ய இருப்பதாக செய்திகள் வெளியாகி வந்தன. ஆனால், அவரோ, 'அந்த படத்தின் இரண்டாம் பாகத்தை தான் அடுத்து இயக்கப் போகிறேன்...' என்று செய்தி வெளியிட்டுள்ளார். மேலும், 'சிவப்பு ரோஜாக்கள் படத்தை இன்றைய இளைஞன் ஒருவன் பார்த்தால், அவனது ரியாக் ஷன் எப்படி இருக்கும் என்பதை கருத்தில் வைத்து, இதற்கான கதை உருவாக்கப்படும்...' என்று கூறியுள்ள பாரதிராஜா, அதையடுத்து, என்னுயிர்த்தோழன் படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்க இருக்கிறார்.
— சி.பொ.,
இரண்டு கோடி கேட்கும் நயன்தாரா!
ஐ படத்தில் விக்ரமுடன் நடித்துள்ள எமி ஜாக்சன், அடுத்தபடியாக மங்காத்தா டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதே படத்தில், இன்னொரு நாயகியாக நயன்தாராவும் இருக்கிறார். மேலும், மதராசப்பட்டினம் தாண்டவம் மற்றும் ஐ என, மூன்று படங்களில் மட்டுமே நடித்திருக்கும் எமிக்கு, இரண்டு கோடி சம்பளம் பேசியுள்ளனர். இந்த விவகாரம் நயன்தாராவின் காதுக்கு சென்றபோது, ஒருகோடி வாங்கி வரும் அவர், 'எனக்கும் 2 கோடி ரூபாய் தர வேண்டும்...' என்று போர்க்கொடி பிடித்துள்ளார். அதோடு, 'தமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நான் கோலோச்சி வரும் நடிகை...' என்றும் தன் வாதத்தை முன் வைத்துள்ளார்.
— எலீசா
கமல் படத்துக்கு 10 லட்சம் அபராதம்!
மலையாளத்தில் மோகன்லால், மீனா நடித்து வெளியான படம் த்ரிஷ்யம். இந்த படத்தை தற்போது தமிழில் கமல், கவுதமி நடிப்பில், பாபநாசம் என்ற பெயரில், ரீ-மேக் செய்கின்றனர். ஆனால், மலையாளத்தில், 'ஒரு மழை காலத்து...' என்ற பெயரில், ஒரு நாவலை எழுதியிருந்த சதீஷ்பால் என்பவர், 'என் நாவலில் இருந்து தான், த்ரிஷ்யம் கதையே உருவானது; அதனால், அதை தமிழில் ரீ-மேக் செய்யும் உரிமையை நான் யாருக்கும் கொடுக்கவில்லை...' என்று, எர்ணாகுளம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து விசாரித்த நீதிபதிகள், 'அப்படத்தை தமிழில் ரீ-மேக் செய்ய வேண்டும் என்றால், சதீஷ்பாலுக்கு 10 லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும்...' என்று, பாபநாசம் படக்குழுவை அறிவுறுத்தியுள்ளது. அதனால், அந்த தொகையை தற்போது கோர்ட் மூலம் அவருக்கு செலுத்திய பிறகே, திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் என்ற ஊரில் நடைபெறும், பாபநாசம் படப்பிடிப்பில் கமலும், கவுதமியும் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
* பாணா காத்தாடி பட நடிகை, பிகினி உடையணிந்து நடித்த படத்தின் இயக்குனர், சமீபத்தில் அம்மணியை சென்னைக்கு அழைத்து, ஒரு பார்ட்டி கொடுத்தார். அதில் கலந்து கொண்ட நடிகை, தன் தொடை கவர்ச்சியை காட்டியபடியே வந்து அனைவரையும் பரவசப்படுத்தினார். அதோடு, மேற்படி இயக்குனரின் வற்புறுத்தல் காரணமாக, மப்பு குளத்திலும் இறங்கிய நடிகை, தொடை தட்டியபடி அப்படத்தில் தான் ஆடியது போன்று, கலக்கல் ஆட்டமும் போட்டு, வந்திருந்தவர்களை சூடேற்றி விட்டார்.
* பீட்சா நடிகரை மலைப்பாம்பாக சுற்றிக் கொண்டுள்ள அந்த, ரம்மி நடிகைக்கு, இப்போதும் நடிகர் சிபாரிசு செய்து கொண்டிருக்கிறார். அதேசமயம், அவர்களது நெருக்கம் ஊரறிந்த ரகசியமாகி விட்டதால், சமீபகாலமாக சினிமா விழாக்களில் நடிகையை எதிர்பாராதவிதமாக சந்தித்தாலும், முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விடுகிறார் நடிகர். தங்களுக்கிடையிலான உறவுப்பாலம் உடைந்து விட்டதாக, ஊரை நம்ப வைக்க வேண்டும் என்பதற்காகவே, இந்த கபட நாடகத்தை அவர்கள் அரங்கேற்றி வருகின்றனர்.
சினி துளிகள்!
* இந்தி சினிமாவில் இருந்து சமந்தாவுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்து கொண்டேயிருக்கிறது. ஆனால், தமிழ் மற்றும் தெலுங்கில் பிசியாக இருப்பதை காட்டி, அந்த படங்களை தட்டிக்கழித்து வருகிறார்.
* அட்டகத்தி பட நடிகை ஐஸ்வர்யாவுக்கு ஒரு படத்திலேனும் விலைமாதுவாக நடிக்க வேண்டும் என்பது லட்சியமாக உள்ளது.
* நாய்கள் ஜாக்கிரதை படத்தில் நடித்து வரும் சிபிராஜ், அப்படத்தில் தன்னுடன் நடிக்கும் நாயிடம் 13 முறை கடி வாங்கி, ஊசி போட்டிருக்கிறார்.
