தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : செப் 14, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 14, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்புள்ள சகோதரி,

என் வயது, 65; மனைவியின் வயது, 55. திருமணம் நடந்து, 30 ஆண்டு ஆகிறது. எனக்கு ஒரு மகள், ஒரு மகன் இருக்கின்றனர். மகளுக்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கின்றனர்; மகனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. வரதட்சணை வாங்காமல், பெரியவர்களின் தலைமையில் என் திருமணம் நடந்தது.

என் மனைவி சிகப்பாக இருப்பாள்; அந்த நிறத்தால் தான் என் வாழ்க்கை கெட்டு, கடந்த, 15 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கிறோம். காரணம், அவள் பல ஆண்களிடம் செக்ஸ் விஷயத்தில் தவறாக நடந்து கொண்டிருக்கிறாள். நான் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை. இதையெல்லாம் சகித்துக் கொண்டு தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நான், சாதாரண தொழிலாளி.

அவள் மகள் கூட இருக்கிறாள். இப்போது, என் மகள் ஊரில் இல்லாத போது மருமகனும், மனைவியும் படுக்கை அறையில் உல்லாசமாக இருக்கின்றனர். இதை, மகள் வீட்டின் அருகில் குடியிருப்பவர்கள் கூறினர். நானும் ஒரு நாள், என் மகள், குழந்தைகளை அழைத்துக் கொண்டு இரவு, 12:00 மணிக்கு வீட்டிற்கு சென்றேன். பக்கத்திலிருப்பவர்கள் சொன்னது உண்மைதான்; எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. உடனே எனக்கு தெரிந்த வீட்டிற்கு சென்று அருவாளை வாங்கி, இவர்களை கொலை செய்து விடலாம் என்று வந்தேன்; வரும் வழியில் யோசித்து பார்த்தேன். என் மகள் மற்றும் குழந்தைகளை நினைத்து, நான் என் இடத்திற்கு திரும்ப வந்து விட்டேன்.

என் மனைவியும், மருமகனும் இப்படி தவறாக நடப்பதைப் பார்த்து நான் நிம்மதியில்லாமல், பைத்தியம் பிடித்தவன் போல் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். இதற்கு நீங்கள் தான் பதில் கூற வேண்டும்.

அன்புள்ள பெரியவருக்கு,

உங்கள் கடிதம் மனநலம் பிழந்த ஒருவரின் கடிதம்போல் இருக்கிறது. உங்களுக்கு நீண்ட நாள் குடிப்பழக்கம், கஞ்சா போன்ற லாகிரி வஸ்துகள் உபயோகிக்கும் பழக்கம் இருக்குமோ என சந்தேகப்படுகிறேன். கருத்து வேற்றுமையால் பிரிந்த மனைவியை, குணக்கொலை செய்ய முயற்சிக்கிறீர்களோ என அச்சப்படுகிறேன்.

திருமணம் நடந்த முதல் நாளில் இருந்தே மனைவியை, கொடுமைப்படுத்த ஆரம்பித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். ஏச்சு பேச்சு, அடி, உதைகளை தாங்கி, 15 ஆண்டுகள் குடும்பம் நடத்தியிருக்கிறாள். மனைவியின் அழகும், சிவந்த நிறமும் உங்களை பொறாமைக்கு உள்ளாக்கியிருக்கின்றன. அதனால், அவள் மீது வீண் சந்தேகம் கொண்டு, சித்ரவதை செய்திருக்கிறீர்கள். தவறு உங்கள் மீதா, உங்கள் மனைவி மீதா அல்லது இருவரின் மீதுமா என்பதை, உங்கள் குழந்தைகளிடம் தனித்தனியாக விசாரித்தால், அப்பட்டமாக தெரிந்துவிடும். உண்மைகள் என்றாவது ஒருநாள் வெளிப்பட்டே தீரும்.

உங்களுக்கு மனைவி மீது எவ்வளவு கோபம் இருக்கிறதோ அதே அளவுக்கு, மகள் மீதும் கோபம் இருக்கிறது. அவளது திருமண வாழ்வு சீர்குலைய வேண்டும் என்று உங்கள் மனம் அனிச்சையாக விரும்புகிறது.

மனைவி - மருமகன் கள்ளத்தொடர்பு வைத்திருக்கின்றனர் என்பதனை நிரூபிக்க, செயற்கையான ஆதாரங்களை காட்டுகிறீர்கள். 'மகள் வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள் மற்றும் உறவினர்கள் சொன்னார்கள்...' என்று, நள்ளிரவில் மகள் வீட்டுக்கு சென்றிருக்கிறீர்கள். அப்போதும் நீங்கள் சொல்லும் அவதூறை கண்ணால் பார்க்கவில்லை. மனைவி, மருமகனை கொல்ல புறப்பட்டதாக கூறியிருக்கிறீர்கள். நீங்கள் ஒரு கோழை; உடலாலும், மனதாலும் பலவீனமானவர். உங்களால், இரு கொலைகள் செய்ய முடியாது; ஏன், இரு கட்டெறும்புகளைக் கூட நசுக்க முடியாது.

உங்களை விட்டு பிரிந்த பின், உங்கள் மனைவி ஒரு ஆண் துணை தேடிக்கொண்டாள் என சொன்னீர்கள் என்றால் யதார்த்தம். ஆனால், 55வயது வயோதிகப் பெண்மணி தன் மகன் போன்ற மருமகனுடன், தவறான உறவு வைத்துள்ளாள் என்பது எளிதில் நம்பமுடியாத விஷயம்.

ஒரு பெண்ணின், 45 வயதிற்குள் அவளது எல்லா தேடல்களும் மடிந்து விடுகின்றன. 55 வயதுடைய ஒரு பெண் குளிர்சாதனப்பெட்டியில் ஒரு மாதத்துக்கு மேல் வைக்கப்பட்ட கத்தரிக்காய் போல வற்றி, சுருங்கி கறுத்துப்போய் விடுகிறாள். இதில், அவளுக்கு செக்ஸ் ஆசை எப்படி வரும்... கள்ளத்தொடர்பை எங்கே போய் வைத்துக் கொள்வாள்? அம்மாவையும், கணவனையும் நெருங்க பழகவிட்டு மகள்காரி எப்படி தூரதேசம் போவாள்?

மனைவி வேண்டாம், மகன், மகள் வேண்டாம் என பிரிந்தவர் நீங்கள், உங்களுக்கு பிடிக்காதோர் இடம் போனால் என்ன... வலம் போனால் என்ன! அவர்களைப் பற்றி நீங்கள் ஏன் கவலைப்பட வேண்டும்?

ஒற்றை பனைமரமாய் நிற்கும் நீங்கள், உங்களின் மீதி வாழ்நாளை ஆக்கப்பூர்வமாய் கழிக்க பாருங்கள். நீங்கள், உங்கள் வழியில் போங்கள்; அவர்கள், அவர்கள் வழியில் போகட்டும்.

என்னுடைய யூகங்கள் எல்லாம் தவறு; உங்கள் குற்றச்சாட்டுகள் லட்சம் சதவீதம் உண்மை என சாதித்தீர்கள் என்றால், தவறு செய்தவர்களை இறைவன் தண்டிப்பான் என, பொறுத்து போங்கள்.

— என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us