PUBLISHED ON : செப் 21, 2014

சிவகார்த்திகேயன் படம் கை மாறுகிறது!
லிங்குசாமி இயக்கிய, அஞ்சான் படம் தோல்வியடைந்து அவருக்கு பலத்த நஷ்டத்தை கொடுத்து விட்டது. இதற்கிடையே கமல் நடித்துள்ள, உத்தம வில்லன், விஜயசேதுபதியின், இடம் பொருள் ஏவல் மற்றும் பாலாஜி சக்திவேல் இயக்கும் ரா ரா ராஜசேகர் ஆகிய படங்களையும் தயாரித்து வரும் அவர், காக்கி சட்டை படத்தையடுத்து, சிவகார்த்திகேயன் நடிப்பில், ரஜினி முருகன் படத்தை தயாரிக்கவிருந்தார். ஆனால், பைனான்ஸ் பிரச்னை காரணமாக இப்போது அந்த படத்தை தயாரிக்கவில்லை. அதனால், சிவகார்த்திகேயன் நடிக்கும் அப்படத்தை வேறு நிறுவனத்தின் கையில் ஒப்படைக்கும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
— சினிமா பொன்னையா.
த்ரிஷா கனவு நனவாகிறது!
ரஜினியுடன் ஒரு படத்திலேனும் நடிக்க வேண்டும் என்ற த்ரிஷாவின் நீண்டகால கனவு நிறைவேறாமலேயே இருந்தது. அவருக்கு பின் வந்த நயன்தாரா, ஸ்ரேயா, அனுஷ்கா போன்ற நடிகைகள் பலரும், ரஜினியுடன் நடித்து விட்டனர். இந்நிலையில், தற்போது, லிங்கா படத்தில் ரஜினியுடன் நடிக்க த்ரிஷாவிற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஏற்கனவே, அப்படத்தில் நாயகியாக அனுஷ்கா மற்றும் சோனாக் ஷி சின்ஹா ஆகியோர் நடிக்கும் நிலையில், த்ரிஷாவும் ஒரு குத்துப்பாட்டுக்கு ரஜினியுடன் நடனமாடுகிறார். பட்ட பாட்டுக்கு பலன் கைமேலே!
- எலீசா
நிர்வாணமாக நடிக்க விரும்பும் சன்னி லியோன்!
ஜிசம் 2, ராகினி மற்றும் ஜாக்பாட் உள்ளிட்ட பல இந்தி படங்களில் ஆபாசமாக நடித்து, பெரும் சர்ச்சையை உருவாக்கியவர் சன்னி லியோன். குறிப்பாக, ஜாக்பாட் படத்தில் சச்சின் ஜோஷியுடன் இணைந்து அவர் நடித்த நிர்வாண காட்சிகளை, சென்சார் போர்டு கத்தரித்து விட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த சன்னி லியோன், 'பிகினி உடைகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும்...' என்று கொடி பிடித்தார். அதோடு, சச்சின் ஜோஷியுடன் தான் நடித்த நிர்வாண காட்சி கத்தரிக்கப்பட்டதால், மீண்டும் அவருடன் இணைந்து, இன்னொரு படத்தில் அதேபோன்ற காட்சியில் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார். நாய் வாலை நிமிர்த்த முடியுமா?
— எலீசா
உதயநிதியை அதிர வைத்த அனிருத்!
தனுஷ் நடித்த, 3 படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், அந்த படத்தில், 'ஒய் திஸ் கொலை வெறி...' என்ற ஒரே பாடல் மூலம், இந்தியா முழுக்க பேசப்பட்டவர், அதைத் தொடர்ந்து, எதிர்நீச்சல் மற்றும் மான்கராத்தே என அடுத்தடுத்த ஹிட்களை கொடுத்தவர், இப்போது விஜய்யின், கத்தி படத்திற்கு இசையமைத்து, முன்னணி இசையமைப்பாளர் ஆகி விட்டார். இந்நிலையில், நண்பேன்டா படத்திற்கு பின், மீண்டும் ஹன்சிகாவுடன் தான் ஜோடி சேரும் படத்திற்கு இசையமைக்க அனிருத்தை அணுகினார் உதயநிதி. ஆனால், எடுத்த எடுப்பிலேயே, 'இரண்டு கோடி சம்பளம் வேண்டும்...' என்று கூறி, அவரை அதிர வைத்தார் அனிருத். அதையடுத்து, ஒருவழியாக மூன்று சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட பின், இப்போது ஒன்றரை கோடிக்கு ஓ.கே., சொல்லியிருக்கிறார்.
— சினிமா பொன்னையா.
கறுப்புப் பூனை!
தலயுடன் தன்னை, 'டூயட்' பாட வைத்த இரண்டெழுத்து இயக்குனரை கெட்டியாக பிடித்துக் கொண்டுள்ளார், பையா பட நடிகை. அதோடு, அவருடன் சில நாட்கள் டேரா போட்ட பிறகே மும்பை செல்கிறார். இந்த சமாசாரம் இயக்குனரின் வீட்டு அம்மணிக்கு தெரியவர, தினம் தினம் அவர் வீட்டில் போர் முரசு ஒலிக்கிறது.
இளவட்ட கதாநாயகர்களை வளைத்துப் போட்டு, அவர்களுக்கு தன் ஓட்டல் அறையில், வாரந்தோறும் விருந்து கொடுத்து வருகிறார் அந்த, எதிர்நீச்சல் நடிகை. அதோடு, சரக்கு அடிப்பதில் படு கில்லாடியான நடிகை, தன்னுடன், கம்பெனிக்கு வரும் நடிகர்களை விட, பல, பெக்குகளை உள்ளே தள்ளி, ஒரு கட்டத்தில் அவர்களுடன் மல்லுக்கு நிற்கிறார். இதனால், பார்ட்டியை பாதியிலேயே விட்டுவிட்டு ஓட்டம் பிடிக்கின்றனர் இளவட்ட நடிகர்கள்.
துளிகள்!
* அக் ஷய்குமாருடன் நடித்த, எண்டர்டெய்ன்மென்ட் இந்தி படம் நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து, இந்தியில் முதல் வெற்றியை சந்தித்திருக்கிறார் தமன்னா.
* தன் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாக, மூன்று படங்கள் தயார் நிலையில் இருப்பதால், செம சந்தோஷத்தில் இருக்கிறார் ப்ரியா ஆனந்த்.
* பார்த்திபனின், கதை திரைக்கதை வசனம் இயக்கம் படத்தில் நாயகியாக நடித்துள்ள அகிலா கிஷோர், கன்னடத்தில் இதுவரை நான்கு படங்களில் நடித்திருக்கிறார்.
