தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : செப் 21, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 21, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எதிரொலி விசுவநாதன் எழுதிய, 'பாரதியின் தம்பி' என்ற நூல், பாரதியாருடன் பழகிய, பரலி சு.நெல்லையப்பரின் வாழ்க்கை வரலாற்றை சொல்கிறது. அதில் ஒரு பகுதி:

புதுவையில் பாரதியாருடன் நெல்லையப்பர் நெருங்கிப் பழகிய காலத்தில், பாரதியாரே தம் பாடல்களை அற்புதமான முறையில், நெல்லையப்பருக்கு படித்துக் காட்டுவார்.

முதல் உலகப் போர் நடந்து கொண்டிருந்த காலத்தில், பல காரணங்களால் தமிழகத்தில் சுதேசக் கிளர்ச்சி அடங்கிப் போயிருந்தது. 'வந்தே மாதரம்' என்று சொல்வோரே இல்லாமல் போயினர். அதிகாரிகளின் அடக்கு முறையால், நாட்டில் அச்சமே உச்சமாயிருந்தது. அப்போது ஆதிக்கத்தில் இருந்த ஜஸ்டிஸ் கட்சியினர் அன்னியர்களை ஆதரிக்கலாயினர். ஐரோப்பிய யுத்தமும், அன்னியர்களின் அடக்குமுறையும் சேர்ந்து நாட்டு மக்களிடம் சுய ராஜ்ய சிந்தனையை அற்றுப் போகும்படி செய்திருந்தன.

பாரதியாரின் பாடல்களை பாடுவோரும் இல்லை; அவருடைய புத்தகமும் கிடைக்கவில்லை. 1908ல் வெளியிட்ட, 'சுதேச கீதங்கள்' மறுபதிப்பும் வெளியாகவில்லை. பாரதியார் புதுவையில் இருந்ததால், அதுபற்றி சிந்திப்போரே இல்லாமல் போயினர். பாரதியின், 'கண்ணன் பாட்டு'க்கு பிரிட்டிஷ் அரசு எதிர்ப்பு தெரிவிக்க காரணம் இல்லை என்றறிந்த நெல்லையப்பர், அப்பாட்டை முதலில் வெளியிடுவது என, தீர்மானித்தார். பயங்கரவாதியாக பாரதியார் சித்தரிக்கப் பட்டிருந்ததால் அவரின் புத்தகத்தை நெல்லையப்பருக்கு அச்சிட்டுக் கொடுக்க, எந்த அச்சுக்கூடமும் முன்வரவில்லை.

கடைசியாக சென்னை அரண்மனைக்காரத் தெருவில் பழைய, 'சுதேச மித்திரன்' பத்திரிகை அலுவலக கட்டடத்தில் இருந்த, இந்தியா அச்சுக்கூடத்தில் சீனிவாசாச்சாரியார் என்ற நெல்லையப்பரின் நண்பர், பாரதி நூல்களை அச்சிட்டு கொடுக்க முன்வந்தார்.

கடந்த, 1917ல் கண்ணன் பாட்டின் இரண்டாயிரம் பிரதிகள் அச்சாயின. நூல்களின் ஒரு பகுதியை நெல்லையப்பர் புதுச்சேரியில் இருந்த பாரதியாருக்கு அனுப்பி வைத்தார். தன்னுடைய முழுநூல் ஒன்று புத்தக வடிவம் பெற்று, முதன் முதலில் வெளிவந்தது குறித்து பாரதியார் பரமானந்தம் அடைந்தார். ஏதோ செயற்கரிய செயலைச் செய்த தீரராக நெல்லையப்பரை அவர் போற்றினார்.

புதுச்சேரி வனவாசம் நீங்கி, பாரதியார் கடையத்துக்கு சென்றபின், 1919ல் நெல்லையப்பரை கடையத்துக்கு வரும்படி எழுதினார். கடையத்துக்கு சென்ற நெல்லையப்பர், பாரதியார் எட்டையபுரம் போயிருப்பதாக அறிந்தார். உடனே, எட்டையபுரம் புறப்பட்டு சென்று, பாரதியாரை சந்தித்தார்.

அங்கே நடந்த ஒரு நிகழ்ச்சியை பற்றி நெல்லையப்பர் கூறியது, 'எட்டையபுரத்திலிருந்து சில மைல் தொலைவிலுள்ள கோவில்பட்டி புகைவண்டி நிலையத்துக்கு நானும், விசுவநாத பாரதி என்ற இளைஞரும், பாரதியாருடன் நடந்து சென்றோம். கோவில்பட்டி புகைவண்டி நிலையத்துக்கு அருகே, மாலைப் பொழுதில் கடைத் தெருவில் பூமாலைகள் விற்பர். பாரதியார் மூன்று பூமாலைகள் வாங்கி, தம் கழுத்தில் தாமே ஒன்றை போட்டுக் கொண்டு, என் கழுத்திலும், விசுவநாத பாரதி கழுத்திலும் ஒவ்வொரு மாலையை போட்டார். நாங்கள் உவகையுடன் மாலை தாங்கிய மார்பினராய் புகைவண்டி நிலையத்தில் ஏறு போன்று வீறு நடையுடன் உலாவிக் கொண்டிருந்தோம்; எங்களைப் பார்த்தவர்கள், 'மூன்றும் அரைப் பைத்தியங்கள்...' என்று பேசிக் கொண்டனர்.

ஒருமுறை இங்கிலாந்து பார்லிமென்டில் வில்லியம் ஜான்சன் எனும் உறுப்பினர் எதைப் பற்றியோ ஆணித்தரமாக பேசிக் கொண்டிருந்த போது, சர்ச்சில் அதை மறுக்கும் பாவனையில் தலையை ஆட்டிக் கொண்டிருந்தார். அதை கண்ட வில்லியம், 'நீங்கள் ஏன் மறுத்து தலையை ஆட்டுகிறீர்கள்; நான், என் சொந்த கருத்தை தானே சொல்லிக் கொண்டிருக்கிறேன்...' என்றார்.

அதற்கு சர்ச்சில், 'நான், என் சொந்த தலையை தானே ஆட்டிக் கொண்டிருக்கிறேன்...' என்றார்.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us