PUBLISHED ON : அக் 26, 2014

விஷாலின் சபதத்திற்கு கை கொடுத்த நடிகர்கள்!
'நடிகர் சங்க கட்டடத்தை கட்டியே தீருவோம்...' என்று தொடர்ந்து குரல் கொடுத்து வரும் விஷால், அடுத்த ஆண்டில், ஒரு படத்தில் சில நடிகர்களுடன் இணைந்து நடித்து, அப்படம் விற்பனையாகும் பணத்தில், நடிகர் சங்க கட்டடத்தை கட்டுவதற்கு, பணம் தருவதாக கூறியிருக்கிறார். அதையடுத்து, ஆர்யா, ஜீவா, ஜெயம்ரவி மற்றும் கார்த்தி ஆகியோரும் அவருக்கு கை கொடுப்பதாக கூறியிருக்கும் நிலையில், தற்போது, விஜயசேதுபதி, சிவகார்த்திகேயன், ஹன்சிகா போன்றோரும் அப்படத்திற்கு பணமே வாங்காமல் நடித்து தருவதற்கு முன் வந்துள்ளனர். ஆக, விஷால் நடிகர் சங்க கட்டடத்தை கட்டியே தீருவது என்று போட்டிருந்த சபதத்திற்கு, பல நடிகர், நடிகைகள் கை கொடுத்து, அவருக்கு நம்பிக்கை ஊட்டி வருகின்றனர்.
— சினிமா பொன்னையா
சமந்தாவுக்கு அக்காவான சினேகா!
சினேகா கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் வெளியான செய்தியை மறுத்துள்ளவர், 'சினிமாவில் தொடர்ந்து நடிக்கவே ஆசைப்படுகிறேன்...' என்று கூறியுள்ளார். மேலும், தற்போது தமிழில் படமே இல்லாத அவர், தெலுங்கில் அல்லுஅர்ஜுன் மற்றும் சமந்தா நடிக்கும் ஒரு படத்தில் சமந்தாவுக்கு அக்கா வேடத்தில் நடிக்கிறார். இதற்கு முன் பிரகாஷ்ராஜ் நடித்த, உலவச்சாறு பிரியாணி என்ற தெலுங்கு படத்தில் கதாநாயகியாக நடித்த சினேகா, 'இனி, இதுபோன்ற அக்கா, அண்ணி வேடங்கள் கிடைத்தாலும் நடிக்கத் தயார்...' என்று அறிக்கை விட்டிருக்கிறார். அதேசமயம், 'நான் நடிப்பதற்கு, 'நச்'சென்று ஒரு நாலு சீனாவது இருக்க வேண்டும்...' என்று கோடிட்டு காண்பித்துள்ளார். அதை விட்டாலும் கதி இல்லை; அப்புறம் போனாலும் விதி இல்லை.
— எலீசா
ரியாலிட்டி ஷோவில் ஆண்ட்ரியா!
இந்தியில் அமீர்கான் நடத்தி வரும் ரியாலிட்டி ஷோவை போன்று, இப்போது மலையாள சேனல் ஒன்றும் ரியாலிட்டி ஷோ நடத்தி வருகிறது. இதில் பங்கேற்க சில முன்னணி நடிகைகளை அழைத்தவர்கள், இப்போது, ஆண்ட்ரியாவையும் அழைத்திருக்கின்றனர். மலையாளத்தில் ஆண்ட்ரியா நடித்த சில படங்கள் வெற்றியடைந்து அவரை பிரபலப்படுத்தியதால், இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், இதுவரை சினிமா சினிமா என்று நேரத்தை கழித்து வந்த ஆண்ட்ரியா, இந்த ரியாலிட்டி ஷோ மூலம், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சில நல்ல தகவல்களையும் கொடுப்பதாக கூறுகிறார். இட்டபடியே ஒழியே ஆசைப்பட்டு பலன் இல்லை!
— எலீசா
இமான் இசையில் பாலிவுட் இசையமைப்பாளர்!
மைனா படத்திற்கு பின், கோலிவுட்டில் பேசப்படும் இசையமைப்பாளராகி விட்டார் இமான். அதோடு தான் இசையமைக்கும் படங்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளை பின்னணி பாட வைத்து வருகிறார். ஜில்லாவில் விஜய்யை பாட வைத்தவர், என்னமோ ஏதோ படத்தில் ஸ்ருதிஹாசனையும், பாண்டியநாடு படத்தில் ரம்யா நம்பீசனையும், வருத்தப்படாத வாலிபர் சங்கத்தில் சிவகார்த்திகேயனையும் பாட வைத்தார். அதையடுத்து, இப்போது ரோமியோ ஜூலியட் படத்துக்காக பாலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான, விஷால் தலானி என்பவரை, ஒரு பாடல் பாட வைத்திருக்கிறார் இமான்.
— சினிமா பொன்னையா
மீண்டும் சர்ச்சையில் சிக்கிய ராம் கோபால் வர்மா!
டுவிட்டரில் ஏதேனும் பரபரப்பு செய்திகளை வெளியிட்டு, சர்ச்சையில் சிக்கி வரும் இயக்குனர் ராம்கோபால் வர்மா, தற்போது, சாவித்ரி என்ற பெயரில், ஒரு தெலுங்கு படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில், இப்படத்தின் போஸ்டர்களை அவர் ஆந்திராவில் வெளியிட்டிருந்தார். அதில், பத்து வயது மாணவன் ஒருவன், தன் வகுப்பு ஆசிரியையின் தொப்புளை, வக்கிரமாக பார்ப்பது போன்று ஒட்டப்பட்டிருந்ததால், ஆந்திராவிலுள்ள மாதர் சங்கங்கள், அப்படத்துக்கு எதிராக கொடி பிடித்துள்ளன. அத்துடன், அப்படத்தை தடை செய்யக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். ஆனால், இதற்கெல்லாம் அஞ்சாத ராம்கோபால் வர்மா, 'என் சிறு வயதில், என் ஆசிரியை மீது ஆசை கொண்டேன்; அதைத்தான் இப்போது படமாக்கியிருக்கிறேன். அதனால், என் கருத்து சுதந்திரத்தை யாராலும் தடை போட முடியாது...' என்று ஆவேசமாக பேட்டி கொடுத்திருக்கிறார்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
'கழுகு' நடிகைக்கு, திடுதிப்பென்று பட வாய்ப்புகள் குறைந்து விட்டதால், அதிர்ச்சியடைந்தார். அதையடுத்து, தன் ஆஸ்தான இயக்குனர்கள் சிலருடன், ரகசிய மீட்டிங் போட்ட அம்மணிக்கு, இப்போது மறுபடியும், புதிய படங்கள் கைமாறிவிட்டன. அதோடு, இதுவரை கிளாமர் விஷயத்தில், கோடு போட்டு நடித்து வந்த நடிகை, இனி, கதைக்கு ஏற்ப ரவுண்டு கட்டவும் தயாராகிவிட்டார்.
மெரினா நடிகருடன் அறிமுகமான அந்த நான்கெழுத்து ஆந்திர நடிகை, முதல் படத்தில் நடிகருடன் நடித்த போது விலகியே நின்றார். ஆனால், இப்போது நடிகரின் மார்க்கெட் எகிறி நிற்பதால், அவருடன் எந்நேரமும் கும்மாளம் போடுகிறார். நடிகருடன், ஜாலி அரட்டையில் மகள் இறங்கிவிட்டால், அவரது தாய்குலம் அவர்களுக்கு தொந்தரவு கொடுக்காத வகையில், இடத்தை காலி செய்து விடுகிறார்
துளிகள்!
* அரண்மனை படத்தில் ஹன்சிகாவின் ஆவேச நடிப்பைப் பார்த்து ஒரு இயக்குனர், அவரை மையப்படுத்தி, ஒரு ஆக் ஷன் கதையை தயார் செய்து கொண்டிருக்கிறார்.
* விஜயசேதுபதியுடன் நடித்துவரும், வசந்தகுமாரன் படம் என் மார்க்கெட்டை புரட்டிப்போடும் என்கிறார் பிந்துமாதவி.
* லட்சுமிமேனனுக்கு செல்லவிருந்த இரண்டு பட வாய்ப்புகளை கைப்பற்றி, அவருக்கு பலத்த அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் ஸ்ரீதிவ்யா.
அவ்ளோதான்!
