PUBLISHED ON : நவ 09, 2014

ரஜினி, அஜித்துடன் மோதும் விஷால்!
முன்பெல்லாம் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் வந்தால், விஷால் நடிக்கும் படங்களை வெளியிட தயங்குவர். ஆனால், இப்போது அவர் முன்னணி இயக்குனர்களின் படங்களில் நடிப்பதால், அவரும் முன்னணி கதாநாயகர்களின் படங்கள் வெளியாகும் போது, தன் படங்களை இறக்கி வருகிறார். அந்த வகையில் தீபாவளிக்கு, விஜயின், கத்தி படத்துடன் தன், பூஜை படத்தை இறக்கி விட்ட விஷால், வருகிற பொங்கலுக்கு, சுந்தர்.சி இயக்கத்தில் தான் நடித்து வரும், ஆம்பள படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார். அதேநாளில் ரஜினியின், லிங்கா மற்றும் அஜித்தின், 55வது படமான என்னை அறிந்தால் படமும் திரைக்கு வருவது உறுதி செய்யப்பட்டு விட்ட போதும், பின்வாங்காமல் தில்லாக களமிறங்க தயாராகிக் கொண்டிருக்கிறார் விஷால்.
— சினிமா பொன்னையா
கமலை இயக்க ஆசைப்படும் ஹரி!
பூஜை படத்தை இயக்கியுள்ள ஹரி, இதுவரை, 13 படங்களை இயக்கி விட்டார். ஆனால், ரஜினி, கமல், அஜித் மற்றும் விஜயை வைத்து படம் இயக்கவில்லை. அதனால், அடுத்தபடியாக அவர்களை வைத்து படம் இயக்கும் ஆசையில் இருப்பவருக்கு, கமலின் மீது கவனம் திரும்பியிருக்கிறது. அதனால், அவருக்கு பொருத்தமான கதையை தயார் செய்து கொண்டிருப்பதாக கூறியிருக்கிறார், 'கமல் சாரை நெருங்குவது அத்தனை எளிதான விஷயமல்ல; அவர் மாதிரி ஜீனியசை அணுகுவதற்கு முன்பாக, என்னை, நான் முழுதாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நான் தயார் செய்யும் கதை, அவர் நடிப்பதற்கு தகுதியானதாக இருந்தால் மட்டுமே, அவரை அணுகுவேன்; இல்லையேல், தயாராகும் வரை காத்திருப்பேன்...' என்று தெரிவித்துள்ளார்.
— சி.பொ.,
கேத்ரின் தெரசா அதிரடி!
மெட்ராஸ் படத்தில் நடித்த கேத்ரின் தெரசா, மலையாள படங்களில் நடித்தது வரை, அடக்கி வாசித்து வந்தவர், தற்போது கோலிவுட்டுக்கு வந்த பின், கட்டவிழ்ந்து நிற்கிறார். காரணம், அவரிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்கள் அனைவருமே, அவரை, கிளாமராக நடித்து, கமர்ஷியல் நடிகையாகும்படி கேட்டுக்கொண்டுள்ளனர். அதனால், 'மலையாள நடிகை நயன்தாரா பாணிக்கு நானும் மாறப் போகிறேன்...' என்று கூறியுள்ள கேத்ரின், 'முன்னணி நடிகர்களின் படங்களாக இருந்தால், தமன்னா ரேஞ்சுக்கு கவர்ச்சி ஆயுதத்தை கையிலெடுக்கவும் தயார்...' என்று செய்தி வெளியிட்டுள்ளார். இதனால், கோடம்பாக்கத்தில் மையம் கொண்டிருக்கும் ஹோம்லி நடிகைகள், பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
- எலீசா
சிவகார்த்திகேயனை டென்ஷன் செய்த அனிருத்!
சிவகார்த்திகேயன் நடித்த, எதிர் நீச்சல் மற்றும் மான் கராத்தே ஆகிய படங்களில், 'ஹிட்' பாடல்களை கொடுத்து, பேசப்படும் இசையமைப்பாளரானவர் அனிருத். அதன்பின், விஜயின், கத்தி படத்துக்கு இசையமைத்து, முன்னணி இசையமைப்பாளரானார். ஆனால், கத்தி படம் கிடைப்பதற்கு முன், சிவகார்த்திகேயன் நடித்து வந்த இன்னொரு படமான, காக்கி சட்டை படத்துக்கு இசையமைத்து வந்த அனிருத், அந்த வேலைகளை அப்படியே கிடப்பில் போட்டு விட்டார். இதனால், சிவகார்த்திகேயனின், காக்கி சட்டை படப்பிடிப்பை நிறுத்தி வைத்து விட்டனர். தன் படத்துக்கான பாடல் காட்சிகளை முடித்து தருமாறு சிவகார்த்திகேயன் பலமுறை சொன்னபோதும், அதை காது கொடுத்து கேட்கவில்லை அனிருத். இதனால், இதுவரை நகமும், சதையுமாக இருந்த அவர்களது நட்பில், தற்போது விரிசல் விழுந்திருக்கிறது.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
களவாணி நடிகை, நாட்டாமையுடன் நடித்து வரும் படத்தில், குளியல் காட்சிகளில் புகுந்து விளையாடியிருக்கிறார். அதோடு, இதுவரை தன்னை நிராகரித்து வந்த சில இளவட்ட கதாநாயகர்களுக்கு, அந்த புகைப்படங்களை அனுப்பிய நடிகை, தன் கவர்ச்சி பற்றி அவர்களிடம் கருத்து கேட்டார். அதில் ஒரு நடிகர், 'இதுவரை உன் கவர்ச்சிக்கு, 40 மதிப்பெண்கள் தான் கொடுத்தேன்; ஆனால், இப்போது டபுளாகி விட்டது...' என்று சொல்லி, 80 மதிப்பெண் அளித்துள்ளார். இதனால், 'நாம் இளசுகளை கவரும் நடிகையாகி விட்டோம்...' என்ற குதூகலத்தில் இருக்கிறார் களவாணி நடிகை.
கும்கி நடிகருடன் நடித்த அந்த புதுவரவு குஜராத் நடிகைக்கு, எதிர்பார்த்தபடி புதிய படங்கள் இல்லை. அதனால், தமிழ்ப்படங்களில் நடித்து வந்தபோது தன்னைச்சுற்றி ஒரு வேலி போட்டு, பந்தா காட்டி வந்த நடிகை, இப்போது வேலியை விலக்கி, கண்ணில் தென்படும் தயாரிப்பாளர்களையெல்லாம் ஓடிச்சென்று கட்டித் தழுவிக் கொள்கிறார். அப்போது, 'என்னை ஆதரித்தால் அன்பை வாரி வழங்குவேன்...' என்றும், அவர்களின் காது கடித்து, 'கிளுகிளு'ப்பேற்றி வருகிறார்.
துளிகள்!
* இந்தியில் ஒரு படத்தில் நடிக்கும் ஓவியா, அந்த படம் வெற்றி பெற்றால், அதையடுத்து பாலிவுட் படங்களில் நடிக்கவே முதலிடம் கொடுக்கப் போவதாக கூறுகிறார்.
* தமிழில், சிகரம்தொடு மற்றும் வானவராயன் வல்லவராயன் படங்களில் நடித்த மோனல் கஜ்ஜார், தற்போது, தெலுங்கில் ரவிதேஜாவுடன் ஒரு படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
* குணசித்ர நடிகரான டில்லிகணேஷ், தன் மகன் மகாதேவனை கதாநாயகனாக அறிமுகம் செய்ய, சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார்.
* ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள, பென்சில் படத்தின் சில காட்சிகளை பார்த்து, அவரது நடிப்பை பாராட்டியுள்ளார் விஜய்.
அவ்ளோதான்!
