தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/திண்ணை!

திண்ணை!

திண்ணை!


PUBLISHED ON : நவ 09, 2014

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : நவ 09, 2014


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அம்பலவாணனின், 'பல்சுவை விருந்து' நூலிலிருந்து: மங்கையர்கரசி என்ற படம் பி.யூ.சின்னப்பா - கண்ணாம்பா நடித்து வெளிவந்தது. இதில், கண்ணாம்பா பேச வேண்டிய ஒரு வசனம், 'நெருப்புச் சூரியனுக்கு தெரியும், நிரபராதி நானென்று...' என்பது!

சூரியனே நெருப்புக் கோளம் தானே? பிறகு எதற்கு அதை, 'நெருப்புச் சூரியன்' என்று கூற வேண்டும் என்ற சந்தேகம் கண்ணாம்பாவுக்கு ஏற்பட்டது. இதைத் தீர்த்து வைக்கும் பொறுப்பு, படத்தின் வசனகர்த்தாவிடம் விடப்பட்டது.

அந்த வசனகர்த்தா, 'நிலா வெள்ளையாகத் தானே இருக்கிறது? பின், ஏன் அதை வெண்ணிலா என்று சொல்கிறோம்...' என்று மடக்கினார். இந்த பதில், கண்ணாம்பாவை திருப்திபடுத்தி விட்டது.

அந்த வசனகர்த்தா - மறைந்த கவிஞர் சுரதா!

மு.கோவிந்தராசன் எழுதிய, 'கவியரசு கண்ணதாசன்' நூலிலிருந்து: தமிழ் சங்க விழாவில் கலந்து கொள்ள அமெரிக்கா சென்றிருந்த கண்ணதாசன், அக்., 17, 1981 அன்று, இந்திய நேரப்படி இரவு, 10:45 மணிக்கு, (அமெரிக்காவில் பகல், 12:00 மணி) அமெரிக்க மருத்துவமனையில் காலமானார். அப்போது, அவருக்கு வயது 54.

கண்ணதாசனின் உடலை சென்னைக்கு கொண்டுவர, அன்றைய முதல்வரான எம்.ஜி.ஆர்., ஏற்பாடு செய்திருந்தார். தமிழகத்தின் அரசவைக் கவிஞராக கண்ணதாசன் இருந்ததால், அவரது சிகிச்சை செலவு முழுவதையும், தமிழக அரசே ஏற்கும் என்றும் அறிவித்திருந்தார்

எம்.ஜி.ஆர்.,

கண்ணதாசனின் இரண்டாவது மனைவி பார்வதி, மூன்றாவது மனைவி வள்ளியம்மை, மகன் கலைவாணன் ஆகியோர் அமெரிக்கா சென்று கவனித்து வந்தனர். இதனால், கண்ணதாசன் உயிர் பிரியும்போது, அவர்கள் கண்ணதாசன் அருகிலேயே இருந்தனர்.

சென்னை தியாகராய நகரில், கண்ணதாசனின் வீட்டில் அவருடைய உருவப்படம் அலங்கரிக்கப்பட்டு குத்துவிளக்கு ஏற்றி வைக்கப்பட்டிருந்தது. முதல் மனைவி பொன்னம்மாளும், மற்ற உறவினர்களும், படத்தின் அருகில் அமர்ந்து கண்ணீர் விட்டு கதறி அழுதவண்ணம் இருந்தனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி, கண்ணதாசன் வீட்டிற்குச் சென்று, கண்ணதாசனின் மனைவி, மகன்களுக்கு ஆறுதல் கூறினார்.

விமானம் மூலம் கண்ணதாசன் உடல் சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, நடிகர் சங்க கட்டடத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது; உடல் மீது அவர் எழுதிய, 'இயேசு காவியம்' புத்தகம் வைக்கப்பட்டு இருந்தது!

'பொது கூட்டங்களும், சுவையான நிகழ்ச்சிகளும்' என்ற நூலிலிருந்து: பொள்ளாச்சியில் ஒரு பொதுக்கூட்டம்; பி.எம்.சுப்பிரமணியம் என்பவர், இந்திய - சோவியத் நட்புறவு பற்றி சொற்பொழிவு ஆற்றி முடித்த பின், 'தோழர் மா.வேலாயுதம் துண்டு ஏந்தி வருவார்; உங்களால் முடிந்த அளவு நிதி உதவி அளிக்க வேண்டுகிறேன்...' என்று கேட்டுக் கொண்டார்.

வசூல் செய்வதற்கான துண்டிற்காக, மேடையில் இருந்த பிரமுகர்களைப் பார்த்தார் வேலாயுதம். அவர்களில் சுப்பிரமணியத்தைத் தவிர வேறு யார் தோளிலும் துண்டு இல்லை. எனவே, சுப்பிரமணியத்திடம் சென்று, அவர் தோளில் போட்டிருந்த மேல் துண்டைக் கொடுக்கும்படி கேட்டார். பிடிவாதமாக, கொடுக்க மறுத்து விட்டார் சுப்பிரமணியம். வேறு வழியின்றி, அவரது மேல் துண்டை பற்றி இழுத்தார் வேலாயுதம். துண்டை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, வேலாயுதத்தை தள்ளி விட்டார் சுப்பிரமணியம்.

விடாக்கண்டனாக இருக்கிறாரே என்ற மனச் சங்கடத்துடன், ஒரு மஞ்சள் பையைத் தேடிப் பிடித்து, தம் வசூல் வேலையைத் துவக்கினார், வேலாயுதம். கூட்டம் முடிந்து, அனைவரும் திரும்பிக் கொண்டிருந்தபோது, வேலாயுதத்தை அருகில் அழைத்து, தாம் தோளில் போட்டிருந்த துண்டை விரித்து காட்டினார், சுப்பிரமணியம். அதிலே நிறைய இடங்களில் பொத்தல்களும், கிழிசல்களும் இருந்தன.

'இதை விரித்தால், என் மானமும் போகும்; வசூலின்போது, இதில் விழும் காசுகளும் கீழே விழுந்துவிடும். அதனால் தான், துண்டைக் கொடுக்கவில்லை...' என்றார் சுப்பிரமணியம். வேலாயுதத்தின் கண்கள் பனித்தன.

நடுத்தெரு நாராயணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us