
விக்ரமன் மீண்டும் அழைப்பு!
தமிழ்ப்படங்களுக்கான தலைப்பை பதிவு செய்வதற்கு, பிலிம் சேம்பர் மற்றும் கில்டு என்ற இரண்டு அமைப்புகள் உள்ளன. இப்படி இரண்டு இடங்கள் இருப்பதால், ஒருவர் சேம்பரில் பதிவு செய்து வைத்திருப்பது போன்ற தலைப்பை, மற்றொருவர், கில்டில் பதிவு செய்திருந்தால், படம் திரைக்கு வரும் போது பிரச்னை பூதாகரமாக வெடித்து விடுகிறது. இதை தவிர்க்கவே, 'தலைப்புகளை இயக்குனர் சங்கத்தில் பதிவு செய்யுங்கள்...' என்று, இயக்குனர்களுக்கு அழைப்பு விடுத்தார் தமிழ் இயக்குனர் சங்கத் தலைவர், விக்ரமன். ஆனால், அதற்கு தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே, அது நடைமுறைக்கு வரவில்லை. இந்நிலையில், 'விஜய்யின் கத்தி படக் கதை என்னுடையது...' என்று ஒருவர் கொடி பிடித்ததை அடுத்து, 'அனைத்து இயக்குனர்களும், ஸ்கிரிப்ட்டை இயக்குனர் சங்கத்தில் பதிவு செய்து விடுங்கள். யாரும் எந்த பிரச்னைக்கும் வர முடியாது...' என்று அழைப்பு விடுத்துள்ளார் விக்ரமன். அவரது இந்த முயற்சிக்காவது பலன் கிடைக்குமா, பார்க்கலாம்.
— சினிமா பொன்னையா.
டைரக்டரை முற்றுகையிட்ட தமன்னா, ஹன்சிகா!
விஜய்யுடன், வேலாயுதம் படத்தில் நடித்த ஹன்சிகா, அடுத்தபடியாக சிம்புதேவன் இயக்கத்திலும் விஜய்யுடன் நடிக்கிறார். ஆக விஜய்யுடன் இரண்டாவது படத்தில் நடிக்கப்போகும் ஹன்சிகாவுக்கு, அஜீத்துடன் நடிப்பதற்கு மட்டும் இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால், மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் போதே அதற்கான முயற்சி எடுத்தால்தான் சாத்தியமாகும் என்பதால், தற்போது திரைக்குப்பின்னால் தீவிரம் காட்டி வருகிறார். குறிப்பாக, அஜீத்தை வைத்து வீரம் படத்தை இயக்கிய சிவா, அடுத்து அவருக்காக ஸ்கிரிப்ட தயார் செய்து வருகிறார் என்பதை கேள்விப்பட்ட ஹன்சிகா, அடிக்கடி அவரை சந்தித்து வருகிறார். இதற்கிடையே சிவா இயக்கிய சிறுத்தை மற்றும் வீரம் என்ற இரண்டு படங்களிலுமே நடித்த தமன்னாவும் அந்த படத்திற்காக முயற்சி எடுத்து வருகிறார். அதனால், ஹன்சிகா ஒருபக்கம், தமன்னா இன்னொரு பக்கம் என, டைரக்டர் சிவாவை மொய்த்துக்கொண்டு வருகின்றனர். யாருக்கு, அதிர்ஷ்டம் அடிக்கப்போகிறது என்பது விரைவில் தெரிந்து விடும். இட்டபடியே ஒழிய ஆசைப்பட்டு பலன் இல்லை!
— எலீசா
தனுஷை புலம்பவிட்ட காக்கி சட்டை!
சிவகார்த்திகேயனை, 'என் தம்பி மாதிரி...' என்று மேடைகளில் தனுஷ் சொல்லிக் கொண்டாலும், 'தனுஷின் இடத்தை பிடிப்பது தான் என் டார்கெட்...' என்று சிவகார்த்திகேயன் வெளிப்படையாக சொன்னதிலிருந்து, அவர்களின் அண்ணன் - தம்பி உறவில், கீறல் விழுந்துள்ளது. இருப்பினும், தன் ஒண்டர்பார் நிறுவனத்துக்காக ஏற்கனவே அவரை ஒப்பந்தம் செய்திருப்பதால், அவரை வைத்து தற்போது, காக்கி சட்டை படத்தை தயாரித்து வருகிறார் தனுஷ். மேலும், இப்படத்துக்கு முதலில், டாணா என்று தான் பெயர் வைத்திருந்தனர். ஆனால், அந்த பெயரை சென்சார் அனுமதிக்காது என்ற காரணத்தினால், காக்கி சட்டையாக மாற்றினர். ஆனபோதும் இதே தலைப்பில், ஏற்கனவே, கமல் நடித்திருந்ததால், அப்படத்தை தயாரித்த நிறுவனத்தை அணுகி உரிமை கேட்ட போது, அதற்கு அவர்கள், ௫௦ லட்ச ரூபாய் விலை வைத்தனர். அதனால், வேறு வழியில்லாமல் அந்த தொகையை கொடுத்துள்ள தனுஷ், 'ஏற்கனவே போட்ட பட்ஜெட்டை விட இரண்டு மடங்கு அதிகமாகி விட்டது; செலவு செய்த காசை எப்படி எடுக்கப் போகிறேனோ...' என்று புலம்பிக் கொண்டிருக்கிறார்.
— சினிமா பொன்னையா.
கறுப்பு பூனை!
* வாசனை காமெடியன், சோலோ ஹீரோவாக நடித்த படத்தில் நடித்த மும்பை நடிகைக்கு, மீண்டும் தான் கதாநாயகனாக நடித்து வரும் படத்தில் வாய்ப்பு கொடுத்துள்ளார். அதோடு, நடிகையை எப்போதும் தன் கட்டுப்பாட்டிலேயே வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கும் நடிகர், அவர் நட்சத்திர ஓட்டலில் தங்குவதற்கான அனைத்து செலவுகளையும் தானே செய்து வருவதோடு, தானும் அங்கேயே தங்கி விடுகிறார். இதனால், நடிகரின் குடும்பத்தில் புகைச்சல் ஏற்பட்டுள்ளது.
* தளபதி நடிகரின் ரசிக கோடிகள், சில சமயங்களில் உணர்ச்சி வசப்பட்டு, 'வருங்கால முதல்வர், வருங்கால பிரதமர்' என்றெல்லாம் நடிகரை மானாவாரியாக அள்ளி விடுகின்றனர். இந்த செய்தி நடிகரின் காதுக்கு வந்ததையடுத்து, மேற்படி ரசிகர்களை அழைத்து, 'இந்த கோஷமெல்லாம் இப்போது வேண்டாம்; இப்படி செய்தால் நான் நடிக்கும் படங்களை தியேட்டருக்கு கொண்டு வர முடியாத அளவுக்கு ஆப்பு வைத்து விடுகின்றனர்...' என்று புத்திமதி சொல்லி அனுப்புகிறார்.
துளிகள்
* விஷாலிடம், 'எப்போது திருமணம்?' என்று கேட்டால், 'அதைப்பற்றி இன்னும் நான் யோசித்துக் கூட பார்க்கவில்லை; சினிமாவில் ஒரு நிலையான இடத்தை பிடித்த பின்தான் திருமணம் பற்றி முடிவெடுப்பேன்...' என்கிறார்.
* ரஜினியின், லிங்கா படத்தில் காமெடி செய்து வரும் சந்தானம், அடுத்தபடியாக, வீரம் சிவா இயக்கும் அஜித் படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
* 'நலத்திட்ட உதவிகளை வாங்க, எப்போது ஆட்கள் இல்லையோ, அப்போதுதான் இந்தியா வல்லரசாகும்...' என்று நடிகர் விஜய் தெரிவித்துள்ளார்.
அவ்ளோதான்!

