sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

ஜிலேபி!

/

ஜிலேபி!

ஜிலேபி!

ஜிலேபி!


PUBLISHED ON : நவ 23, 2014

Google News

PUBLISHED ON : நவ 23, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முற்றம், மாடம் என்று பார்த்துப் பார்த்து கட்டின, அந்தக் காலத்து காரை வீடு அது. வீட்டை ஒரு சுத்து, சுத்தி வந்தாலே மூச்சு வாங்கும். பாக்கியத்திற்கு வீட்டைப் பார்க்க பார்க்க நெஞ்சை அடைத்தது மாதிரி இருந்தது.

வாசலில், பக்கத்து வீட்டுக்காரியிடம், பாக்கியத்தின் மருமகள், ''இந்தக் கிழம் காலையிலிருந்து வீட்டையே சுத்தி சுத்தி வருதுடி; இது போய் தொலைஞ்சாத்தான் எனக்கு நிம்மதி...'' என்றாள்.

நடுக்கூடத்திலிருந்த பெரிய ஊஞ்சல், சாளரக் காற்றில் மெல்ல அசைந்தது. இதில் தான், பாக்கியத்தின் கணவர் ராமைய்யா உட்கார்ந்து, மெல்ல ஆடிக் கொண்டே பேசுவார். வீட்டில் யாரும் இல்லையென்றால், 'வாடி பாக்கியம்...' என்று, கையைப் பிடித்து வலுக்கட்டாயமாய் அழைத்து, தன் பக்கத்தில் உட்கார வைத்து, பாரதியார் கூறிய பெண்ணுரிமைப் பற்றி கதை கதையாகக் கூறுவார்.

இவளுக்கோ ஒன்றும் புரியாது; ஆனால், புரிந்தது போல் சிரிப்பாள். நினைவுகள் கொடுத்த ஏக்கத்தில், ஊஞ்சல் பலகையை மெல்ல தடவினாள் பாக்கியம். மனசு லேசானது போல் இருந்தது. தெற்குப் பக்க ஜன்னல் வழியாக பார்த்தால், வேப்ப மரம் தெரியும். அந்த வேப்ப மர கன்றை, அவர் தான் கொண்டு வந்து நட்டார். ஒரு நாள், அந்த வேப்பர மர கன்றுக்கு தண்ணீர் ஊற்ற மறந்து விட்டாள். 'இன்னிக்கு ஏன் செடிக்கு தண்ணீ ஊத்தல...' எனக் கேட்டு, கோபப்பட்டு திட்டி விட்டார் ராமைய்யா. அதுவரை அவர் அவளை திட்டியதே இல்லை. ஆனால், இன்று ஒரு மரக் கன்றுக்காக நம்மை திட்டி விட்டாரே என்று, அன்று முழுவதும் அவரிடம் பேசவில்லை பாக்கியம். அவரும் எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தார்; அசையவே இல்லை.

அன்று மாலை, அவர் அறையில், மேஜையின் மேல் சின்னப் பார்சல் இருந்தது. அதை எடுத்து பிரித்துப் பார்த்தாள் பாக்கியம். அதில், அவளுக்குப் பிடித்த ஜிலேபி இருந்து.

நல்ல பாகு எடுத்து, நெய்யில் கிளறி செய்தது; வாயில் போட்டால் கரைவது தெரியாது. நெல்லை ஜிலேபி என்றால் இந்தப் பகுதியில் ரொம்ப விசேஷம். கொஞ்சம் ஜிலேபியை விண்டு, வாயில் போட்டாள். அவள் கோபமெல்லாம் கரைந்து விட்டது. அவள் சாப்பிடுவதைப் பார்த்து, யாரோ சிரிக்கும் சத்தம் கேட்கவே, திரும்பிப் பார்த்தாள். அவளுடைய கணவர் ராமைய்யா தான், அறை நிலைப்படியில் நின்று சிரித்துக் கொண்டிருந்தார்.

'ஏண்டி பாக்கியம்... எனக்கு ஏதாவது மிச்சமிருக்கா?' என்று கேட்டபோது, பாக்கியத்திற்கு வெட்கம் தாங்கவில்லை.

ராமைய்யாவிற்குத் தெரியும் பாக்கியத்தை சமாதானப்படுத்த வேண்டுமென்றால், ஜிலேபி இருந்தால் போதுமென்று. ஜிலேபி என்றால் அவ்வளவு கொள்ளைப் பிரியம் பாக்கியத்திற்கு.

பழைய நினைவுகளில் மூழ்கியவள், மெதுவாய் வீட்டை திரும்பிப் பார்த்தாள். 'இது தான் சாமி ரூம்; இது சமையலறை... வாஸ்துப்படி கட்டியிருக்கு. ஆண்டவன் நமக்கு ஆணொன்னு, பொண்ணொன்னு ரெண்டு புள்ளைங்கள கொடுத்திருக்காரு. ஆம்பளப் புள்ளைக்கு வீடு வேணும்ல...' என்று மகனுக்காக அவர் பாத்து பாத்து கட்டிய வீடு இது.

'ஸ்டோர் ரூமை' பார்த்தாள் பாக்கியம். பத்தாவது பெயிலாகி போன மகன் மாணிக்கம், அப்பா அடிப்பாரேன்னு பயந்து இந்த அறைக்குள் தான் ஒளிஞ்சிருந்தான். அவனை கண்டுபிடிச்சு தலைமுடியைப் பிடித்து இழுத்து, முற்றத்துக்கு இழுத்து வந்த ராமைய்யா, அவனை அடிக்க போகும் போது, ஓடிவந்து மகனை மறைத்து, அத்தனை அடியையும் தன் மேல் தாங்கிக் கொண்டாள். அப்ப, உடம்புல பட்ட அந்த அடியின் வலி தெரியல; ஆனா, இப்ப, பாக்கியத்திற்கு மனசெல்லாம் வலித்தது.

மாணிக்கம் பெரிய படிப்பு படிக்கணும்ன்னு ஆசைப்பட்டபோது, தன்கிட்ட அந்த அளவுக்கு வசதியில்லை என்று சொல்லி விட்டார் ராமைய்யா. ஆனால், 'எம் புள்ள பெரிய படிப்பு படிக்க ஆசைப்படுது; அதுக்கு பயன்படாத நகை எனக்கு எதுக்கு'ன்னு, தம் உடம்பில் ஒரு பொட்டுத் தங்கம் கூட இல்லாம அத்தனை நகைகளையும் கழட்டிக் கொடுத்தாள் பாக்கியம்.

இன்று பெரிய உத்தியோகம் பார்க்கிறான் மாணிக்கம். மாசம் ௬௦ ஆயிரம் ரூபாய் சம்பளம். ஆனால், அதையெல்லாம் பாக்கத் தான் அவங்க அப்பாவுக்கு கொடுத்து வைக்கல. டில்லியில வேலை பாக்குற உறவுக்கார பையனுக்கு, பொண்ண கல்யாணம் முடிச்சு கொடுத்த கொஞ்ச நாள்லயே போய் சேர்ந்திட்டார்.

பொண்ணு, அவ மாப்பிள்ளையோட எப்பவாவது வந்து, அம்மாவையும், அண்ணனையும் பார்த்திட்டுப் போவாள்.

பழசையெல்லாம் நினைச்ச பாக்கியத்துக்கு, மனசு வலிக்க ஆரம்பிச்சது. 'ம்... நேரமாச்சு, மாணிக்கம் வந்திருவான். ரெண்டு பையில துணியெல்லாம் எடுத்து வச்சாச்சு. 'சாயங்காலம் வரும் போது ஆட்டோவோட வர்றேன்; 5:00 மணிக்கெல்லாம் தயாரா இரு'ன்னு சொல்லிட்டு போனான். மணி 5:00 ஆகப் போகுது... கொஞ்ச நேரத்துல வந்துருவான். புள்ள காலையிலேயே இருமிக்கிட்டு இருந்தானே... மருந்து, மாத்திரை எடுத்துக் கிட்டானா என்னான்னு தெரியலயே...' என்று மனதுக்குள் அங்கலாய்த்தாள் பாக்கியம்.

மருமகள் சாப்பாட்டுத் தட்டை, 'பட்டு'ன்னு வைக்கிற சத்தம் கேட்டது. அவ தன் பொண்ணுக்கிட்ட ஜாடையாக, ''உன் பாட்டிய சாப்பிடச் சொல்லு; காலையில வச்சதும் அப்படியே இருக்கு; ஏதாவது, ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆயிட்டா நாளைக்கு எனக்கு தான் பழி வந்து சேரும். போறதுன்னு முடிவாயிடுச்சு; நல்லபடியாய் போய் சேரட்டும்,'' என்று கூறியது பாக்கியத்தின் காதில் விழுந்தது.

பையனுக்கு எத்தனையோ வசதியான இடத்துல இருந்து சம்பந்தம் வந்தபோது, அதையெல்லாம் ஒதுக்கிய பாக்கியம், வயசான காலத்துல பாத்துக்குவான்னு, கஷ்டப்படுற தன்னோட துாரத்து உறவுல இருந்து பெண் எடுத்தாள்.

அப்பப்ப சிடுசிடுத்தாலும், மருமகள் நல்லவ தான். நாம தான் அப்படி நடந்திருக்கக் கூடாது என்று, காலையில் நடந்ததை நெனைச்சுப் பார்த்தாள் பாக்கியம்.

வீட்டு ஹால்ல இருந்த மேஜை மேல் சின்ன அட்டைப் பெட்டி இருந்தது. பூஜை அறையிலிருந்து அங்கு வந்த பாக்கியம், அட்டைப் பெட்டியை பார்த்ததும், அதுக்குள்ள என்னா இருக்குன்னு பிரிச்சுப் பார்த்தாள். அதில், அவளுக்குப் பிடித்த ஜிலேபி இருந்தது. மருமக என்ன சொல்வாளோன்னு நினைத்து, மாணிக்கத்திடம் ஜிலேபி வாங்கிட்டு வரச் சொல்ல பயம். அதனால், அடக்கி வைத்த ஆசையை ஜிலேபியின் நெய்மணம் துாண்ட, 'அடடா... ஜிலேபி சாப்பிட்டு எத்தனை வருஷமாச்சு...' என, அதிலிருந்து கொஞ்சம் எடுத்து வாயில் போட்டாள் பாக்கியம்.

அப்போது பார்த்து அங்கு வந்த மருமகள், அலுவலகம் கிளம்பிக் கொண்டிருந்த மாணிக்கத்திடம், 'ஏங்க... இங்க பாத்தீங்களா இந்த அநியாயத்த... வளைகாப்பு விசேஷத்துக்கு போறதுக்கு சுவீட் வாங்கி வச்சுருக்கேன். உங்கம்மா அதை எடுத்து சாப்பிடுறாங்க; இப்ப என்னத்தை நான் அங்க கொண்டு போய்க் கொடுக்கிறது...

இப்படிதான் சின்ன பிள்ளைக்கின்னு வீட்ல எந்தப் பொருளை வாங்கி வச்சாலும், உங்கம்மா எடுத்து தின்னுடுறாங்க. வீட்ல ஒரு பொருள வைக்க முடியல. என்னால இவங்க தொல்லைய தாங்க முடியல. ஒண்ணு, வீட்ல நான் இருக்கணும், இல்ல உங்கம்மா இருக்கணும்; நீங்களே முடிவு செய்துக்கங்க. இப்ப தான் எங்கப் பாத்தாலும், முதியோர் இல்லம் இருக்குதுல்லே... அங்க கொண்டு போய் விட்டுட்டு வாங்க. என்ன மாசம் இரண்டாயிம், மூவாயிரம் ஆகுமா... கொடுத்திடலாம்...' என்றாள்.

இதைக் கேட்டதும், கோபமடைந்த மாணிக்கம், 'ஆபீசுல தான் தொல்லை தாங்க முடியலன்னா, இங்க உங்க ரெண்டு பேரோட தொல்ல. நீயும், பெரியவங்க தானேன்னு அனுசரிச்சு போக மாட்டேங்குற... சரி... அவங்களாவது வயசில பெரியவங்களாச்சேன்னு வாயை, வயித்தைக் கட்டணும்ன்னு தெரியல. எப்பப் பாத்தாலும் ரெண்டு பேரும் இப்படியே சண்டை போட்டுக்கிட்டு கிடங்க. உங்க சண்டையால எனக்கு தான் நிம்மதியே போச்சு.

'அம்மா... உன்கிட்டேயும் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாச்சு. நீயும் புரிஞ்சிக்க மாட்டங்குறே. பேசாம உன்ன முதியோர் இல்லத்துல சேர்த்து விடுறேன். இவ தொல்ல இல்லாம நீயாவது நிம்மதியா இரு; துணிமணியெல்லாம் எடுத்து வை. சாயந்திரமா உன்னைக் கூட்டிப் போய், முதியோர் இல்லத்தில சேர்த்து விடறேன். எவ்வளவு பணமோ, மாசா மாசம் கொடுத்திடுறேன். அப்பப்ப உன்னை வந்து பாத்துக்கிறேன்...' என்று சொல்லி, சாப்பிடாமல் கூட ஆபீசுக்கு சென்று விட்டான்.

மாணிக்கம் திட்டியது கூட பாக்கியத்திற்கு வருத்தமில்லை. அவன் சாப்பிடாம போறானேன்னு தான் மனசு கிடந்து தவித்தது.

ஆட்டோ சத்தம் கேட்டதும் நினைவுகளிலிருந்து மீண்டாள் பாக்கியம்.

மாணிக்கம் படிகளில் ஏறி வருவது தெரிந்தது. அவன் கையில் பார்சல்; நடையில் தளர்ச்சி. 'ஐயோ... புள்ளைக்கு உடம்புக்கு முடியலையோ... காலையில சாப்பிடாமல் போனானே... என்னாச்சோ...' என, பதற்றத்துடன் எழுந்தாள் பாக்கியம்.

உள்ளே வந்த மாணிக்கம், 'தொபுக்கடீர்' என, பாக்கியத்தின் காலில் விழுந்து, அழுதான். ''என்னப்பா... என்னாச்சு,'' என, பதறியபடி கேட்டாள்.

பதில் சொல்லாமல் தாயின் மடியில் முகம் புதைத்து அழுத மாணிக்கம், திடீரென்று எழுந்து, கையிலிருந்த பொட்டலத்தை பிரித்தான். அதில், ஜிலேபி இருந்தது. அதை தாயின் கை நிறையத் தந்தவன், ஒரு ஜிலேபியை அவள் வாயில் வைத்து, ''சாப்பிடும்மா,'' என்றான்.

பாக்கியத்திற்கு ஒன்றும் புரியவில்லை; மாணிக்கத்தையே பார்த்தாள்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மருமகளுக்கு தலை சுத்த ஆரம்பித்தது.

'இந்த மனுசனுக்கு என்னாச்சு... அம்மாகிட்ட பாசமா பொழியுறாறு...' என, எரிச்சலுடன் நினைத்தாள்.

வீட்டில் சண்டை போட்டு, கோபத்துடன் அலுவலகம் சென்ற மாணிக்கத்திற்கு, அலுவலகத்தில் வேலையே ஓடல. அம்மாவை சாயந்தரம் கூட்டிக்கிட்டு வர்றேன்னு முதியோர் இல்லத்தில் பணமும் கட்டியாச்சு.

அலுவலகத்திலிருந்து கிளம்பும் போது தான், பாண்டியன், அரக்கப் பரக்க ஓடிவந்தான். என்னடான்னு விசாரிச்சபோது, 'அம்மாவிற்கு சீரியஸ்ன்னு அண்ணன் போன் செய்தான்...' என்று கூறி அழுதான். 'அதெல்லாம் ஒண்ணும் ஆகாது; பயப்படாத...' என்று ஆறுதல் கூறினேன்

'அம்மாவ பார்க்க ஊருக்கு போகணும்; எனக்கு லீவு வேணும் சார்...' என்றான்.

பாண்டியன், மாணிக்கத்திற்கு கீழ் வேலை செய்பவன். அவனோட அம்மா, அவன் அண்ணனோட சென்னையில இருக்காங்க. அவங்களுக்கு திருநெல்வேலி அல்வான்னா உசிரு. அல்வாவை சாப்பிடும்போது, திருநெல்வேலி தாமிரபரணி ஆறும், நெல்லையப்பர் கோவிலும் அவங்க நினைவுக்கு வருமாம். அதனால, அம்மாவைப் பாக்க போகும்போதெல்லாம் பாண்டியன், திருநெல்வேலி அல்வாவை வாங்கிட்டுப் போவான். இப்போதும் அவன் கையில் திருநெல்வேலி ஸ்பெஷலான அல்வா பாக்கெட் இருந்தது.

அவனை அனுப்பி வைத்த மாணிக்கத்திற்கு, மனசு, 'சுரீர்' என்று வலித்தது.

தான் சிறுவனாய் இருந்த போது, எந்த விசேஷத்திற்கு அம்மா போனாலும், அங்க இலையில் வைக்கிற இனிப்பை, நாம் விரும்பி சாப்பிடுவோமே என்பதற்காக, தான் சாப்பிடாமல், இலையில் சுருட்டி, மடியில் கொண்டு வந்து தனக்குக் கொடுத்தது நினைவுக்கு வந்தது.

'சாப்பிட வேண்டிய காலத்தில, எனக்கு பிடிக்கும், நான் சாப்பிடணுங்கிறதுக்காக நீ சாப்பிடாம எனக்கு கொடுத்தியே அம்மா... இப்ப நீ ஆசைப்பட்டு சாப்பிட நினைக்கிறத கூட உனக்கு நான் வாங்கிக் கொடுக்காம, முதியோர் இல்லத்துக்கு துரத்த நினைச்சேனே...நான் எவ்வளவு பெரிய பாவி...' என்று நினைத்து கண் கலங்கினான் மாணிக்கம்.

வீட்டுக்கு வரும் வழியில் ஸ்வீட் கடையில அம்மாவுக்குப் பிடிச்ச ஜிலேபியை வாங்கி வந்து அவள் கையில் கொடுத்தவன், இப்போ அம்மா மடியில் படுத்து, அழுது கொண்டிருக்கிறான்.

அடுத்து வந்த நாட்களில், மகன், தன்னிடம் காட்டும் கரிசனத்தை கண்டு, பாக்கியத்திற்கு மனசெல்லாம் சந்தோஷம். இப்போதெல்லாம் வீட்டில் அடிக்கடி நெல்லை ஜிலேபியின் மணம் மணக்குது.

சுக்கிரன்

இயற்பெயர்: ராம. முத்துக்குமரன்,

வயது: 60.

படிப்பு: புலவர்.

பணி: பேச்சாளர், எழுத்தாளர், பட்டிமன்ற நடுவர் மற்றும் கவிஞர் என, 40 ஆண்டுகள் தமிழ்ப்பணி ஆற்றி வருகிறார். பன்னாட்டு கருத்தரங்குகளில் கலந்து கொண்டு, பல விருதுகளைப் பெற்றுள்ளார். பல வார, மாத இதழ்களில் ஆன்மிக மற்றும் இலக்கிய கட்டுரைகள் மற்றும் சிறுகதைகள் எழுதி வருகிறார். இது தவிர, பல நுால்களையும் வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us