
வ.மதிவதனி, பொன்னேரி: இலக்கியவாதியின் சொற்பொழிவிற்கும், அரசியல்வாதியின் சொற்பொழிவிற்கும் என்ன வித்தியாசம்?
வித்தியாசம் ஒன்றும் இல்லை; ஒற்றுமைதான் உண்டு. இரண்டுமே மனிதனின் பொன்னான நேரத்தை பாழ்படுத்துபவை, சோம்பேறி ஆக்குபவை, ஏமாற்றி பம்மாத்து செய்பவை.
என்.லதா, சூளைமேடு: விலைவாசி விஷம் போல் ஏறி வரும் இக்காலத்தில், சவுகரியமாக வாழ்பவர் யார்?
சிறைக் கைதிகள் இருக்கின்றனரே... விலைவாசி உயர்வை பற்றியோ, மண்ணெண்ணெய், ரேஷன் அரிசி கியூ பற்றியோ இவர்களுக்கு என்ன கவலை? மணி அடித்ததும் சோறோ, களியோ கிடைத்து விடுகிறதே!
எம்.ஆரோக்கியசாமி, அனுமந்தன்பட்டி: அதிக அதிகாரம் கொண்டது நீதி மன்றமா, சட்ட மன்றமா?
சுதந்திரம் அடைந்ததிலிருந்து, விடை தெரியாத கேள்வியாகவே இருந்து வருகிறது இது! நீதி மன்றங்கள், தாமே உயர்ந்த பீடம் என்பதும், சட்ட மன்றங்கள், 'தாங்களே நம்பர் ஒன்' என்பதும் தொடர்கதையாகவே உள்ளது. இந்த மெகா சீரியலை எப்போது, எவர் முடித்து வைக்கப் போகின்றனரோ!
எஸ்.ரமேஷ்சுந்தர், வெங்கடேசபுரம்: என் வயது, 28; திருமணம் செய்து கொள்ள வற்புறுத்துகின்றனர் என் பெற்றோர். திருமணம் செய்து கொள்ளலாமா?
வருபவளை வைத்துக் காப்பாற்றும் வசதியை பெற்று விட்டீர்களா? அப்படியானால், 'கோ - அஹட்!' அந்த வசதியை பெறாதவர், இன்னொரு உயிரையும் திருமணம் என்ற பெயரில் இம்சிக்க வேண்டாம்!
சி.ஆர்.ராஜபாண்டியன், திருப்பூர்: எதைக் கண்டாலும், நினைத்தாலும் எனக்கு பயமாக இருக்கிறதே...
உங்களுக்கு திட சிந்தனை இல்லை எனத் தெரிகிறது. எதிலும் திடமான புத்தி இருந்தால், இருந்த இடம் தெரியாமல் ஓடி விடும் பயம். கோழையாக இருந்தால் வாழ்வில் முன்னேறவே முடியாது. திட சிந்தனையை வளர்த்துக் கொள்ள முயலுங்கள்!
வி.இஸ்மாயில், சென்னை: புகழ்ந்து பேசினால் பெண்கள் மயங்கி விடுவார்களாமே...
அதெல்லாம் அந்தக் காலமாக இருக்கலாம்; நாய் ஏன் வாலாட்டுகிறது, மாடு ஏன் வாலைத் துாக்குகிறது என்ற சூட்சமங்களை இக்கால பெண்கள் நன்கு உணர்ந்தே இருக்கின்றனர்.
பொ.சிலம்பரசன், பெரியகுளம்: 'ரிக் ஷா' என்ற பெயர் அவ்வண்டிக்கு எப்படி அமைந்தது?
'ரிக் ஷா' எனும் ஆங்கில சொல், ஜப்பானிய சொல்லான, 'நின் - ரிஜி - ஷா' என்பதன் திரிபு! இந்த ஜப்பானிய சொல்லுக்கு, 'மனித ஆற்றலில் இயங்கும் வண்டி' என்பது பொருள். ரிக் ஷா உருவான நாடும் ஜப்பான் தான்!
த.பேச்சியப்பன், கோவை: உங்கள் நண்பர் குழாமில் சீரியஸ் டைப் அதிகமா, ஜோவியல் டைப் அதிகமா?
இரண்டாவது டைப் தான் எனக்கு எப்போதுமே ஒத்துப் போகும். பெரியசாமி அண்ணாச்சி துவங்கி, அன்வர் பாய் வரை அனைவருமே ஜோவியல் தான். ஒன்றிரண்டு, 'சீரியஸ்' பேர்வழிகள் உண்டு... அவர்களை அடிக்கடி சந்திப்பதில்லை!

