sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : நவ 23, 2014

Google News

PUBLISHED ON : நவ 23, 2014


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த வாரத்தில் ஒரு நாள், கம்ப்யூட்டரில் இ - மெயில் பார்த்துக் கொண்டிருந்தேன். அமெரிக்காவில் இருந்து வாசகர் ஒருவர் எழுதி இருந்த கடிதத்தையும், அவரது நண்பர் அவருக்கு அனுப்பி இருந்த, 'அட்டாச்மென்ட்' ஒன்றையும் எனக்கு அனுப்பி இருந்தார்; அதைப் பார்த்த எனக்கு படு அதிர்ச்சி!

அவர் அனுப்பி இருந்த, 'அட்டாச்மென்டில்' தென்னகப் பெண் ஒருவர், படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருந்தார்; அதன் அருகே இருந்த வாசகம்...

'மும்பை, டில்லி, பெங்களூரு, சென்னை, கோல்கட்டாவைச் சேர்ந்த பெண்கள் நாங்கள்... விளம்பரத் துறையில் மாடல்களாக இருக்கிறோம், பேஷன் ஷோக்களில் கலந்து கொள்கிறோம், பெரிய மனிதர்களுக்கு தற்காலிக தோழமையும் தருகிறோம்; மேற்சொன்ன நகரங்களுக்கு நாங்கள் அனைவருமே மாறி மாறி வந்து செல்கிறோம். மேலும், விவரங்களுக்கு அடுத்த பக்கம் பாருங்கள்...' என்று இருந்தது.

அடுத்த பக்கத்திற்கு சென்றால், மேற் சொன்ன ஐந்து நகரங்களின் பெயருடைய, 'ஐகான்'கள் மற்றும் கட்டணம், அணுகுமுறை, ஆல்பம் என மூன்று, 'ஐகான்'கள் தனித்தனியே இருந்தன. ஒவ்வொரு ஊர் பெயரைத் தட்டியதும், அந்த ஊரில் உள்ள, அழகிகளின் படங்கள் மற்றும் அவரவர் பெயருடன் தோன்றுகின்றனர்.

கட்டணத்தை தட்டியதும், கோல்கட்டா தவிர, மற்ற ஊர்களில், மாலை நேர பார்ட்டிகளில், 'பெரிய மனிதர்களுடன், பதுமைகளாகக் கலந்து கொண்டு மது அருந்த, தோழமையுடன் இருக்க, 10 ஆயிரம் ரூபாய் என்றும், 'முழு இரவும்' தங்க, 20 ஆயிரம் ரூபாய் என்றும் குறிப்பிடப்பட்டு இருந்தது. கோல்கட்டாவில் மட்டும், 4,500 ரூபாய் மற்றும் 10 ஆயிரம் ரூபாய்!

'அணுகுமுறையில் நேரடியாக கட்டணம் வாங்குவது எங்கள் வழக்கம் இல்லை; கிரெடிட் கார்டு மூலம், 'பே' செய்து விடுங்கள். எங்களின், தொடர்பாளர் எங்களுக்குச் சேர வேண்டியதை அளித்து விடுவார். நீங்கள் தங்கியுள்ள ஸ்டார் ஓட்டல் முகவரியும், ரூம் நம்பரும், நேரமும் சொல்லி விட்டால் போதும், நீங்கள் தேர்வு செய்தவர் அங்கே வந்து விடுவார்...' என்றிருந்தது.

அடுத்து, 'ஆல்பம்' என்ற பகுதிக்குச் சென்றால், 3035 அழகிகளின் படங்கள்...

18 வயது முதல், 35 வரை, அரைகுறை ஆடை அணிந்து பல்வேறு போஸ்களில்!

வெலவெலத்துப் போய் கம்ப்யூட்டரை, 'ஆப்' செய்து, அடுத்த வேலையைப் பார்க்கச் சென்றேன்.

அடுத்த நாள், லென்ஸ் மாமா, அண்ணாச்சி, குப்பண்ணா சகிதம் திருச்சி சென்றேன். 'பளபள'வென போடப்பட்டிருந்த தேசிய நெடுஞ்சாலையில் வண்டியை ஓட்டியபடியே, இன்டர்நெட்டில் பார்த்த விஷயத்தை பாதி சொல்லி கொண்டிருந்த போதே, 'நிறுத்து நிறுத்து... நான் ஒரு பெரிய மனுஷன் இங்கே இருக்கேன்; என்ன பேசறதுன்னு விவஸ்தை இல்லாம பேசுறீயே...' எனக் கடிந்து கொண்டார் குப்பண்ணா.

'ஐயோ குப்பண்ணா சார்... நாடு எப்படி மோசமா போயிகிட்டு இருக்குன்னு சொல்ல வந்தேன்; சரி, உங்களுக்கு பிடிக்காததால பேசல. சமீபத்தில், மழையால் ஏற்பட்ட பாதிப்பு பற்றி சொல்லுங்களேன்...' என்றேன்.

மனிதர் அதை சீரியசாக எடுத்துக் கொண்டு, வெள்ளக் கதை சொல்ல ஆரம்பித்தார்:

அது, 1955ம் ஆண்டு டிசம்பர் மாதம். தென் மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த நேரம்... கார் செல்ல முடியாத இடங்களுக்கும், தலையில் முண்டாசைக் கட்டிக் கொண்டு, இடுப்பளவு வெள்ளத்தில் அதிகாரிகளுடன் சென்று பார்வையிட்டார் அப்போதைய முதல்வர் காமராஜர். அவர், அதிகாரிகளுக்குப் போட்ட முதல் உத்தரவு, 'வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, எப்படியும் உணவு கிடைக்கச் செய்ய வேண்டும்...' என்பது தான்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, எந்த விதமான உதவி அவர்களுக்கு உடனடியாகத் தேவை என்று அவர்களிடம் கேட்டார் காமராஜர். அதேசமயம், ஆட்சியாளர்களிடமுள்ள

நிதிப்பற்றாக்குறையையும் நினைவில் வைத்துக் கொள்ளச் சொன்னார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், தங்களுடைய வீட்டுக் கூரைகளை புதுப்பித்துக் கொள்ள பணம் வேண்டுமெனக் கேட்டனர். கூட்டத்திலிருந்த முதியவர் ஒருவரை அழைத்து, 'எவ்வளவு பணம் தேவைப்படும்?' என்று கேட்டார்.

அந்த முதியவர் சிறிது தயக்கத்திற்குப் பிறகு, 'நுாறு ரூபாய் தேவைப்படும்...' என்று சொன்னார். உடனே காமராஜர், 'நுாறு ரூபாய் அதிகம்; ஐம்பது ரூபாய் போதும்...' என்றார். கூட்டத்தினர், 'கசமுச'வென்று சிறிது நேரம் தங்களுக்குள் உரையாடிவிட்டு, அந்தத் தொகை போதுமென்று ஒப்புக் கொண்டனர்.

அப்போது தன்னோடு வந்திருந்த ரெவின்யூ போர்டு உறுப்பினரை அழைத்து, வீடுகள் இடிந்து போன ஒவ்வொருவருக்கும் ஐம்பது ரூபாய் வீதம் கொடுக்க ஏற்பாடு செய்யும்படி சொன்னார் காமராஜர்.

ரெவின்யூ போர்டு உறுப்பினர், 'ரெவின்யூ போர்டில் இந்தப் பிரச்னையை வைத்து, எவ்வளவு தொகை தேவையாக இருக்குமென எஸ்டிமேட் போடச் சொல்கிறேன்...' என்றார்.

உடனே, 'இதற்கு, சென்னையிலுள்ள ரெவின்யூ போர்டு, எஸ்டிமேட் போட வேண்டுமென்று ஏன் சொல்கிறீர்கள்? வீடு இழந்த ஒவ்வொருவருக்கும், 50 ரூபாய் வீதம் கொடுத்துக் கொண்டே வந்தீர்களேயானால், மொத்தத் தொகை எவ்வளவு என கணக்கு தெரிந்து விடுமே...' என்றார் காமராஜர்.

முதலமைச்சர் தங்கள் பிரச்னையை உடனடியாகத் தீர்ப்பதைப் பார்த்து, கிராமவாசி களுக்கு ஒரே மகிழ்ச்சி.

ரெவின்யூ போர்டு உறுப்பினர், 'சரி, அப்படியே செய்து விடலாம்...' என்று சொல்லி, சற்று துாரத்தில் நின்று கொண்டிருந்த மாவட்டக் கலெக்டரிடம் சென்றார். அவரிடம் ரெவின்யூ போர்டு உறுப்பினர் ஏதோ சொல்லவும், கலெக்டர் அங்கிருந்து வேகமாகப் புறப்பட்டார். அதைப் பார்த்த காமராஜர், அவரை தன்னருகில் அழைத்து, 'சென்னையிலிருந்து பணத்தை வரவழைத்துக் கொடுக்க முயற்சி செய்யாதீர்கள். உள்ளூர் கஜானாவிலிருக்கும் பணத்தை எடுத்து கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்...' என்று கூறி, பிரச்னையை எளிமையாகத் தீர்த்துவிட்டு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற பகுதிகளுக்கு பயணத்தை தொடர்ந்தார் என்றார் குப்பண்ணா.

இதற்கிடையே, திருச்சி, 30 கி.மீ., என, மைல் கல் தெரிந்தது. மணி மதியம், 12:55 ஆகி இருந்தது.

'ஏம்பா மணி... இன்னும் 5 கிலோ மீட்டருல கொணலைன்னு ஒரு ஊர் வரும்ப்பா... அங்கே சாப்பிட்டுடலாமா?' என்றார் அண்ணாச்சி.

சென்னையில் இருந்து திருச்சி செல்லும் போது, ரோடின் வலது பக்கம், சமயபுரத்திற்கு கிட்டத்தட்ட, 10 கி.மீ.,க்கு முன், கொணலை என்ற ஊர் உள்ளது.

'அந்த ஊர் சாப்பாட்டுல அப்படி என்ன விசேஷம் அண்ணாச்சி?' என்றேன்.

'அங்கே, 'என்.எஸ்.ஆர்.,'ன்னு ஒரு ஓட்டல் இருக்கு... அங்க லாரிக்காரங்க மட்டும் தான் சாப்பிடுவாங்க. ஒரு ரகசியம் தெரிஞ்சுக்க... லாரி டிரைவருங்க, எந்த ஓட்டல்ல அதிகமா குவியறாங்களோ அந்த ஓட்டல் சாப்பாடு வயிற்றை கெடுக்காது; அதோடு, சுவையாவும் இருக்கும். வயிற்றை கெடுக்கும் உணவை டிரைவர்கள் உண்டால் அவர்கள் பிழைப்பே போய்விடும் அல்லவா...' என்றார்.

அங்கே மட்டன் பேமசாம்... அதுவும் குழம்பில் கிடக்கும் மட்டனை எடுத்து சுக்கா போட்டுத் தரச் சொன்னால் சூப்பரோ சூப்பராம்! அதை லென்ஸ் மாமாவும், அண்ணாச்சியும் சாப்பிட, சவ்சவ்வைக் கண்டாலே ஓடும் நான், அங்கு கொடுத்த சவ்சவ் பொரியலையும், புடலங்காய் கூட்டையும் திரும்ப திரும்ப கேட்டு வாங்கி சாப்பிட்டேன். மதியம், 2:30க்கு மேல் ஒன்றும் கிடைக்காதாம்!






      Dinamalar
      Follow us