/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
கதாநாயகனின் கதை! - சிவாஜி கணேசன் (8)
/
கதாநாயகனின் கதை! - சிவாஜி கணேசன் (8)
PUBLISHED ON : நவ 23, 2014

பரமக்குடியிலிருந்து, மதியம், 3:00 மணிக்கு, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் கிளம்பும். எங்கள் முகாமை பரமக்குடியில் முடித்து, சேலம் போக, அந்த எக்ஸ்பிரசில் ஏறினோம்.
திருச்சிக்கு, இரவு, 10:30 மணிக்கு வண்டி வந்து சேர்ந்தது.
அன்றிரவு, திருச்சியில் உள்ள சின்னய்யா பிள்ளை சத்திரத்தில் தங்கினோம்.
மறுநாள் திருச்சியிலிருந்து பஸ்சில் கிளம்பி, சேலம் போய் சேர்ந்தோம். சேலத்தில் நியூ ஓரியண்டல் தியேட்டர்ஸ் (பின்னாளில் அது, 'நியூ சினிமா'வாக மாறிவிட்டது) கொட்டகையில், எங்கள் நாடகங்களை நடத்த ஆரம்பித்தோம்.
'இந்தியன் டக்லஸ்' ('டக்லஸ் பேர் பாங்க்ஸ்' - புகழ் பெற்ற அமெரிக்க நடிகர்) எம்.ஆர்.ராதா நடிக்கும், 'இழந்த காதல்' நாடகம் நடைபெறும் என்று விளம்பரப்படுத்தி, முதல் நாடகத்தை ஆரம்பித்தோம். ஆறு மாதங்கள் இந்த நாடகம் அங்கு நடைபெற்றது.
இப்போது படங்களில் வரும் முக்கிய காட்சிகளை படம் எடுத்து, 'போஸ்டர்' வைப்பதைப் போல, 'இழந்த காதல்' நாடகத்திற்காக முதன் முதலாக புகைப்படங்கள் எடுத்து, 'போஸ்டர்' வைத்திருந்தனர். இம்மாதிரி ஒரு நாடகத்தில் வரும் முக்கிய காட்சிகளை புகைப்படமெடுத்து, 'போஸ்டர்' வைத்தது, இதில் தான் என்று நினைக்கிறேன். 'இழந்த காதல்' தவிர, எங்கள் கம்பெனியின் மற்ற எந்த நாடகங்களுக்கும் இம்மாதிரி செய்யவில்லை.
எங்கள் கம்பெனி நாடகங்களில் மாயாஜால தந்திரக் காட்சிகள் அவ்வளவாக இருக்காது. கதையும், நடிப்பும் தான் நாடகங்களுக்கு ஜீவன்.
எம்.ஆர்.ராதா, கே.டி.சந்தானம், எம்.ஈ.மாதவன், சி.எஸ்.பாண்டியன், டி.கே.சம்பங்கி, காகா ராதா கிருஷ்ணன் போன்ற பல திறமை வாய்ந்த நடிகர்கள் கம்பெனியில் இருந்தனர். கே.டி.சந்தானம் நாடகத்திற்குரிய பாடங்களையும், நடிப்பையும் சொல்லித் தரும் ஆசிரியராக இருந்தார்.
கம்பெனி நிர்வாகத்தை ராமசுப்பைய்யர் கவனித்து வந்தார். எங்கள் தலைமுறைக்கு முந்தி, ஜகந்நாதய்யர் கம்பெனி என்று ஒரு பிரபல நாடகக் கம்பெனி இருந்தது.
அந்நாளில் புகழ் பெற்று விளங்கிய கண்ணையா கம்பெனியுடன், இந்த ஜகந்நாதய்யர் கம்பெனியையும் ஒப்பிட்டுச் சொல்வர்.
அந்த ஜகந்நாதய்யருடைய மகன் தான் ராமசுப்பைய்யர். நிர்வாகத்திலும், கண்டிப்பிலும் எப்படியோ, அப்படியே அன்பை பொழிவதிலும்!
'இழந்த காதல்' நாடகத்தில், கம்பெனியில் இருந்த பாதி பேருக்கு வேலை இல்லை. இதனால், அய்யர், ஒரு சாமர்த்தியமான வேலை செய்தார்.
வேலை இல்லாமல் நடிகர்களை வைத்து பராமரிப்பது கம்பெனிக்கும் நஷ்டம், நடிகர்களிடையேயும் ஒருவித சலிப்பை ஏற்படுத்திவிடக் கூடும் என்பதை உணர்ந்து, வேலை இல்லாத நடிகர்களை எல்லாம் ஒன்றாகச் சேர்த்து, மதுரை ஸ்ரீ பால கான சபாவின் கிளையாக, ஒரு தனிக் கம்பெனியை ஏற்படுத்தி, சேலம் சுற்று வட்டார ஊர்களில் நாடகம் நடத்த ஆரம்பித்தார் ராமசுப்பைய்யர்.
கிளைக் கம்பெனிக்கும் இதே பெயர் தான். கிளைக் கம்பெனியில், நானும் சேர்த்துக் கொள்ளப்பட்டேன். எங்கள் முதல் முகாம், நாமக்கல்.
வழக்கம் போல, 'ராமாயணம், லவகுசா, கள்வர் தலைவன், வேதாள உலகம், தேசபக்தி மற்றும் கதரின் வெற்றி' என, பல நாடகங்களில் நடித்தோம்.
நாமக்கல்லில் ஒரு மாதம் நாடகம் நடத்தினோம். அங்கே முகாமிட்டிருந்த போது தான், நாடக உலகில் தனிப் பெரும் புகழ் பெற்றிருந்த, சாமண்ணா அய்யரை சந்தித்தேன்.
எங்களுடைய நாடகம் இல்லாத நாட்களில், நாமக்கல்லில் உள்ள அதே கொட்டகையில், சாமண்ணா அய்யரின் ஸ்பெஷல் நாடகங்கள் நடைபெறும்.
'டம்பாச்சாரி' நாடகத்தில் ஒன்பது விதமான வேடங்களில் அற்புதமாக நடித்திருப்பார் அய்யர். அம்மாதிரி பல தரப்பட்ட வேடங்களை ஒரே நாடகத்தில் செய்ய வேண்டும் என்ற ஆசை, என் உள்ளத்திலும் துளிர் விட்டது. ஆனால், 'அது சாத்தியமா...' என்ற கேள்வியும் எழுந்தது. அன்றைய நிலையில் என்னால் அப்படித்தான் நினைக்க முடிந்தது.
பல ஆண்டுகளுக்குப் பின், நவராத்திரியில் ஒன்பது வேடங்களை ஏற்று நடித்த போது தான், அன்றைய கேள்விக்கான, பதில் கிடைத்தது.
நாமக்கல்லை அடுத்து, ராசிபுரம் சென்றோம்.
சந்தை திடலுக்கு எதிர்வாக்கில் உள்ள கொட்டகையில் தான் எங்கள் நாடகங்கள் நடந்தன.
பொதுவாக கம்பெனி நடிகர்கள் தங்கி இருக்கும் வீட்டுக்கும், நாடகம் நடக்கும் கொட்டகைக்கும் எட்டு கி.மீ., துாரம் இருக்கும்.
ஆறு வயதிலிருந்து, இருபது வயது வரை உள்ள பையன்கள், எங்கள் கம்பெனியில் நடிகர்களாக இருந்தனர். அவர்கள் அனைவரும் ஒரே மாதிரியான உடை அணிந்து, உயரத்திற்கு ஏற்றபடி அடுத்தடுத்து நின்று, வரிசையாக கம்பெனி வீட்டிலிருந்து நாடகக் கொட்டகைக்கு அழைத்துச் செல்லப்படுவர். கட்டுப்பாட்டுடன் இப்படி நாங்கள் நடந்து செல்வதைப் பார்க்க, வீட்டுக்கு வெளியே வருவர் ஊர் மக்கள்.
ராசிபுரத்துக்கு அடுத்தபடி நாங்கள் வந்தது தர்மபுரி. இங்கு விசேஷமாகக் குறிப்பிடும்படி எதுவும் இல்லை.
ராமசுப்பைய்யர் மிகவும் கண்டிப்பானவர் என்று சொன்னேன் அல்லவா? அவர் எங்களிடம் காட்டிய அன்பையும் குறிப்பிட வேண்டும்.
மாதத்தில் ஒரு முறை, எங்கள் அனைவருக்கும் பேதி மருந்து சாப்பிடக் கொடுப்பார். அதற்காக எண்ணெய் கொடுக்கும் நாளில், அண்டா நிறைய ரசம் வைக்கச் சொல்வார். அன்று மாலை வரை, வயிற்றுக்கு ஒன்றும் தர மாட்டார்.
இப்படி பையன்களை ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்று நினைத்து செயலாற்றிய அந்த நல்ல உள்ளத்தை, உயர்ந்த மனிதரை, சாகும் வரை மறக்க முடியாது.
என்ன கேட்டாலும் கொடுப்பார். வயிறாரச் சோறு போட்டு, துணிமணி வாங்கிக் கொடுத்து, தேவைக்குப் பணம் தந்து, வாழத் தொழிலும் கற்றுக் கொடுத்தார்; அதேசமயம் கண்டிப்புடனும் இருந்தார். அதுவும் தொழிலில் மிகவும் கண்டிப்பு. சரியாகப் பாடத்தைச் சொல்லாவிட்டால், அவ்வளவு தான்! பிரம்படி தான் பரிசு!
முதலில் பாடம் சொல்லி தந்தவுடன், இரண்டு நாள் இடைவெளி விடுவர். இந்த இரண்டு நாளில் பாடத்தை நன்றாக மனப்பாடம் செய்திருக்க வேண்டும். மூன்றாவது நாள் அவர் பாடம் கேட்கும் போது ஒரு வார்த்தை தடுமாறாமல், தங்கு, தடையின்றி சொல்ல வேண்டும். வார்த்தையைத் தவற விட்டால் போதும்... அந்த இடத்திலேயே படுக்க வைத்து, வெறும் உடம்பில் பிரம்பால் ஓங்கி அடிப்பர். ஒரு அடி, இரண்டு அடி அல்ல, கை ஓயும் வரை அடிப்பார்!
இந்தப் பிரம்படி பரிசை நானும் வாங்கி இருக்கிறேன்.
இரவு சாப்பாட்டுக்குப் பின், எங்கள் எல்லாரையும் அழைத்து உட்கார வைத்து, அவரவர்களுக்குத் தெரிந்த நடிப்பை, செய்து காட்டச் சொல்வார்.
பாடத் தெரியாதவனை வேண்டுமென்றே பாடச் சொல்வார். அப்படி அவன் பாடவில்லை என்றால், அவனைத் திட்டி, அன்பாக உதைப்பார். அதிலே மற்ற பையன்களுக்கு ஒரு தமாஷ்!
அப்போது பாகவதர் நடித்த, திருநீலகண்டர் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தது.
அதிலே கலைவாணர், மதுரம், டி.எஸ்.துரைராஜ் நடித்த காமெடி காட்சியை நான், காகா ராதாகிருஷ்ணன், திருச்சி தங்கவேலு மூவரும் நடித்துக் காட்டினோம்.
நான் மதுரமாகவும், காகா ராதாகிருஷ்ணன் என்.எஸ்.கே., வேடத்திலும் நடித்தோம்.
இரவு,8:00 மணிக்கு ஆரம்ப மாகும் இந்த கேளிக்கைகள், இரவு, 10:00 அல்லது 11:00 மணி வரை நடக்கும். அதாவது, எங்களுக்கு துாக்கம் வரும் வரை!
இம்மாதிரி கேளிக்கைகளை நடத்துவதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
ஒன்று, புதிதாக மற்றொரு ஊருக்குப் போகும்போது, உற்சாகமாக இருப்பர் என்பது. இரண்டாவது, சாப்பிட்ட உடனே படுத்துத் துாங்குவது ஆரோக்கியத்திற்கு கெடுதல் என்பதால், அதைத் தடுப்பது!
தர்மபுரியிலிருந்து குமாரபாளையம், ஈரோடு, கோவை, ஊட்டி மற்றும் சிங்காநல்லுார் ஆகிய இடங்களுக்கு எங்கள் முகாம் மாறியது. இவை எல்லாமே சிறப்பு வாய்ந்த ஊர்கள்.
குமாரபாளையத்தில் நாடகம் நடத்தச் சென்ற போது, ஒரு பயங்கரச் சம்பவம் நடைபெற்றது.
அது...
— தொடரும்.
தொகுப்பு: வைரஜாதன்,
நன்றி 'பொம்மை'
விஜயா பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.

