PUBLISHED ON : டிச 21, 2014

அஜித்துக்கு இலங்கையிலும் ரசிகர்கள்!
தமிழகம் மட்டுமின்றி, இலங்கை ஈழத்தமிழர்கள் மத்தியிலும், அஜித்துக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். அவர்களெல்லாம், என்னை அறிந்தால் படத்தின் ரிலீசை எதிர்பார்த்திருப்பதோடு, அஜித்துக்கு, 60 அடி ராட்சச, 'கட்-அவுட்'கள் தயார் செய்து, போக்குவரத்து மிகுந்த பகுதிகளில் வைத்திருக்கின்றனர். இலங்கையில் இதற்கு முன் எம்.ஜி.ஆருக்குத்தான், 40 அடி உயரத்தில், 'கட் - அவுட்' வைத்திருந்தனர். இலங்கை தமிழர்கள் மத்தியில், அஜித்துக்கு இருக்கும் வரவேற்பை பார்த்து, என்னை அறிந்தால் படத்தை, அதிக தியேட்டர்களில் வெளியிட முடிவு செய்திருக்கின்றனர்.
— சினிமா பொன்னையா
நயன்தாரா - ஹன்சிகாவின் கோபத்துக்கு ஆளான உதயநிதி!
நண்பேன்டா படத்தைத் தொடர்ந்து, கெத்து மற்றும் இதயம் முரளி ஆகிய படங்களில் நடிக்கிறார் உதயநிதி. 'இந்த படங்களில் நடிக்க நயன்தாரா மற்றும் ஹன்சிகாவுக்கு இணையான வேறு சில முன்னணி நடிகைகள் கிடைப்பார்களா...' என்று சிலருக்கு தூது விட்டார். ஆனால், அவர்கள், உதயநிதிக்கு கால்ஷீட் தரவில்லை. மாஸ் படத்தில் நடிக்க லண்டனில் இருந்து சென்னை வந்திருந்த, ஐ பட நாயகி எமி ஜாக்சனின் காதுக்கு விஷயம் போக, உடனே, உதயநிதியைச் சந்தித்து, கெத்து படத்தில் நடிக்க ஒப்புதல் தெரிவித்து விட்டார். இதனால், இன்ப அதிர்ச்சியடைந்த உதயநிதி, விக்ரமின், ஐ படத்தில் நடித்திருப்பவர், தன்னுடன் நடிக்கிறார் என்றதும், இதற்கு முன் தன்னுடன் நடித்த நடிகைகளுக்கு கொடுத்ததை விட, சில கோடிகளை அதிகமாகக் கொடுக்க முன்வந்திருக்கிறார். இந்த சேதி நயன்தாரா மற்றும் ஹன்சிகாவின் காதுக்கு செல்ல, 'எமியை விட நாங்கள் மட்டமாகி விட்டோமா...' என்று நடிகர் மீது, செம கடுப்பில் இருக்கின்றனர்.
— சி.பொ.,
30 வயதுக்காக காத்திருக்கும் தமன்னா!
தமன்னாவை சந்திக்கும் தோழிகள், 'திருமண வயதாகி விட்டதே எப்போது திருமணம் செய்து கொள்வதாக உத்தேசம்?' என்று கேட்டு வருகின்றனர். அதற்கு, 'சினிமாவில் பெரிய அளவில் சாதிக்கத்தான் வந்தேன்; ஆனால், நான் வந்த வேலை இன்னும் எதிர்பார்த்தபடி நடக்கவில்லை. அதனால்தான் இப்போது வித்தியாசமான கதாபாத்திரங்கள் பக்கம், என் கவனத்தை திருப்பியிருக்கிறேன்...' என்கிறார். மேலும், 'நயன்தாரா மற்றும் அனுஷ்கா போன்ற நடிகைகளுக்கெல்லாம், 30 வயதுக்கு பின்தானே, வெயிட்டான கதைகள் கிடைத்து வருகின்றன. அதனால், நானும், 30 வயதை எதிர்நோக்கியிருக்கிறேன். அதனால், திருமணம் பற்றி இன்னும், நினைத்து கூட பார்க்கவில்லை...' என்று சொல்லி, அவர்களின் வாயடைக்கிறார். அறியாத ஊருக்குப் புரியாத வழி காட்டினாற் போல்!
— எலீசா
கவர்ச்சி நடிகைகளுக்கு ஆதரவாக குஷ்பு!
தி.மு.க.,வில் இருந்து விலகி, காங்கிரசில் இணைந்துள்ளார் குஷ்பு. இந்நிலையில், நடிகர், நடிகைகளுக்கு ஆதரவாக குரல் கொடுப்பதையும் நிறுத்தவில்லை. சமீபத்தில், உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு கட்சியினர், 'சினிமாவில் அரைகுறை ஆடையணிந்து நடனமாடும் நடிகைகள் விலைமாதர்கள்...' என்பது போன்று பேசினர். இந்த செய்தி, குஷ்புவின் காதுகளுக்கு வந்த போது, கொதித்து போய், உடனடியாக தன் டுவிட்டரில், 'இந்தியாவில் எந்த மூலையில் பெண்களுக்கு ஒரு அவமானம் என்றாலும் அதை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது...' என்று கூறி, 'நடிகைகளை தரக்குறைவாக பேசுபவர்கள், பெண்களை மதிக்கத் தெரியாதவர்கள்; அப்படிப்பட்டவர்களை ஒருபோதும் மன்னிக்க முடியாது...' என, பல்வேறு சூடான வார்த்தைகளை உதிர்த்து, எதிர்ப்பை தெரிவித்துள்ளார். அத்துடன், சில பெண்கள் அமைப்பையும் நடிகைகளுக்கு ஆதரவாக குரல் கொடுக்குமாறு கேட்டுள்ளார்.
—சினிமாபொன்னையா
கறுப்பு பூனை!
ஜில்லா நடிகை, இதுவரை மேல்தட்டு கதாநாயகர்களைத்தான் தன்னை நெருங்க விட்டார். ஆனால், இப்போது மேல்தட்டு கதாநாயகர்கள் அவரை நெருங்குவதில்லை. விளைவு, இரண்டாம் தட்டு கதாநாயகர்களிடம் இறங்கி வந்திருக்கிறார். அதோடு, தன் பழைய பந்தாக்களையெல்லாம் ஓரங்கட்டியிருக்கும் நடிகை, நேரம்கெட்ட நேரமாக இருந்தாலும், அவர்களை தேடிச்சென்று சந்தித்து நேசம் வளர்க்கிறார். இதனால், இதுவரை அம்மணியை திரும்பிப் பார்க்காமல் இருந்த கோலிவுட் திரையுலகம், அவருடன் கைகோர்க்கத் துவங்கியிருக்கிறது.
சைவப்பட இயக்குனரை திருமணம் செய்து கொண்ட பால் நடிகை, இப்போதும் மலையாள படங்களில் நடித்து விட்டு, இரவு வெகுநேரத்திற்கு பின்தான் வீட்டிற்கு செல்கிறார். இதை இயக்குனர் கண்டு கொள்ளாதபோதும், அவரது பெற்றோர் நடிகையை நிற்க வைத்து கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர். இதனால், அடிக்கடி கோபித்துக்கொண்டு, கேரளாவுக்கு பறந்து விடுகிறார் நடிகை. ஆக, காதல் திருமணம் கலவரத்தில் முடியும் அபாயத்தை நெருங்கிக் கொண்டிருப்பதாக சொல்கின்றனர்.
துளிகள்!
* முதன்முறையாக தனுஷுடன் இணைந்துள்ள காஜல்அகர்வால், அடுத்தபடியாக ஆர்யா மற்றும் விஷாலுடன் ஜோடி சேருவதற்கு கதை கேட்டிருக்கிறார்.
* மலையாளத்தில் மோகன்லாலுடன், மிலி என்ற படத்தில், முக்கியத்துவம் வாய்ந்த வேடத்தில் நடித்து வருகிறார் அமலா பால்.
* குறைவான சம்பளம் வாங்கி வந்த விமலும், தற்போது தன் சம்பளத்தை ஒன்றரை கோடியாக உயர்த்தி, பட அதிபர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
* 'சின்ன வீடா வரட்டுமா...' பாடலுக்கு, அர்ஜுனுடன் நடனமாடிய தேஜாஸ்ரீ, மராத்திய மொழிப் படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.
அவ்ளோதான்!
