
மம்முட்டி படத்தில் ரஜினி!
மலையாளத்தில் மம்முட்டி - நயன்தாரா நடிப்பில் சித்திக் இயக்கிய படம், பாஸ்கர் தி ராஸ்கல். இப்படம் மிகப் பெரிய வெற்றியடைந்ததால், அப்படத்தின் ரீ - மேக்கில் நடிக்க, இந்தியில் அக் ஷய்குமாரும், தெலுங்கில் வெங்கடேஷும் ஆவலுடன் இருக்கின்றனர். ஆனால், 'முதலில் தமிழில் தான் ரீ-மேக் செய்வேன்...' என்று அடம் பிடிக்கிறார் சித்திக். அத்துடன், 'மம்முட்டி நடித்த கதாபாத்திரம், ரஜினி அல்லது அஜித் இருவரில் ஒருவருக்கு தான் பொருத்தமாக இருக்கும்...' என்று கூறி, அவர்களிடம் கால்ஷீட் கேட்டுள்ளார். ஆனால், அஜித் தரப்பு கதையை காது கொடுத்து கேட்காத நிலையில், மம்முட்டி நடித்த படம் என்றதும், கதை கேட்டுள்ளார் ரஜினி. தற்போது, மலையாள, த்ருஷ்யம் படத்தின் தமிழ் ரீ-மேக்கான, பாபநாசம் படத்தில் கமல் நடித்திருப்பதைத் தொடர்ந்து, மம்முட்டி நடித்த படத்தின் ரீ-மேக்கில், ரஜினி நடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்பட்டிருப்பதாக, சித்திக் தரப்பு கூறி வருகிறது.
— சினிமா பொன்னையா
மகளை அறிமுகம் செய்யும் மீனா!
ரஜினிகாந்த் நடித்த, அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் மீனா. அதையடுத்து, அதே ரஜினியுடன், எஜமான், வீரா மற்றும் முத்து பேன்ற படங்களில் ஜோடியாவும் நடித்தார். இந்நிலையில், திருமணத்திற்கு பின், சமீபகாலமாக, கேரக்டர் ரோல்களில் நடித்து வரும் மீனா, தன் இரண்டு வயது மகள் நைனிகாவை, விஜய் நடிக்கும் புதிய படத்தில், விஜய்யின் மகளாக நடிக்க வைத்துள்ளார். இதுகுறித்து, 'நான், சூப்பர் ஸ்டார் படத்தில் அறிமுகமானேன்; என் மகள், தளபதி படத்தில் அறிமுகமாகிறார். அப்படியென்றால், அவளுக்கும் சினிமாவில் ஒளிமயமான எதிர்காலம் காத்திருக்கிறது...' என்கிறார்.
—எலீசா
ப்ரியா ஆனந்தை வீழ்த்திய பிந்துமாதவி!
சமீபகாலமாக, ப்ரியா ஆனந்த் மற்றும் பிந்துமாதவியின் மார்க்கெட் சரிவடைந்துள்ளது. அதனால், 'எப்படியேனும் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள வேண்டும்...' என்று, இருவருமே கோதாவில் இறங்கியுள்ளனர்.
இந்நிலையில், அரிமாநம்பி படத்திற்கு பின், அப்பட இயக்குனர், விக்ரமை வைத்து இயக்கும், மர்ம மனிதன் படத்தில் நடிக்க முட்டி மோதி வந்தார் ப்ரியா ஆனந்த். இந்நிலையில், அவரைப் போலவே பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த பிந்துமாதவியும், அப்படத்தில் இடம் பிடிக்க, கல்லெறிந்து வந்தவர், தற்போது, அப்படத்தை கைப்பற்றி விட்டார்.
போட்டியில் தோற்று விட்ட ப்ரியா ஆனந்த், பிந்துமாதவி குறுக்கு வழியில் வாய்ப்பை மடக்கி விட்டதாக, அவர் மீது, 'கிசுகிசு' பரப்பி வருகிறார். வந்தது சண்டை, இறக்கடி கூடையை!
— எலீசா
சந்தானத்தை அதிர வைத்த ரசிகர்கள்!
சந்தானம் நடித்த, கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தின் கதை, கே.பாக்யராஜ் இயக்கி, நடித்த, இன்று போய் நாளை வா படத்தின் தழுவல் என்பதால், 'ரீ-மேக் உரிமையை வாங்காமல், என் கதையை படமாக்கிய சந்தானம், அதற்கான தொகையை தர வேண்டும்...' என்று கொடி பிடித்தார் கே.பாக்யராஜ். ஆனால், அதை இப்போது வரை கண்டுகொள்ளவில்லை சந்தானம்.
இந்நிலையில், தற்போது, சந்தானம் நாயகனாக நடித்து வெளியாகியிருக்கும், இனிமே இப்படித்தான் படத்தின் கதையும், பாக்யராஜின், பாமா ருக்மணி படத்தின் தழுவல் தான் என்று இணையதளங்களில் ரசிகர்கள் கருத்து பரிமாறி வருகின்றனர்.
இதனால், 'ஏற்கனவே பாக்யராஜ்க்கும், எனக்குமிடையே பிரச்னை உள்ள நிலையில், மீண்டும் ரசிகர்கள் புதிதாக ஒரு பிரச்னையை கிளறி விடுகின்றனரே...' என்று அதிர்ந்து போயிருக்கிறார் சந்தானம்.
— சினிமா பொன்னையா
கறுப்பு பூனை!
சண்டக்கோழி நடிகருடன், மண்வாசனை படத்தில் நடித்து வரும் அகர்வால் நடிகை, ஒட்டி உறவாடி வருகிறார். இதனால், பல நாட்கள் அவர்கள் ஸ்பாட்டுக்கு குறித்த நேரத்தில் வராமல் எஸ்கேப்பாகி விடுவதால், அப்பட இயக்குனர் டென்ஷனாகி, 'பேக்கப்' சொல்லி, படப்பிடிப்பையே நிறுத்தி விடுகிறார். ஆனபோதும், அவர்களின், 'எஸ்கேப்' தொடர்ந்தபடி தான் உள்ளது.
ரீ-என்ட்ரியில், பிக்கப் நடிகருடன், இரண்டு படங்களில் நடித்தார் தாரா நடிகை. அந்த இரண்டுமே ஹிட்டாகியதால், 'அவர் எனக்கு ராசியான நடிகை...' என்று கருதும் பிக்கப் நடிகர், தற்போது, தான் நடிக்கும் ஒரு மெகா படத்தில், தாராவை மீண்டும் ஜோடி சேர்த்திருக்கிறார். ஆனால், மேற்படி நடிகையின் நெருக்கத்தால், நடிகருக்கு பெண் கிடைப்பது அரிதாக உள்ளதால், நடிகரின் பெற்றோர், அவர்கள் மீண்டும் ஜோடி சேருவதற்கு, எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், நடிகரின் வீடு மறுபடியும் போர்க்களமாகி உள்ளது.
வைகைப்புயல் நாயகனாக நடித்து வெளியான படம், 'பிளாப்' ஆகி விட்டது. இதனால், கொதித்துப் போன நடிகர், 'என் படத்தை பார்க்காமலேயே படம் சரியில்லை என்று விமர்சனம் எழுதுகின்றனர்; அதனால் தான் ரசிகர்கள் தியேட்டருக்கு வரவில்லை...' என்று கூறியிருக்கிறார். அத்துடன், 'ஒரு நல்ல படத்தை தவறாக விமர்சிப்பவர்கள் சைக்கோ, சேடிஸ்ட்...' என்று கூறி, ஒட்டுமொத்த மீடியாக்களின் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார்.
சினி துளிகள்!
* அனாமிகா போன்று மீண்டும் கதாநாயகியை மையப்படுத்தும் கதைகளில் நடிக்க, கதை கேட்டு வருகிறார் நயன்தாரா.
* தேங்காய் சீனிவாசன் நடித்த, காசேதான் கடவுளடா என்ற படத்தை, ரீ - மேக் செய்யும் ஆர்வத்தில் உள்ளார் வடிவேலு.
* தமிழில், ரஜினி மற்றும் அஜித்தை வைத்து படம் இயக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார் பாகுபலி இயக்குனர் ராஜமவுலி.
* 'நடிகை ஜனனி அய்யர் என் தோழி; அவருடன் எனக்கு காதல் இல்லை...' என்று தெரிவித்துள்ளார் அதர்வா.
அவ்ளோதான்!

