/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நல்வாய்ப்புக்களை இழந்து விட்டதாக தோன்றுகிறதா?
/
நல்வாய்ப்புக்களை இழந்து விட்டதாக தோன்றுகிறதா?
PUBLISHED ON : ஜூலை 12, 2015

இருக்கிற கவலைகள் போதாதென்று, 'ஸ்டாக்' கவலைகள் வேறு நம்மவர்களுக்கு சேர்ந்து கொள்கின்றன. அவ்வப்போது, பழைய நினைவுகளில் மூழ்கி, அவற்றை கண்முன் கொண்டு வந்து, பூதக் கண்ணாடி கொண்டு பார்த்து, 'ஐயோ... போச்சே...' என்று புலம்பித் தீர்ப்பர்.
ஏதாவது ஒன்றை நினைத்து அவ்வப்போது அழுது தீர்க்கும் குழந்தைக்கும், இவர்களுக்கும் என்ன வித்தியாசம்!
மனநோய் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த இரு மனநோயாளிகள், சற்று புத்தி தெளிந்து இப்படி பேசிக் கொண்டனர்...
'நீ ஏன் இங்கு வந்து சேர்ந்தே?'
'ஜகஜால ஜலஜாவை காதலிச்சேன்; அவ கிடைக்கல. அந்த ஏக்கத்திலேயே இப்படி ஆயிட்டேன்...'
'யாரு... ஜகதலப் பிரதாபன் தங்கச்சி ஜகஜால ஜலஜாவையா சொல்ற?'
'ஆமா... அவளே தான்!'
'அடப்பாவி... அவள மனைவியா அடைஞ்சதுனால தானடா நான் இப்படி ஆயிட்டேன்...'
இதைக்கேட்டதும், இரண்டாவது மனநோயாளி, பூரண குணமாகி, வீடு திரும்பினானாம்.
'வேலையை விட்டது தப்பாப் போச்சு, அந்த தொழில்ல முதலீடு செய்யாதது தப்பாப் போச்சு, அவர்கிட்ட நான் அப்படி சொன்னது தப்பாப் போச்சு, அந்த நிலம் விலைக்கு வந்த போது, இது எதுக்கு நமக்குன்னு மறுத்தது தப்பாப் போச்சு...' என்று, மனிதர்கள் பலரும் வண்டி வண்டியாய் விஷயத்தை கொட்டுகின்றனர்.
வாழ்வில் நழுவ விட்ட நல்வாய்ப்புகளை பட்டியலிட்டால், அது, தொடர்கதையாய் நீண்டு கொண்டே போகும். அதனால், கோட்டை விட்ட பூனைக்குட்டியை பற்றிய கவலையும், ஏக்கமும் ஒரு புறம் இருக்கட்டும்; தற்போது, கண் எதிரே வாய் பிளந்து நிற்கிற புலியை எதிர்கொள்ள தயாராக வேண்டும்.
நம் வாழ்விலிருந்து கிளைத்தெழுந்த கிளைகளிலிருந்து உதிர்ந்த போன இலைகளுக்காக வருந்தாமல், விழுந்த இலைகளை உரமாக்கிக் கொள்வதே புத்திசாலித்தனம்.
'அச்சொத்தை விற்றிருக்கவே கூடாது; இன்றைக்கு அது எத்தனை கோடி பெறும் தெரியுமா...' என்று புலம்புவோர்களைப் பற்றி என்ன முடிவிற்கு வருவீர்கள்?
அந்த நேரத்து நெருக்கடி, புத்தி, அவசரப்பட்ட கணிப்பு, அர்த்தமற்ற முடிவு இவையெல்லாம் சேர்ந்து உந்தித் தள்ள, தவிர்க்க முடியாமல் எடுக்கப்பட்ட முடிவைப் பற்றி இன்று வருந்தி என்ன பயன்... இந்த நினைப்பும், ஏக்கமும் எந்த வகையிலேனும் நமக்கு நன்மை செய்யுமா... பிள்ளைப்பூச்சியை எடுத்து வயிற்றில் கட்டிக் கொள்வானேன்; அப்புறம் குத்துது, குடையுது என்பானேன்!
அன்றைய சூழ்நிலையில், நம் பொருளாதார சக்திக்கு அப்பாற்பட்டது என எண்ணி, ஒரு குறிப்பிட்ட நிலத்தை, சொத்தை வேண்டாம் என்று சொல்லியிருப்போம். ஆனால், இரு ஆண்டுகளோ அல்லது 20 ஆண்டுகளோ கழித்து, அந்த இடத்திற்கு ஏற்பட்டுள்ள சிறப்பை நினைத்து, 'இது தெரிந்திருந்தால், அன்றே வாங்கிப் போட்டிருக்கலாமே...' என்று, 'உதார்' விடுகிறோம்.
செய்யத் தவறிய காரியங்களுக்காகவும், செய்ய மறந்த செயல்பாடுகளுக்காகவும், ஆற்ற மறந்த அரும்பணிகளுக்காகவும் இனி வருந்துவது இல்லை என்கிற தீர்மானத்திற்கு இனியேனும் வருவோம்.
இனியும் இத்தகைய செயல்பாடுகளில் கோட்டை விடுவது இல்லை என்கிற முடிவை எடுப்போம். இனிமேலாவது, முதல் அனுபவக் கொள்முதல்களை கோட்டை விடாமல் இருந்தால், அதுவே போதும்!
லேனா தமிழ்வாணன்

