sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 03, 2025 ,கார்த்திகை 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூலை 12, 2015

Google News

PUBLISHED ON : ஜூலை 12, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மா,

என் வயது, 26; கணவரின் வயது, 31. எங்களுக்கு திருமணம் ஆகி, இரண்டரை ஆண்டுகள் ஆகிறது. நான்கு மாத பெண் குழந்தை உண்டு. மாமியார், மாமனார் எங்களுடன் தான் உள்ளனர். என் கணவரின் தம்பியும், அவர் மனைவியும் தனிக்குடித்தனம் சென்று விட்டனர். கொழுந்தனாரின் மனைவி எல்லாரிடமும் சண்டை போடுவாள்; இருப்பினும், அவளைத் தான் என் மாமியாரும், மாமனாரும் போற்றுவர்.

எங்களிடம் அவள் பேச மாட்டாள்; என் குழந்தையை கூட தொட மாட்டாள். ஆனால், நாங்கள் அவள், மூன்று வயது பெண் குழந்தையுடன் விளையாடுவோம். எல்லாவற்றிலும் அவளுக்குத் தான் முக்கியத்துவம் தர வேண்டும் என நினைப்பாள்.

அவர்கள் காதலித்து, பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். எங்கள் திருமணம், பெரியவர்கள் பார்த்து செய்தது. என் கணவர் தான் வீட்டு கடன் கட்டுகிறார். என் வளைகாப்பு, பிரசவ செலவுகளை என் கணவர் தான் பார்த்தார். எனக்கு அம்மா இல்லை; அப்பாவுக்கும் நிரந்தர வருமானமில்லை. என் அண்ணனோ, சொத்துக்காக எங்கள் தாய் மாமாவிடம் சேர்ந்து கொண்டு, எங்களுடன் பேசுவதில்லை. அத்துடன், என் வளைகாப்பு மற்றும் பிரசவம் என்று எதற்கும் அவன் வரவில்லை.

என் அம்மாவுக்கு வரும் சொத்தில் இருந்து எடுத்துக் கொள்வதாக கூறி, என் கல்யாண செலவு, படிப்பு என, எல்லாவற்றிற்கும் சின்ன மாமா தான் செலவு செய்தார். ஆனால், அம்மா வழி சொத்துக்கு பெரியம்மா ரெண்டு பேரும், மாமா இருவரும், நாங்களும் வழக்கு தொடுத்துள்ளோம்.

என் பெரிய மாமா, மூன்று பங்கு போட்டு அதில், ஒரு பங்கு பெண்களுக்கும், இரண்டு பங்கு, இரண்டு மாமாவும் வைத்துக் கொள்ளலாம் என்று கூறுகிறார். ஏனெனில், மூன்று பெண்களுக்கு சீர் செய்ய தனியாக, 40 சென்ட் நிலத்தை எங்கள் தாத்தா, சின்ன மாமாவுக்கு கொடுக்க, அவரே அதை வைத்துக் கொண்டார்.

தற்போது, சின்ன மாமா, எங்களுக்கு செலவு செய்த பணத்தை எங்களிடம் கேட்கிறார். நானும், அப்பாவும், அப்பா வழி சொத்தை விற்று தருவதாக கூறுகிறோம். ஆனால், அப்பா வழி சொத்து எதையும் தர மாட்டேன் என, கையெழுத்து போட மறுக்கிறான் என் அண்ணன்.

என் கணவர் வீட்டிலும், நாங்கள் குடியிருக்கும் வீட்டைத் தவிர வேறு சொத்து இல்லை. இந்த சொத்து பிரச்னையால், நான், மாமாக்கள் இருவரிடமும் பேசுவதில்லை. பெரியம்மாக்கள் கூட மட்டும் தான் பேசுகிறேன். அவர்களும் சின்ன மாமாவுக்கு தான் ஆதரவாக பேசுகின்றனர்.

சின்ன மாமா ரொம்ப கண்டிப்பானவர்; அதேசமயம், என்னையும், என் அப்பாவையும் ஏளனமாக பேசுவார். பணம், படிப்பு என்று எங்களுக்கு கீழ் உள்ள மாப்பிள்ளையாக பார்த்துத் தான், 20 பவுன் போட்டு என்னை திருமணம் செய்து கொடுத்தனர்.

நான் பி.எஸ்சி., முடித்து வேலைக்கு சென்றேன். அந்த பணத்தில் தான், எம்.பி.ஏ., படித்தது மற்றும் வீட்டிற்குத் தேவையான பொருட்கள் மற்றும் இரு சக்கர வாகனம் எல்லாம் வாங்கினேன்.

இதையெல்லாம் என் கணவரிடம் சொல்லித் தான் திருமணத்திற்கு சம்மதித்தேன். ஆனால், என் கணவரோ இதெல்லாம் தெரிந்ததிலிருந்து இப்போது வரை என் கூட சண்டை போடுவதுடன், அடிக்கடி மட்டம் தட்டுகிறார். அவர் செய்த செலவுகளை எல்லாம் சொல்லிக் காட்டுவதுடன், என்னை கல்யாணம் செய்து கொண்டது தப்பு என்று அடிக்கடி சொல்கிறார்.

அவர் அம்மா முன்னாடியே என்னிடம் சண்டை போடுவார். 'நமக்குள் நடக்கும் சண்டை நாலு சுவர்களுக்குள் இருக்கட்டும்...' என்று சொன்னால், கேட்க மாட்டார். ஆடம்பரமாக இருக்கணும் என்று நினைப்பார். செலவுகளை குறைத்து சேமிக்கலாம் என்று சொன்னால், 'இதை உங்க வீட்டில் போய் சொல்...' என்று திட்டுவார்.

அவர் அம்மாவும், அவருக்குத் தான் ஆதரவாக பேசி, என்னை திட்டுவார். அவங்க சொந்தகாரங்க முன் என்னை அவமானப்படுத்துவார். ஆனால், என் சொந்தகாரங்க முன் நல்லவர் மாதிரியும், என்னை நன்றாக பார்த்துக் கொள்வது மாதிரியும் நடிப்பார். நானும், அவரிடம் தனியாக இருக்கும் போது, சண்டை போடுவேன். அப்போது மட்டும் என்னிடம் மன்னிப்பு கேட்பார். பின், மறுபடியும் சண்டை போடுவார். கல்யாணத்துக்குப் பின், நானும் வேலைக்கு சென்றேன்.

கல்யாண கடனை எல்லாம் அடைத்த பின்தான் குழந்தையே பெற்றுக் கொண்டோம். நான் வேலைக்கு போனாலும், என் சம்பளத்தை அவரிடமே கொடுத்து விடுவேன். ஆனால், அவர் அப்படி இல்லை. இருவரும் சேர்ந்து வரவு - செலவு பார்க்கலாம் என்று சொன்னால் கேட்க மாட்டார். இப்போது காரும் வாங்கி விட்டார். கார் லோனும் கட்டணும். இப்போது எனக்கு பிரச்னை என்னவென்றால், குழந்தை பிறந்தும் கூட என்னிடம் சண்டை போடுவது தான்.

என்னுடைய வலி, வேதனை எல்லாம் அவருக்கு புரியவில்லை. அவருக்காக தோன்றினால் தான் குழந்தையை கொஞ்சுவார். குழந்தையை குளிப்பாட்டுவதில் இருந்து எல்லாம் நான் தான் பார்த்துக் கொள்கிறேன். அதனால், தனிக்குடித்தனம் செல்லலாம் என்று சொன்னால், என் கணவருக்கு இதில் உடன்பாடு இல்லை. இவர்களை திருத்த நான் என்ன செய்ய வேண்டும். எனக்கு ஒரு நல்ல முடிவை கூறுங்கள்.

இப்படிக்கு,

உங்கள் மகள்.


அன்புள்ள மகளுக்கு,

புகுந்த வீட்டில், உன்னை விட உன் கொழுந்தன் மனைவிக்கு மரியாதை அதிகம் என எழுதியிருந்தாய். சில பெண்கள் புகுந்த வீட்டிற்குள் பிரவேசிக்கும்போது கூனி, குறுகி அடிமை உடல் மொழியுடன் பிரவேசிப்பர். அவர்கள் ஆயுளுக்கும் புகுந்த வீட்டில் அடிமை தான். சில பெண்கள் புகுந்த வீட்டிற்குள் இந்திரா, ஜெயலலிதா தோரணையில் பிரவேசிப்பர். ஆயுளுக்கும் அவர்கள் ராஜ்ஜியம் தான் கொடி கட்டி பறக்கும். தவறான வழியில் செல்லும் பெண்களுக்கும் முகராசி தேவை என, ஒரு கிராமத்து சொலவடை உண்டு. புகுந்த வீட்டிற்குள் செல்லும் மருமகளுக்கும் மதிக்கப்பட ஒரு முகராசி தேவை.

கோவணத் துணி போல் கொஞ்சூண்டு இடம் இருந்தாலும், அதில் பங்கு கேட்டு, 10 பேர் சண்டையிடுவர். இது, எல்லா குடும்பங்களிலும் நடப்பது தான். அதேபோன்று, மனைவி வீட்டில் நடக்கும் கூச்சல், குழப்பங்களை எந்த கணவனும் சொல்லிக் காட்டவே செய்வான். இதை எல்லாம் பெரிதுபடுத்தாதே!

உன் அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க தனிக்குடித்தனம் போவதே சிறந்த வழி என்று கருதுகிறாய். தனிக்குடித்தனத்தில் உன் பொறுப்புகள் அதிகமாகும். தன் சொந்தபந்தங்களிடம் உன்னைப் பற்றி எப்போதும் குறை பேசும் உன் கணவன், தனிக்குடித்தனத்திற்கு பின், அதிகம் குறை பேசுவான். திருமண பந்தம் மீறிய உறவுகளுக்கு முயற்சிப்பான். கார் லோன் வாங்கி ஈ.எம்.ஐ.,யை உன் மீது சுமத்திய உன் கணவன், மேலும் ஆடம்பர வாழ்வு வாழ கடன் வாங்கி, உன் தலை மீது சுமத்துவான். மொத்தத்தில் உன் கணவனின் அட்டூழியங்கள் அதிகரிக்கும்.

உன் குடும்பத்து சொத்து வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து தீர்ப்பு வரட்டும்; அதுவரை காத்திருக்கலாம் அல்லது நீதிமன்றத்திற்கு வெளியே சமரசம் செய்ய முடிந்தால் சமரசம் செய்து கொள்ளுங்கள். இதனால், பிரச்னைக்கு உடனடி நிரந்தர தீர்வு கிடைக்கும். உறவுகளுக்கிடையே புதைந்த பகை விலகி, அன்பு மலரும். சமரசத்தில் லாபம் அடைவது உன் பெரியம்மாக்களும், தாய்மாமன்களும் தானே!

உன் படிப்பை, கல்யாண செலவை கவனித்துக் கொண்ட மாமாவுக்கு கொஞ்சம் விட்டுக் கொடுப்பதில், என்ன கெட்டுப் போய்விடும்?

நீ யாரையும் மாற்ற முயற்சிக்காதே. உன்னிடம் ஏதேனும் குறைகள் இருந்தால், அவற்றை திருத்திக் கொள்.

கொசுக்கு பயந்து, கோட்டையை விட்டு யாரும் போவரா... பிரச்னைகளுக்கு பயந்து நீயும், உன் குழந்தையும் தனியே சென்று பிழைத்துக் கொள்கிறோம் என்பது மகா அபத்தம். கணவன் என்பவன் வாழ்க்கைக்கு அவசியமான சாத்தான். அச்சாத்தானிடம் பேசிப் பேசி, தனக்கேற்றவாறு வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.

உனக்கு சகிப்பு தன்மையும், பொறுமையும் தேவை. சுயபச்சாதாபம் தவிர்த்தல் நலம். தனிக்குடித்தனம் யோசனையை மூன்று ஆண்டுகளுக்கு தள்ளிப் போடு. அப்போதும் புகுந்த வீட்டுச்சூழல் மாறாவிட்டால், தனிக்குடித்தனம் பற்றி யோசி. கணவனின் மீதான ஆவலாதிகள் தீர, கணவனிடம் மனம் விட்டு பேசு. புகுந்த வீட்டு சொந்த பந்தங்களுடன் தகவல் தொடர்பை புதுப்பிக்க பார்.

எல்லா பிரச்னைகளுக்கும் தீர்வு நம்மிடமே உள்ளது. நாம் தான் மதி யூகத்துடன் செயல்பட்டு, பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும்.

போர்க்களத்தில் ஒப்பாரி எதற்கு? எதிரி என்ன ஆயுதம் வைத்திருக்கிறானோ, அதே ஆயுதத்தை எடுத்து நாமும் போரிட வேண்டும்.

தொடர் முயற்சிகள் உனக்கு வெற்றியைப் பரிசளிக்கும்.

என்றென்றும் தாய்மையுடன்

சகுந்தலா கோபிநாத்.







      Dinamalar
      Follow us